உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் (2 சாமு. 22:36).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/phJNUYQ_Q8w
கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின நன்றியறிதலின் பாட்டாக மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. இதை சங். 18:35லும் வாசிக்கமுடியும். தாவீதிற்கு அனேக எதிரிகள் காணப்பட்டார்கள், பெலிஸ்தியனாகிய கோலியாத் அவனுக்கு விரோதமாய் எழும்பினான், சவுல் ராஜா அவனுக்கு விரோதமாய் எழும்பினான், அவனுடைய சொந்தக் குமாரனாகிய அப்சலோம் அவனுக்கு எதிராய் எழும்பினான், மோவாபியர்கள், அம்னோனியர்கள் என்று அனேகர் தாவீதிற்கு விரோதமாய் எழும்பினார்கள். ஆனாலும் கர்த்தர் தாவீதிற்கு உதவியாய் காணப்பட்டதினால் அவர்களால் அவனை மேற்கொள்ளமுடியவில்லை. தாவீது நடக்கிற வழியைக் கர்த்தர் அகலமாக்கி, அவனுடைய வழியைச் செவ்வைப்படுத்தி, அவனுடைய பலத்த அரணாய் காணப்பட்டார். அவனுடைய கரங்களை யுத்தத்திற்கு பழக்குவித்து, அவனை பலத்தால் இடைக்கட்டி, அவனுக்கு விரோதமாக எழும்பினவர்களை அவன்கீழ் மடங்கப்பண்ணினார். ஆகையால் அவன் வர வர பலத்து, பெரியவனானான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம். உங்கள் கண்களால் காணக்கூடிய, காணக்கூடாத அனேக சத்துருக்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பலாம். ஆனால் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். உங்களுடைய பிரச்சினைகளையும், யுத்தங்களையும் கர்த்தர் தன்னுடையவை களாய் கருதுவார். மனுஷனுடைய உதவியற்ற இக்கட்டான வேளைகள் வரும் போது, கர்த்தர் உங்களுக்கு உதவியாய் வெளிப்படுவார். மோசே கூறும் போது, என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, தன்னுடைய இளைய குமாரனுக்கு எலியேசர் என்று பேரிட்டான் என்று யாத். 18:4ல் எழுதப்பட்டிருக்கிறது. அதுபோல, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் துணைநின்று பார்வோனின் ஆவிக்கும், துன்மார்க்கர்களுடைய பட்டயத்திற்கும் உங்களைத் தப்புவிப்பார்.
கர்த்தருடைய காருண்ணியமும், உதவியும் உங்களைப் பெரியவனாக்கும். மொர்தெகாயின் நாட்களில் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள், ஆகையால் மொர்தெகாய் யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. அதுபோல இம்மட்டும் உங்களுக்கு உதவிசெய்த எபனேசர் இனிமேலும் உதவி செய்து உங்களை ஜெயமாக நடத்துவார். பெலன் உள்ளவர்களுக்கும், பெலன் அற்றவர்களுக்கும் உதவி செய்வது இயேசுவுக்கு இலேசான காரியம். அவருடைய உதவியும் ஒத்தாசையும் இந்த புதிய மாதம் முழுவதும் உங்களோடும், உங்கள் வீட்டாரோடும், உங்கள் ஊழியங்களோடும் காணப்படும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

