ஜெபத்திற்கு எவ்வளவு நாளில் பதில்கிடைக்கும் ?( How many days will it take for prayers to be answered?)

லுக் 18:7,8 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/d8G9tL0W0Sk

என்னுடைய ஜெபத்திற்கு பதில் எப்பொழுது வரும் என்ற கேள்வி அநேகருக்கு இருக்கிறது. நெகேமியாவின் ஜெபத்திற்கு பதில் கிடைக்க சுமார் நான்கு மாதங்கள் ஆனது. நெகே 1:1ல் இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது யூதர்களுடைய செய்தியையும் எருசலேமின் செய்தியையும் கேட்டு உபவாசத்தோடு ஜெபம் செய்தேன் என்று கூறுகிறான். நெகே 2:1ல் அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, ராஜா மூலம் அவன் ஜெபத்திற்கு பதில் வருகிறது. கிஸ்லேயு என்பது யூத நாட்காட்டியில் ஒன்பதாம் மாதம். நிசான் என்பது யூத நாட்காட்டியில் முதல் மாதம். ஆக, அவர் ஏறெடுத்து ஜெபத்திற்கு பதில் கிடைக்க சுமார் நான்கு மாதங்கள் ஆனது.

எலியேசர் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறான். இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான் (ஆதி 24:13,14). அவன் ஜெபம் செய்து முடித்தவுடன் அடுத்த விநாடியிலேயே அதாவது உடனே அவனுக்கு பதில் கிடைத்தது.

தானியேலின் ஜெபத்திற்கு ஜெபம் துவங்கும்போதே பதில் வந்தது. அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான் என்று தானி 9 :21 கூறுகிறது. எஸ்றாவின் ஜெபத்திற்கு பதில் கிடைக்க சுமார் 12 நாட்கள் ஆனது என்று எஸ்றா 7 :9, 8:21,23,31 போன்ற வசனங்களை ஒப்பிட்டு பார்த்தால் அறிந்துகொள்ளலாம். எஸ்தரின் ஜெபத்திற்கு அதே நாளிலும் அதற்கு மறு நாளிலும் பதில் கிடைத்தது.

இப்படி தேவனுடைய சித்தத்தின் மையத்தில் ஜெபித்த அத்தனைபேரும், நாட்கள் வேறுபட்டாலும் பதிலை பெற்றுக்கொண்டார்கள். அதுபோல நீங்களும் உங்கள் ஜெபத்திற்கு பதிலை பெற்றுகொள்ளுவீர்கள். காரணம் நம்முடைய கர்த்தர் நம் ஜெபத்தை கேட்கிறவர். அரசாங்கத்தில் மனு எழுதிப்போடும்போது குறிப்பிட்ட நாளில் பதில் வரும் என்று சொல்லுவார்கள். அதுபோல, உங்கள் விண்ணப்பத்திற்கு தேவன் குறித்த நாளில் சரியாக பதில் தருவார். தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களுக்கு சீக்கிரமாய் நியாயம் செய்வார். உங்கள் ஜெபங்களுக்கு கூடிய விரைவில் பதில் கிடைக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org