பெலனே துதி ! துதியே பெலன் ! (Strength is Praise ! Praise is Strength !)

சங் 8:2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YgdTS070iO4

மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு தாவீதின் குமாரனாம் இயேசு கிறிஸ்து விளக்கம் அளித்துள்ளார். மத் 21:16ல் இயேசு கூறினார், குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார். குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர் என்று தாவீது பாடினான். அந்த பெலன் தான் துதி என்று இயேசு விளக்கம் அளிக்கிறார். பகைஞனையும் பழிகாரனையும் சாத்தானின் சகலவிதமான சேனைகளையும், அடக்கிப்போட தேவன் குழந்தைகளின் வாயில் துதியாகிய பெலனை உண்டு பண்ணுகிறார். யார் யாரெல்லாம் துதிக்கிறார்களோ, அவர்களுக்குள்ளாக தேவ பெலன் வருகிறது. அந்த தேவ பெலன் தான் சத்துருவின் கோட்டையை தகர்க்கிறது. தேவனையுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க குழந்தையை போல சுபாவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு கூறினார்.ஒரு குழந்தை யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், கூச்சப்படாமல் தேவனை துதிக்கும். இன்று பல வருஷமாக சபைக்கு வரும் பெரியவர்கள் கரங்களை தட்டி பாடி துதிக்க முடிவதில்லை, கரங்களை உயர்த்தி துதிக்க முடிவதில்லை. பின்பு எப்படி தங்கள் வாழ்க்கையிலிருக்கும் பகைஞனை அடக்கிப்போட முடியும். உங்கள் வாயில் துதி இருக்குமென்றால், சத்துரு தன்னுடைய வாயை பொத்திக்கொண்டு போய்விடுவான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வாகனம் ஓட்டும் உரிமை, License வாங்க சில விதிமுறைகள் காணப்படுகிறது. அந்த விதிமுறைகளை பின்பற்றினால் தான் License கிடைக்கும். வாகனம் ஓட்டும் போதும் நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும். போக்குவரத்து சந்திப்பில் அதாவது Traffic Junctionல் சிவப்பு விளக்கு எரியும்போது எந்த வாகனமும் பயணிக்க கூடாது. அப்படி பயணித்தால் விபத்தோ அல்லது அபாரதமோ பரிசாக கிடைக்கும். பச்சை விளக்கு எரியும்போது தான் பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை. அதுபோல தான், பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட தேவன் ஒரு விதிமுறையை வைத்திருக்கிறார். அந்த விதியை பின்பற்றினால் தான் நாம் பகைஞனை அடக்கிப்போட முடியும். அந்த விதிமுறைதான் துதி என்னும் ஆயுதம். உங்கள் வாயில் துதி எழும்பினால், தேவ பெலன் உங்களை ஆக்கிரமிக்கும். உங்களுக்குள் அசாதாரணமான பெலன் உண்டாகும். அந்த அசாதாரணமான பெலன் தான் சாத்தானின் கோட்டைகளை தகர்க்கும்.

சத்துரு உங்களை பரியாசம் செய்கிறானா? சத்துரு இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்குகிறானா? சாத்தான் பயமுறுத்தும் வார்த்தைகளால் உங்களை பதட்டப்படுத்துகிறானா ? அப்படியென்றால், உடனே உங்கள் வாயிலிருக்கும் தேவ பெலனை அவிழ்த்துவிடுங்கள். சத்துரு வீழும்வரை, உங்கள் துதியை நிறுத்தாதீர்கள். இதுதான் சாத்தானை மேற்கொள்ளும் வெற்றியின் இரகசியம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org