தேவனை அமர்ந்திருக்கவிடாதிருங்கள் (Give the LORD No Rest)

அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும் வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள் (ஏசா. 62:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0N5A8A4bqLk

தேவனை அமர்ந்திருக்க விடாதிருங்கள் என்பது, உங்கள் ஜெபங்களில் ஆண்டவருடைய சமூகத்தைத் தட்டுவதை நிறுத்திவிடாதிருங்கள் என்பதைக் குறிக்கிறது. பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை,  இளைப்படைவதுமில்லை இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? என்று ஏசாயா 40:28 கூறுகிறது, ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளும் சோர்ந்துபோகாமல் உங்கள் காரியங்களில் கர்த்தர் பதில் தரும்வரைக்கும் கேட்டுக்கொண்டே இருங்கள். இயேசு கூறிய உவமையில், அநீதியுள்ள   நியாயாதிபதியே நீதிசெய்யும் போது,  தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய அவருடைய பிள்ளைகளாகிய உங்களுடைய விஷயத்தில் சீக்கிரத்திலே   நியாயஞ்செய்து, உங்களை மகிழப்பண்ணுவது நிச்சயம்.

தேவனும் உங்களுடைய நீதியைப் பிரகாசத்தைப்போலவும், உங்கள் இரட்சிப்பை எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும்  அமராமலிருப்பேன் என்று ஏசா. 62:1ன் படி நமக்கு  வாக்குக் கொடுத்திருக்கிறார். இது பின்னாட்களில் பாபிலோனியர்கள்  எருசலேமை மேற்கொண்டு, அவர்களை  எழுபது வருடம் அடிமைப்படுத்தின பின்பு, கர்த்தர் மீண்டும் அவர்களுடைய சிறையிருப்பை மாற்றி,     எடுத்துக் கட்டுவதைக் குறிப்பதாய் காணப்பட்டாலும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் பொருந்துகிறதாய் காணப்படுகிறது.    நீங்கள் கர்த்தருடைய கரத்தில் அலங்காரமான கிரீடமாயும், ராஜமுடியுமாய் காணப்படுவீர்கள். கர்த்தருடைய வாய்ச் சொல்லும் புதுநாமத்தால் எப்சிபா என்றும் பியூலா என்றும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள், கர்த்தருடைய பிரியம் உங்கள் மேலிருக்கும்,  நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் என்றென்றைக்கும் நன்றாயிருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய மனவிருப்பமாய்  காணப்படுகிறது. உங்களுடைய காரியங்களில் கர்த்தர்  இனியும் அமர்ந்திராபடி, காலதாமம்  செய்யாதபடி, உங்களுக்குத் துரிதமாய் நீதி செய்வார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும்  ஜாமக்காரர்களாய் வைத்திருக்கிறார், ஆகையால் நீங்களும்  ஒருக்காலும் மவுனமாயும், அமரிக்கையுமாயிருக்கலாகாது என்று ஏசா. 62:6 கூறுகிறது. ஜாமக்காரர்கள் எப்போதும் விழித்திருக்கிறவர்களாய் காணப்பட வேண்டும், ஆபத்துகளைக் கண்டு  முன்னறிவித்து, ஜனங்களை எச்சரிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். இயேசு சீஷர்களிடம், என் ஆத்துமா மரணத்துக்கேதுவான  துக்கங்கொண்டிருக்கிறது, நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்றார். பின்பு அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக்கூடாதா? என்று கேட்டார். அதே கேள்வியை இன்று ஆண்டவர் நம்மிடத்திலும் கேட்கிறவராய் காணப்படுகிறார். இந்நாட்களில் நாம் ஆண்டவருடைய  சமூகத்தைத் தட்டி ஜெபிப்பதற்கு, அனேகக் காரியங்கள் காணப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து இடைவிடாமல் ஜெபிக்கும் போது கர்த்தர் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae