மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது, இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான் (யோவான் 1:35,36).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Nfsqq1gpBhQ
யோவான் ஸ்நானகன் எப்போதும் ஜனங்களுக்கு இயேசுவை சுட்டிக்காட்டுகிறவனாய் காணப்பட்டான். அவன் ஒருபோதும் தன்னை முக்கியப்படுத்தவில்லை. ஒருமுறை அவன் தன்னுடைய சீஷர்களோடு காணப்பட்ட வேளையில் இயேசு நடந்துபோகிறதைக் கண்டான். உடனே அவரைச் சுட்டிக்காட்டி, இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி என்று கூறினான். அதுவரை அவனுடைய சீஷர்களாய் காணப்பட்ட அந்திரேயாவும் யோவானும் உடனே அவனை விட்டுவிட்டு இயேசுவுக்கு பின்சென்றார்கள். அவர்கள் தன்னை விட்டுப் பிரிந்து இயேசுவுக்கு பின்செல்லுவதைக் குறித்து அவன் வருத்தப்படவில்லை. இன்னொருமுறை, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள், அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். யோவான் ஸ்நானகனும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்து வந்தான், அவனுடைய சீஷர்கள் அவனைப்பார்த்து, ரபீ, உம்முடனே கூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே, அவரைக் குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். ஜனங்கள் தன்னண்டை வருவதற்கு பதிலாக இயேசு வண்டை செல்லுகிறார்கள் என்பதையறிந்தும், யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறி, அதைக்குறித்துச் சந்தோஷப்பட்டு அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்றான். ஜனங்கள் எல்லாரும் இவன் தான் மேசியாவோ என்று கருதிக்கொண்டிருந்த வேளையில் யோவான் ஸ்நானகன் கூறினான், எனக்குப் பின் இன்னொருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன் என்று கூறி இயேசுவை உயர்த்தினான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஊழியர்களே, எப்பொழுதும் இயேசுவை ஜனங்களுக்கு முன்பாக சுட்டிக்காட்டுங்கள். அவரை நோக்கிப் பார்த்த முகங்கள்தான் பிரகாசமடையும், அவரை நோக்கிப்பார்த்தால்தான் பிழைக்கமுடியும். அவரண்டை வருகிறவர்களுக்குத்தான் அற்புதச் சுகம் உண்டாகும். அரிடத்தில்தான் நித்திய ஜீவவசனங்கள் உண்டு. அவரே நம்மில் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகக் காணப்படுகிறார். அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி, அவராலேயன்றி ஒருவனும் பரலோகம் போகமுடியாது. ஆகையால் நம்முடைய கவனமும் நோக்கமும் ஜனங்களை இயேசுவுக்கு நேராக நடத்துவதாக இருக்கட்டும். பிசாசு எப்பொழும் மேட்டிமையை விதைத்து, எல்லாம் நான் என்று எண்ணும் படிக்குச் செய்வான். நம்முடைய தாலந்துகளைக் குறித்தும், கிருபை வரங்களைக் குறித்தும் மேட்டிமை கொள்ளும்படிக்குச் செய்வான். அப்சலோமின் ஆவி ஜனங்கள் பரலோக தாவீதாகிய இயேசு வண்டை கடந்து செல்லுவதைத் தடைசெய்கிறதாய் தான் காணப்படும். பிசாசின் தந்திரங்கள் நாம் அறியாதவை அல்ல, ஆகையால் இயேசுவலேயன்றி நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து, ஜனங்களுக்கு இயேசுவை சுட்டிக்காட்டுகிறவர்களாய் காணப்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

