என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கவேண்டும் (There must be food in My house)

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித்  தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு  வாருங்கள்,  அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து,  இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை  வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல். 3:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MK7qpaCQzA4

என்னுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுவதை மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் அறியமுடிகிறது. நம்முடைய சரீரங்களுக்கு உணவுத் தேவை, ஆனால் அதைக்காட்டிலும் மேலாக நமக்குள் உள்ளான மனுஷன் ஒருவன் காணப்படுகிறான். அவனுக்கு ஆவிக்குரிய உணவு ஒவ்வொரு நாளும் தேவை. பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது, எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது என்று எழுதினான். நீங்கள் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவேண்டும் என்று எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதினான். புறம்பான மனுஷனை விட உள்ளான மனுஷன் அதிகப் பெலனுள்ளவனாகவும் நாளுக்குநாள் இன்னும் அதிகப்  பெலனுடையவனாய் மாறவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இந்நாட்களில் புறம்பான சரீரத்தைக் குறித்து அதிக கரிசனை உடையவர்களாய் காணப்படும் அளவுக்கு உள்ளான மனுஷனைக் குறித்து நாம் கரிசனைக் கொள்ளுவதில்லை.

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் என்று ஏசா. 2:2,3 கூறுகிறது. கர்த்தருடைய ஊழியக்காரர்களுடைய வாயிலிருந்து வேதம் வெளிப்பட வேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும், வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே, அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன் என்று மல்கியா 2:7 கூறுகிறது. ஆதி சபையின் நாட்களில் அப்போஸ்தலர்கள் வேதவசனத்தைப் போதிப்பதிலும் ஜெபம் பண்ணுவதிலும் இடைவிடாமல் தரித்திருந்தார்கள். நாம் ஆலயத்திற்கு வருவதன் நோக்கம் கர்த்தருடைய வழிகளை அவருடைய வேதத்தின் மூலம் கற்றுக் கொண்டு உள்ளான மனுஷனில் இன்னும்  பலப்படுவதற்காக,  என்பதைக் கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தருடைய ஆகாரமாகிய வசனம் வெளிப்படுவதற்கு ஆலயமும், ஊழியர்களும் அவசியம் தேவை. வேதத்தின்படி இரட்சிப்பு ஒன்றுமட்டும் தான் இலவசமாய் காணப்படுகிறது, அதற்குரிய கிரயத்தை கல்வாரி சிலுவையில் இயேசு ஏற்கனவே செலுத்திவிட்டார். மற்ற அனைத்திற்கும் விலை கொடுக்க வேண்டியது அவசியமாய் காணப்படுகிறது. தாவீது தேவனுக்கு பலி செலுத்துவதற்கு  அர்வனா தன்னுடைய களத்தை இலவசமாய் தருகிறேன் என்று கூறியும், தாவீது அதற்குரிய கிரயத்தைச் செலுத்தி அதைக் வாங்கி தேவனுக்கு பலிசெலுத்தி தொழுது கொண்டான். இந்நாட்களில் கிரயம் செலுத்தி கர்த்தரை தொழுதுகொள்ள வாஞ்சையுடையவர்களைக் கர்த்தருடைய கண்கள் நோக்குகிறது. ஆகையால்தான்   தசம பாகங்களையும் காணிக்கைகளையும் ஆலயத்தில்  கொண்டுவரும்படிக்குச்  கர்த்தர் கூறினார். அவனவன் விசனமாயுமல்ல,  கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.  நீங்கள் உற்சாக மனதோடு அவ்வாறு செய்யும்போது, வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தைக் கர்த்தர் வருஷிக்கபண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae