அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டுகிறேன் (I pray that they all may be One)

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர்  என்னிலேயும் நான் உம்மிலேயும்  இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவான் 17:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OgcGhA2XUFc

இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்காகவும், அவர்கள் மூலம் தன்னை விசுவாசிக்கிற எல்லாருக்காகவும் ஏறெடுத்த நீளமான, ஆசாரிய ஜெபமாய் யோவான் 17வது அதிகாரம் காணப்படுகிறது. பிதாவும், குமாரனும், பரிசுத்தாவியானவரும் ஒன்றாயிருப்பது போல, அவரை பின்பற்றுகிறவர்களாகிய நாமும் ஒன்றாய் காணப்பட வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். ஆதி சபையின் நாட்களில்  ஒருமனமும்  ஒற்றுமையும் அதிகமாய் காணப்பட்டது. மேல் வீட்டறையில்  நூற்றிருபது பேர் ஒருமனதோடு கூடிவந்தார்கள். பேதுரு எழும்பி நின்று பிரசங்கிக்கத் துவங்கியவுடன் அவனுடன் மற்ற பதினொரு அப்போஸ்தலர்களும் எழும்பி நின்று ஐக்கியத்தை வெளிப்படுத்தினார்கள். ஆகையால் ஆவியானவரின் கிரியைகள் அதிகமாய் ஆதி சபையின் நாட்களில் காணப்பட்டது. அவர்கள் கூடிவந்து ஜெபித்த வேளையில் அந்த இடம் அசைந்தது.  பேதுரு சிறைச்சாலையில் காணப்பட்ட வேளையில் சபைக்கூடி ஜெபித்தது, உடனடியாக விடுதலை உண்டானது. கடைசிக் காலச் சபைகளில் ஒருமனமும், ஐக்கியமும் குறைந்து கொண்டு வருவதின் நிமித்தம் ஆவியானவரின் கிரியைகளை அதிகமாய் பார்க்கமுடியவில்லை. 

கர்த்தருடைய ஜனங்கள் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும். நமக்குள்ளாக மூன்று விதமான மனுஷ சுபாவங்கள் காணப்படுகிறது. முதலாவது ஜென்மச் சுபாவத்தின் மனுஷன், அவன்  தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான், அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும், அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவையானதால், அவைகளை அறியவுமாட்டான் என்று 1 கொரி. 2:14ல் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் எதிர்த்து நிற்கிறவர்களாகவும், பிரிந்து போகிறவர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள் தேவ மகிமையை விரும்புவதற்குப் பதிலாக சுய மகிமையை அதிகமாய் விரும்புவார்கள். நீங்கள் இயேசுவின் விருப்பத்தின்படி, ஒருமைப்பாட்டில் தேறினவர்களாய் காணப்பட வேண்டுமென்றால் இப்படிப்பட்ட சுபாவமுடையவர்களாய் காணப்படலாகாது. இரண்டாவது கூட்டம் மாம்சத்திற்குரியவர்கள், இவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் குழந்தைகளாகவும், பெலனில்லாதவர்களாகவும், பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உடையவர்களாகவும்,  மனுச மார்க்கமாய் நடக்கிறவர்களாகவும் காணப்படுவார்கள்  என்று 1 கொரி. 3:1-3 கூறுகிறது. சபையில்தான் காணப்படுவார்கள், ஆனால் அவர்கள் சுபாவம் இப்படிப்பட்டதாய் காணப்படும். இவர்களால் ஒருமனதையும் ஐக்கியத்தையும் காத்துக்கொள்ளுவது என்பது இயலாத காரியம். மூன்றாவது, ஆவிக்குரியவர்கள், இவர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறவர்கள் என்று 1 கொரி. 2:15 கூறுகிறது. எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கிறவர்களாகவும், நன்மையையும் தீமையையும் வகையறுக்கிறவர்களாய் காணப்படுவார்கள். ஆவியின்  நிறைவைப் பெற்றவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் காணப்படுவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் ஆவிக்குரியவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நாம் ஒன்றாய் காணப்படும் போது, சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிற இடத்தில் கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae