இயேசுவே வாசல் (Jesus is the door)

யோவா 10:7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/AD4ojo-LBok

இயேசுவின் உதடுகளிலிருந்து நேரடியாக பல வார்த்தைகள் வந்தது. இவற்றில் ஒன்றான மெய்யாகவே மெய்யாகவே என்ற வார்த்தை, யோவான் சுவிசேஷத்தில் மாத்திரம் சுமார் 25 முறை வருகிறது. இதை குறிப்பிட்டு எழுதியவன் இயேசுவின் சீஷர்களில், இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும், மார்பில் சாய்ந்தவனுமாய் இருந்தவனும், அவரது இருதய துடிப்பை அறிந்த யோவானே, இதை குறிப்பிட்டு எழுதினான். யோவான் இயேசுவுக்கு அன்பாய் இருந்தான் என்று பல வசனங்கள் நிரூபிக்கிறது.

யோவா 13:23 கூறுகிறது, அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் (யோவான்) இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் என்பதாக. யோவா 19 :26 கூறுகிறது, அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் (யோவான்) கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார் என்பதாக. யோவா 20:2 கூறுகிறது, உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் (யோவான்) போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். யோவா 21:7 கூறுகிறது, ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் (யோவான்)பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். யோவா 21:20 கூறுகிறது, பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும் (யோவான்), இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான், என்று பல வசனங்கள் யோவான் இயேசுவுக்கு அன்பாய் இருந்தவன் என்று கூறுகிறது.

அப்படி யோவான் குறிப்பிட்டு எழுதிய சத்தியத்தில் ஒன்று தான், நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறிய வார்த்தை. இயேசு தான் நமக்கு வாசல். இயேசு கூறினார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்பதாக. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப் 4 :12 கூறுகிறது. ஜீவனுக்கு போகிற வாசல் இயேசு மாத்திரமே. ஒருவரும் இயேசுவல்லாமல் பிதாவினிடத்திற்கு கடந்து செல்ல முடியாது. ஒரு அரசியல் தலைவரை சந்திக்க கீழிருக்கும் பொறுப்புகளில் உள்ளவர்களை அணுகினால் மாத்திரமே அவர்களை சந்திக்கமுடியும். அதுபோல பிதாவை சந்திக்க இயேசு படிநிலை (Hierachy) அல்ல; மாறாக அவரே வழி, அவரே வாசல். வாசலை தாண்டி தான் வீட்டிற்குள் கடந்து செல்லமுடியும். இயேசுவை தாண்டி தான் பிதாவை பார்க்கமுடியும். சிலுவையில் இயேசுவின் மாம்சம் கிழிக்கப்பட்டது. அவருடைய மாம்சத்தின் திரை வழியாகவே நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு கடந்து செல்ல முடியும். அதுபோல அவரே பரலோக இராஜ்யத்திற்கும், பிதாவை கிட்டி சேரவும் வாசலாக இருக்கிறார். இதை உணர்ந்து நாம் அனுதினமும் வாசலாக இருக்கும் கிறிஸ்துவை அண்டி சேருவோம். ஒவ்வொருநாளும் இயேசுவின் பிரசன்னத்தில் நிறைந்து வாழுவோம். அப்பொழுது அவர் மூலமாய் நாம் பிதாவை பார்க்கமுடியும். காரணம் இயேசுவை கண்டவன் பிதாவை காண்கிறான்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org