தரிசித்து அல்ல, விசுவாசித்து நடவுங்கள் (Walk by faith, not by sight).

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (2 கொரி. 5:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jSUesAkY1bM

கர்த்தருடைய ஜனங்கள் விசுவாசித்து நடக்கும் படிக்கு  அழைக்கப்பட்டவர்கள். விசுவாசம் என்பது  நம்பப்படுகிறவைகளின்  உறுதியும்  காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது. நாம் காணப்படுகிறவை களையல்ல, காணப்படாதவைகைளை  நோக்கியிருக்கியிருக்கிறோம் என்று 2 கொரி. 4:18 கூறுகிறது. நாம் சரீரக் கண்களினால் தரிசிக்காத அனேக ஆவிக்குரிய காரியங்கள் நமக்கு முன்பாக காணப்படுகிறது, இயேசுவின் இரகசிய வருகையில் சபை எடுத்துக்கொள்ளப்படுதல், ஆயிரம் வருட அரசாட்சி, புதிய எருசலேமில் இயேசுவோடு யுகயுகமாய் வாழுவது, இவைகளை எல்லாம் உறுதியாய் விசுவாசித்து, அதைச் சுதந்தரிப்பதற்குரிய தகுதியான ஜீவியத்தை  இப்பூமியில் நாம் செய்கிறவர்களாகக் காணப்பட வேண்டும்.

ஆபிராமும், லோத்தும் இணைந்து கானான் தேசத்திற்குள்  வந்தார்கள்.  ஆபிராம், மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். லோத்துவுக்கும்  ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் இரண்டுபேருடைய ஆஸ்தியும் மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது. இந்தச்  சூழ்நிலையில் ஆபிராமுடைய  மந்தை மேய்ப்பருக்கும்  லோத்துடைய  மந்தை மேய்ப்பருக்கும் வேறு வாக்குவாதம் உண்டானது. அப்பொழுது, ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டுப் பிரிந்துபோகலாம், நீ இடதுபுறம்போனால், நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். 

லோத்து தரிசித்து நடக்கிறவன், காண்கிறவைகளை நம்புகிறவன். அவன் கண்களை ஏறெடுத்து பார்த்த வேளையில் சோதோம் நீர்வளம் பொருந்தினதாயும், கர்த்தருடைய தோட்டமாகிய ஏதேனைப்போலவும், எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. ஆகையால் அதைத் தெரிந்தெடுத்தான். அவனுக்கு முன்பாகக் காணப்படுகிற அழிவைக்குறித்தும், அவனுடைய ஆஸ்தி ஐசுவரியம் மற்றும் குடும்பத்தினர் சிறை பிடிக்கப்படுவதைக் குறித்தும், அவனுடைய மனைவி சோதோமின் காரியங்களை இச்சித்து உப்புத் தூணாகப் போவதைக் குறித்தும், அவனுடைய பெண் பிள்ளைகள் சோதோமின்  கலாச்சாரங்களைக் கற்று ஆகாதவர்களாய் போவதைக் குறித்தும் எந்த அறிவும் இல்லாதவனாய்  காணப்பட்டான்.  ஆனால், ஆபிரகாம் விசுவாசித்து நடக்கிறவன், அவனுடைய வாழ்க்கை முழுவதும் விசுவாசத்தின் அடிப்படையில் காணப்பட்டது. அவன் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய்,  எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். மம்ரே என்பது தரிசனமுள்ள, தேவனோடு நெருக்கமான ஜீவியம் செய்வதைக் குறிக்கிறது. அவன் செல்வச்சீமானாய் காணப்பட்டிருந்தும், ஒரு பரதேசியைப் போல வாழ்ந்தான்.  காண்கிறவைகள் எல்லாம் மாயையென்றும், நிரந்தரமில்லாதது என்றும் நம்பினான். அவன் அஸ்திபாரங்கள் உள்ள புதிய எருசலேமுக்கு நம்பிக்கையோடு காத்திருந்தான்.   ஆகையால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து, பெருப்பண்ணினார்.  அவனை விசுவாசிகள் எல்லாருக்கும் தகப்பனாகத் தேவன் உயர்த்தினார். ஆபிரகாமின் குமாரனாக இயேசுவும் பூமியில் அவதரித்தார். 

இந்நாட்களில் ஆவிக்குரிய காரியங்களை முக்கியப்படுத்தாதபடி, வேதத்தை முக்கியப்படுத்தாதபடி, மாமிச கண்களில் சமீபமாய் தென்படுகிற நன்மைகளைக் கண்டு, அதை இச்சித்து சோரம் போன லோத்தின்  வம்சத்தைச் சேர்ந்த விசுவாசிகள் அனேகர். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் விசுவாசித்து நடக்க உங்களை அர்ப்பணியுங்கள்.  காணாதவைகளின்  மேல் உங்கள் சிந்தையை வையுங்கள். அப்பொழுது ஆபிரகாமின் ஆசீர்வாதங்களை கிறிஸ்துவின் மூலம்  உங்கள் பூமிக்குரிய ஜீவியத்திலும் பெற்றுக் கொள்ளுவீர்கள், நித்திய வாழ்வையும் சுதந்தரிப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae