நிகுஸ்தான் (Nehushtan)

அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான், அந்நாட்கள்மட்டும்  இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள், அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான் (2 இராஜா. 18:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hhPbaQKPYXk

நிகுஸ்தான் என்ற வார்த்தைக்குப் பித்தளை துண்டு என்பது பொருள்.  இந்த வார்த்தையானது வேதத்தில் இந்த ஒரு இடத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கிப் பிரயாணப்பட்டு வந்த வேளையில்   நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் காணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு இடங்களாகச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த போது வழியின் நிமித்தம்  மனமடிவாகிச் சோர்ந்து போனார்கள். அப்போது அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து, இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, அற்பமான உணவாகிய மன்னா மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்று  கூறி முறுமுறுத்தார்கள்.   கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்குப்படிக்குக் கொள்ளிவாய் சர்ப்பங்களை அவர்களுக்குள் அனுப்பினார். அவைகள் அவர்களைக் கடித்ததினால் அனேகர் மரித்துப் போனார்கள். உடனே எப்பொழுதும் போல ஜனங்கள் மோசேயை நோக்கி நாங்கள் கர்த்தருக்கு விரோதமாகவும் உமக்கு விரோதமாகவும் பாவம் செய்தோம், எங்களுக்காகக் கர்த்தரை நோக்கி விண்ணப்பண்ணும் என்றார்கள். மோசே வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவனை நோக்கி, நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன்   அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். மோசே அவ்வாறு செய்தான், ஜனங்கள் அதை நோக்கிப் பார்த்துப்  பிழைத்துக் கொண்டார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் வெண்கல சர்ப்பத்தைத் தங்களோடு கொண்டுவந்து, சுமார் எண்ணூறு வருடங்களுக்குப் பின்பும் அதற்குத் தூபம் காட்டுகிறவர்களாய் காணப்பட்டார்கள். அதைக் கண்ட எசேக்கியா ராஜா வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டு அதற்கு நிகுஸ்தான் என்ற பெயரைப் போட்டான். வெண்கலச்  சர்ப்பமானது தெய்வமல்ல, அது வெறும் பித்தளைத் துண்டுதான் என்பதை ஜனங்களுக்கு கற்றுக் கொடுக்கும் படிக்கு  அப்படிப்பட்ட பெயரை அதற்குப் போட்டான். இந்நாட்களிலும் பொய்யான, ஜீவனில்லாத கவர்ச்சிகரமான உருவங்கள் அனேகரை கவர்சித்து, அவர்களுடைய தெய்வங்களாய் காணப்படுகிறது. தேவன்  கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதைக்  கம்பத்தின்மேல் தூக்கிவைக்கும் படிக்குச் சொன்னது பின்னாட்களில்  தன்னுடைய குமாரனாகிய இயேசு ஜனங்களுடைய பாவங்களுக்காக ஒரு சபிக்கப்பட்ட நபராய் கல்வாரிச் சிலுவையில் உயர்த்தப்படவேண்டும் என்பதற்காகவே ஒழிய ஆராதிக்கப்பட அல்ல என்பதை   அறிந்துகொள்ள வேண்டும். அதுபோல கிதியோன் பொன்னினால்   ஓர் ஏபோத்தைச்  செய்து அதைத்தன் ஊராகிய ஓப்ராவிலே வைத்தான். அதின் கவர்ச்சியைக் கண்டு இஸ்ரவேலரெல்லாரும் அதைப்பின்பற்றத் துவங்கினார்கள், அது அவர்களுக்குக் கண்ணியாய் மாறினது. ஆரோன் செய்த  பொன்கன்றுக்குட்டி கூட இஸ்ரவேலர்களை கவர்ச்சித்து, அவர்களுடைய தெய்வமாய் மாறி அனேகருடைய  அழிவிற்குக் காரணமாயிற்று.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களை கவர்ச்சிக்கிற காரியங்களைக் குறித்தும், நீங்கள் முக்கியப்படுத்துகிற அடையாளங்களைக் குறித்தும் கவனமாயிருங்கள். ஆகையால் தான் பழைய ஏற்பாட்டின் நாட்களில் கர்த்தர் பலபீடத்தைக் குறித்து கூறும் போது, எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால்  கட்டவேண்டாம், அதின்மேல் உளியிட்டவுடனே, அதை  அசுசிப்படுத்துவாய் என்று யாத். 20:25ல் கர்த்தர் கூறினார். உளியிட்டு, அழகு படுத்தும் போது, பலிபீடத்தை முக்கியப்படுத்தி, அதின் அழகினால்  கவர்ச்சிக்கப்பட்டு ஆத்துமாவை அசுசிப்படுத்தி,  ஆராதிக்கப்படவேண்டிய தேவனை மறந்துவிடுவார்கள் என்பதற்காய்க் கூட கர்த்தர் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆண்டவரை விட்டு உங்களைப் பிரிக்கிற எல்லாக் காரியங்களையும், உறவுகளையும் முறித்துப் போடுங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, பிழைக்கச்செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org