தளர்ந்த கைகள், தள்ளாடுகிற முழங்கால்கள் (Weak hands and feeble knees).

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள் (ஏசாயா 35:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OR_GLbS60hI

இயேசுவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் தளர்ந்த கைகளை உடையவர்களைத் திடப்படுத்துகிறவராகவும், தள்ளாடுகிற முழங்கால்களை உடையவர்களைப் பலப்படுத்துகிறவர்களாகவும் காணப்பட வேண்டும். அவர் நெரிந்த நாணலை முறியாதவர்,  மங்கியெரிகிற திரியை அணைக்காதவர். நம்மைச் சுற்றிலும் துக்கத்தோடும் பாரத்தோடும் உடைந்து போன மனநிலையில் அனேகர் காணப்படுவார்கள். அவர்களை உங்கள் வாயின் வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் கட்டுகிறவர்களாய் காணப்படுங்கள். பயப்படுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள், தைரியமாயிருங்கள், இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார் என்றும் அவர் வந்து உங்களை விடுதலையாக்குவார் என்று சொல்லி உற்சாகப்படுத்துங்கள். 

யோபுவைக் குறித்து அவன் நண்பனாகிய எலிப்பாஸ் கூறும் போது, நீர் அநேகருக்குப் புத்தி சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.  விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர் என்று யோபு 4:3,4ல் கூறினான். ஆகையால்தான் யோபு பலபாடுகளின் பாதைகளில் கடந்து சென்றாலும், அவனுடைய நற்கிரியைகளைக் கர்த்தர்  சுமுத்திரையான தராசில் நிறுத்துப் பார்த்து அவனை உத்தமன் என்று கண்டு,   இரட்டிப்பாய் ஆசீர்வதித்து உயர்த்தினார். தாவீது ராஜாவாய் உயர்த்தப்பட்ட பின்பு யோனத்தானின்  நிமித்தம் என்னால் தயவு பெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று கேட்ட வேளையில்,  யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான மேவிபோசேத் என்ற ஒரு குமாரன் இருக்கிறான் என்று சவுலின் வேலைக்காரன் சீபா கூறினான். அப்போது தாவீது அவனை அழைத்தனுப்பி, அவன் வந்தவுடன் உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் நிலங்களை உனக்கு ஒப்புக்கொடுப்பேன் என்றும், நீ நித்தம் என் பந்தியில் சாப்பிடுவாய் என்றான். உடனே மேவிபோசேத், செத்த நாயைப்போல இருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்று கூறினான். தாவீது தளர்ந்த நிலையில் காணப்பட்ட மேவிபோசேத்திற்கு  ஆதரவாய் காணப்பட்டான். ஆகையால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாய், மேன்மேலும் பலப்படுகிறவனாய் காணப்பட்டான். மோவாபிய ஸ்திரீயாகிய ரூத் தன் புருஷனை இழந்த நிலையில், தன் தேசத்தையும் குடும்பத்தையும் விட்டு,  தன் மாமியாகிய நகோமியோடு கூட பெத்லெகேமிற்கு வந்தாள்.  இளைப்படைந்து களைத்துப் போன நிலையில் காணப்பட்ட அவளுக்கு போவாசின் கண்களில் தயை கிடைத்தது. அவள், என் ஆண்டவனே, நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள். ஆகையால் அவன் எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து,  பெத்லகேமிலே புகழ்பெற்றிருந்தான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் உங்களைச் சுற்றிக் காணப்படுகிற ஜனங்களை ஆற்றுகிறவர்களாகவும், தேற்றுகிறவர்களாகவும் காணப்படுங்கள். உங்கள் ஆறுதலான வார்த்தைகள் இருதயம் நொறுங்குண்டவர்களின்  காயங்களைக் கட்டட்டும். அப்போது சிறுமைப் பட்டவர்கள் மேல் சிந்தையுள்ள உங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்து பாக்கியவான்களாய் பாக்கியவதிகளாய் மாற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae