ஜெபம் என்னும் தூபம் (The incense of prayer)

தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக (யாத். 30:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ooX16sH2lk0

ஆசரிப்புக் கூடாரத்தில் மூன்று முக்கிய பகுதிகள் உண்டு. அவைகள் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்பவைகளாகும். பரிசுத்த ஸ்தலத்தில் தூபபீடத்தைச் சாட்சிப் பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு முன்பாக வைக்கப்பட வேண்டும். அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும். ஆரோன் காலையிலும் மாலையிலும்  அதன்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும். அது யூத ஜனங்களுடைய சந்ததிகளின் தலைமுறைதோறும் காட்டவேண்டிய நித்திய தூபமாய் காணப்படுகிறது. தூபம் என்பது பரிசுத்தவான்களுடைய ஜெபத்திற்கு அடையாளமாய் காணப்படுகிறது. என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு  அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது என்று சங்கீதக்காரனாகிய  தாவீது சங். 141:2ல் கூறினான். ஆசாரியனாகிய சகரியா, உள்ளே தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள் என்று லூக்கா 1:10 கூறுகிறது. அதுபோல பரலோகத்தில், நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களாகியதூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து புதுப்பாடலைப் பாடினார்கள் என்று வெளி. 5:8 கூறுகிறது. 

தூபபீடத்திலிருந்து தூபம் உயரே எழும்புவது போல, கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுடைய ஜெபங்களும் ஆண்டவருடைய சமூகத்திற்கு நேராகக் கடந்து செல்லும். கொர்நேலியுவின் ஜெபங்களும், தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் போய் எட்டினது என்று அப். 10:4 கூறுகிறது. அவைகள் தேவசமூகத்திலிருந்து  பதிலைக் கொண்டு வந்தது. அதுபோல உங்கள் ஒவ்வொருவருடைய ஜெபங்களுக்கும் கர்த்தர் பதிலை தந்து உங்களை மகிழப்பண்ணுவார்.  ஆரோன் தூபபீடத்தின் கொம்புகளில் வருஷத்திற்கு ஒருமுறை  பாவநிவாரணபலியின் இரத்தத்தைத் தெளித்து அதைப் பரிசுத்தம் பண்ணுவான். அதுபோல இயேசு கல்வாரி சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் உங்கள் இருதயங்களைக் கழுவி, செம்மையான இருதயத்திலிருந்து ஏறெடுக்கிற உங்கள் ஜெபம் கர்த்தருக்கு பிரியமாயிருந்து நிச்சயமாய் பதிலைக் கொண்டுவரும்.

சாட்சி பெட்டிக்கு முன்னிருந்து ஜெபம் என்னும் தூபம் எப்பொழுதும் எழும்புவது போல, தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக  இயேசு வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும்  உயிரோடிருக்கிறவராகையால்  அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க  வல்லவராயுமிருக்கிறார் என்று எபி. 7:25 கூறுகிறது. இயேசு நமக்காக பிதாவினிடம் எப்பொழுதும் வேண்டுதல் செய்கிறவராய் காணப்படுகிறார் என்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக்  கொடுக்கிறதாய் காணப்படுகிறது. ஆகையால் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் செய்யுங்கள். அநீதியுள்ள நியாதிபதியே நீதி செய்யும் போது, கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாக நீதி செய்து, விடுவித்து, உங்களுக்கு  அற்புதங்களைச் செய்து மகிழப்பண்ணுவது நிச்சயம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae