எந்நக்கோரி (En-Hakkore)

நியா 15:19. அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FtQiIgHVw8w

நியாயாதிபதிகள் புஸ்தகத்தில் அநேக நியாயாதிபதிகளை கர்த்தர் இக்கட்டு காலத்தில் எழுப்பினார். ஆனால் சிம்சோன் மாத்திரமே அவனது பிறப்பிற்கு முன்பே இஸ்ரவேலை இரட்சிக்கும்படி தெரிந்துள்ளபட்டவன். அணைத்து நியாயாதிபதிகளிலும் சிம்சோன் மாத்திரமே நசரேயன். நியாயாதிபதிகள் புஸ்தகத்தில் சுமார் ஏழு முறை கர்த்தருடைய ஆவியானவர் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவற்றில் நான்கு இடங்களில் சிம்சோனை குறித்து சொல்லப்பட்ட சம்பவங்களில் எழுதப்பட்டுள்ளது. இப்படி சிம்சோன் கர்த்தருடைய ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தான்.

ஒவ்வொரு ஜெயத்திற்கு பிறகும் சில சோதனைகள் வருவதை வேதாகமத்தில் பார்க்கலாம். இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை தாண்டி வந்தார்கள். அப்பொழுது மிரியாம் போன்றோர்கள் பாடல்களை பாடி கொண்டாடினார்கள். அதற்கு அடுத்தபடியாகவே அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அதுபோல எலியாவை பாருங்கள். வானத்திலிருந்து அக்கினியை வருவித்தவன். அதன்பிறகாக யேசபேலுக்கு பயந்து சூரைச்செடியின் கீழ் படுத்துகொண்டான். அதுபோலத்தான் சிம்சோனும் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்தவன். பெலிஸ்தியர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவன்; அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணினவன். ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பை எடுத்து ஆயிரம் பேரை கொன்றுபோட்டவன். இந்த வெற்றிக்குப்பிறகு வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் வறண்டுபோயிருந்தான். தன்னுடைய ஜீவன் போகும் அளவிற்கு தண்ணீர் கிடையாமல் தவித்தான். அவ்வேளையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்.மோசே கன்மலையை அடித்தபோது தேவன் தண்ணீரை கொடுத்தார். அதுபோல சிம்சோனுக்கும் தாகம் தீர்க்கும் தண்ணீரை கொடுத்தார். அந்த தண்ணீர் பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது. இந்த நிகழ்வை ஆவிக்குரிய தாகத்தில் இருப்பவர்களுக்கு ஜீவ தண்ணீரை (யோ 4:10) கொடுக்கும் கிறிஸ்துவின் ஒரு மாதிரியாகக் காணலாம். சாத்தியமற்றதாக தோன்றும் சூழ்நிலைகளில் ஆண்டவர் தனது மக்களுக்கு தண்ணீரை கொடுப்பது அவருடைய வல்லமையை குறிக்கிறது. சாத்தியமற்ற சூழ்நிலையில் உங்களுக்கு உதவவே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

சிம்சோன் தண்ணீரை குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான். ஜீவத்தண்ணீரை குடிப்பவர்களுக்கு தான் என்றென்றும் வாழ்வு. ஆண்டவர் தனக்கு தாகம் தீர்த்த இடத்திற்கு, எந்நக்கோரி என்று சிம்சோன் பேரிட்டான். எந்நக்கோரி என்பது பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது. அவர் தான் தாகம் தீர்க்கும் தண்ணீராக இன்று உங்கள் வாழ்க்கையில் இருக்கிறார். ஆவிக்குரிய தாகம் உங்களுக்கு இருக்கிறதா? பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகம் காணப்படுகிறதா? அந்நியபாஷையில் பேசி ஆண்டவரை மகிமை படுத்த உங்கள் உள்ளம் தாகத்தோடு வாஞ்சிக்கிறதா? ஆவிக்குரிய வரங்களை அப்பியாசப்படுத்த உங்கள் உள்ளம் தாகத்தோடு துடிக்கிறதா? ஆவிக்குரிய கனி உங்கள் வாழ்க்கையில் செயல்பட வேண்டுமென்று தாகம் கொண்டவர்களாக இருக்கிறீர்களா? அப்படியென்றால், எந்நக்கோரி, பரிசுத்த ஆவியானவர் உங்கள் எல்லா தாகங்களையும் தீர்ப்பார். நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் உயிரடைவீர்கள். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு பரிசுத்த ஆவியானவர் உங்களை அபிஷேகம் செய்து வல்லமையாக பயன்படுத்துவார். உங்கள் தாகங்களையெல்லாம் அவர் தீர்ப்பார். எந்நக்கோரி உங்களோடு காணப்படுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org