இயேசு திரளான ஜனங்களுக்காகக் கரிசனை கொண்டிருந்தார் (Jesus Was Concerned for the Multitude)

மத் 15:32. பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1nLhKbDWVs8

இயேசுவுக்கு இருந்த அக்கறையைப் பாருங்கள். இந்த ஜனங்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. இப்போது அவர்கள் திரும்பி நடந்தால், அவர்களில் சிலர் வழியில் மயங்கி விழுவார்கள். ஒருவேளை பலசாலிகள் திடகார்த்தமான நபர்கள் வீட்டிற்குச் செல்லலாம், ஆனால் சிலர் வழியில் மயங்கி விழுவார்கள் என்று கருதினார். இயேசு அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடக்க விரும்பவில்லை. எனவே அவர், நாம் அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்றார். எவ்வளவு கரிசனையுள்ள ஆண்டவர் பாருங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பட்டினியாகவும் பசியிலும் இருக்கும்படி இயேசு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.

சீஷர்கள் அவரை நோக்கி, இவ்வளவு திரளான ஜனங்களை திருப்திப்படுத்த எவ்வளவு ரொட்டிகள் அல்லது சப்பாத்தி வேன்றுமென்று கணக்குப்போட்டு பார்த்தால் தலை சுற்றிவிடும். நாலாயிரம் புருஷர்கள், ஸ்த்ரீகள் மற்றும் பிள்ளைகள் அங்கே இருந்தார்கள். மொத்தம் சுமார் 7000 பேராவது குறைந்தது இருந்திருப்பார்கள். ஒருவர் மூன்று சப்பாத்தி சாப்பிட்டாலும் சுமார் 21000 சப்பாத்தி தேவைப்படும். இவைகளை எங்கே பெற முடியும்? என்று சீஷர்கள் கேட்டார்கள். இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.

இயேசு ஏழு அப்பங்களையும் மீனையும் எடுத்து முதலாவது தேவனுக்கு நன்றி செலுத்தினார். இது இயேசுவின் பழக்கம். சாப்பிடுவதற்கு முன்பு அவர் எப்போதும் நன்றி செலுத்தினார். பிதாவே, நான் எதற்கும் தகுதியற்றவன், ஆனால் நீர் எனக்கு உணவு கொடுத்தீர். மிக்க நன்றி என்று சொல்லும் பழக்கம் நம் ஒவ்வொருவருக்கும் காணப்படவேண்டும். இது வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான பழக்கம். அவர் நன்றி செலுத்தி, அப்பத்தைப் பிட்டு, சீஷர்களுக்கு கொடுக்கத் தொடங்கினார். சீஷர்கள் அதை ஜனங்களுக்குக் கொடுத்தார்கள், அவர்கள் அனைவரும் சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள். உங்களையும் இயேசு போஷித்து திருப்தியாய் நடத்துவார். இயேசு ஒருவர் மாத்திரமே வாழ்க்கையில் திருப்தியை கொடுக்க முடியும். உங்கள் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் திருப்தியாய் ஓடி முடிக்கும்படி கர்த்தர் செய்வார்.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒரு மாநாட்டில் அதாவது ஒரு சுவிசேஷ கூட்டத்தில் மூன்று நாட்கள் சாப்பிடாமல் கழித்த முழுக்கூட்டத்தையும் நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?. அவர்கள் பசியாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் புகார் செய்யவில்லை, ஒருபோதும் சாப்பாட்டிற்காக முறுமுறுக்கவில்லை. ஏழாயிரம் பேரும் காலை, நண்பகல் மற்றும் மாலை மூன்று நாட்கள் இயேசுவுடன் அவரது வார்த்தையை கேட்டுக்கொண்டிருந்தார்கள். மாலையில் அவர்கள் மலையடிவாரத்தில் தூங்கி கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் இதைச் செய்தார்கள். அவர்கள் அங்கேயே தூங்கினார்கள், மறுநாள் விழித்தார்கள், மீண்டும் அதையே செய்தார்கள். அது மூன்று நாள் சுவிசேஷ மாநாடு, யாரும் முறுமுறுக்காத மாநாடு. அப்படிப்பட்ட திரளான ஜனங்களை பார்த்துதான் இயேசு கரிசனை கொண்டார். இந்த ஜனங்கள் பசியினால் போகக்கூடாது என்றெண்ணி, அவர்களை போஷித்து திருப்தியாய் அனுப்பினார். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் முறுமுறுக்காமல் இருப்பீர்களென்றால், அவர் உங்கள் மீது கரிசனை கொண்டு உங்களை திருப்தியாய் நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org