ஏசா 60:18. இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_XJrP4jQV80
உங்களை சுற்றிலும், உங்கள் குடும்பத்தை சுற்றிலும், உங்கள் வேலையை சுற்றிலும் உங்கள் எல்லைகள் எல்லாவற்றின் மேலும் கர்த்தர் காவல் வைத்துள்ளார். யோபுவை சுற்றிலும் கர்த்தர் வேலியடைத்து பாதுகாத்திருந்தார். எலிசாவை சுற்றிலும் அக்கினிமயமான இரதங்களை கொண்டு அவனை பாதுகாத்தார். அதுபோல உங்களையும் அவர் பாதுகாப்பார். அழிவும் நாசமோசமும் பேரழிவும் எதிர்பாராத வியாதிகளும் உங்களை நெருங்காமல் கர்த்தர் பாதுகாத்துக்கொள்ளுவார். வாதை உங்கள் கூடாரத்தை அணுகுவதில்லை, பொல்லாப்பு உங்களுக்கு நேரிடுவதில்லை என்று கர்த்தர் கூறுகிறார்.
உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய் என்ற வார்த்தையின் படி உங்கள் குடும்பம் என்னும் எல்லைகளை, துதியினால் நிரப்புங்கள். அந்த துதி என்னும் வாசல் உங்கள் குடும்பங்களில் இருக்கும்போது நாசமோசம் சம்பவிப்பதில்லை. குடும்ப வாழ்வில் கணவன் மனைவியை குறைகூறிக்கொண்டும், மனைவி கணவனை குறைகூறிக்கொண்டும் இருக்க வேண்டாம். குறைகூறும்போது துதி எழும்பாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
சங் 147:12-14ல் வசனம் கூறுகிறது, எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் என்பதாக. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரிக்கும்போது கர்த்தர் உங்கள் வாசல்கள் என்னும் தாழ்பாள்களை பலப்படுத்துகிறார். அதாவது வேண்டாத பொல்லாத ஆவிகள் உங்கள் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதி அழிக்காமல் பாதுகாத்துக்கொள்ளுகிறார்.
கர்த்தரை துதித்து ஸ்தோத்தரிக்கும்போது அவர் உங்கள் குடும்பத்திலுள்ள பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் ஈவு. கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பிள்ளைகள் ஆசீர்வாதமாய் இருப்பார்கள். உங்கள் பந்தியை சுற்றிலும் உங்கள் பிள்ளைகள் ஒலிவமர கன்றுகளாய் இருப்பார்கள்.
மாத்திரமல்ல, துதி ஸ்தோத்திரம் உங்கள் எல்லைகளில் இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் சமாதானம் காணப்படும். இந்த உலகத்திலிருக்கும் எல்லா ஆசீர்வாதத்திற்கும் மேலான ஆசீர்வாதம் சமாதானமாய் காணப்படுகிறது. அப்படிப்பட்ட சமாதானத்தை கர்த்தர் உங்களுக்கு தருவார்.
துதி ஸ்தோத்திரம் உங்கள் எல்லைகளில் இருக்கும்போது உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். நம் தேவன் ஒருவர் மாத்திரமே திருப்தியை தரமுடியும். வனாந்திரத்தில் சுமார் 5000 புருஷர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு ஐந்து அப்பம் இரண்டு மீன்களை கொண்டு கர்த்தர் போசித்தபோது, அவர்கள் சாப்பிட்டு திருப்தியாய் இருந்தார்கள் என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதமே திருப்தியை கொடுக்கும். உங்களுக்கு கர்த்தர் கொடுக்கும் செழிப்பு உங்களுக்கு திருப்தியை தரும்.
ஆகையால் நாசம் மோசம் உங்கள் எல்லைகளில் காணப்படாதபடிக்கு, துதி ஸ்தோத்திரம் உங்கள் குடும்பத்தில் எழும்பட்டும். அப்பொழுது கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் பிள்ளைகளையும் உங்களுக்குண்டான யாவற்றையும் பாதுகாப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

