கோட்டைகள் (Fortresses)

அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள், ஆனாலும் தாவீது  சீயோன்  கோட்டையைப் பிடித்தான், அது தாவீதின் நகரமாயிற்று  (1 நாளா. 11:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0tGXx8kaFCY

தேவன் தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் அரணும் கோட்டையுமாய் இருக்கிறார். அது எதிரிகளின் தாக்குதலிலிருந்து அவருடைய பிள்ளைகளுக்கு அவர் வைத்திருக்கும் பாதுகாப்பைக் குறிக்கிறது. சத்துருவும் தன்னுடைய ஜனங்களைச் சுற்றிலும் கோட்டைகளைக் கட்டுகிறான், அவனுடைய அதிகாரத்திலிருந்து வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும், சுவிஷேச வெளிச்சம் அவர்களுக்குள்ளாய் பிரவேசித்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவன் அவர்களைச்சுற்றி கோட்டைகளைக் கட்டுகிறான்.  எரிகோவின் ஜனங்களைச் சுற்றிலும்,   எபூசியர் ஜனங்களைச் சுற்றிலும் சத்துரு   கோட்டையைக் கட்டி பாதுகாக்கிறவனாய் காணப்பட்டான். அவனுடைய அரண்களையும் கோட்டைகளையும்  நிர்மூலமாக்குவதற்குக் கர்த்தர் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். அதற்காக சர்வாயுத வர்க்கங்களை நம்முடைய போராயுதங்களாகவும்  கொடுத்திருக்கிறார். எங்களுடைய போராயுதங்கள்  மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத்  தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது  என்று பவுல் எழுதியிருப்பதை 2 கொரி. 10:6ல் வாசிக்க முடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, இது நீங்கள்  யுத்தம் செய்கிற காலம்,  யுத்தசன்னத்தர்களாய்  எழும்புங்கள். ஆயுதமணிந்த வில் வீரர்களாயிருந்தும் எப்பிராயீம் புத்திரர் யுத்த நாளிலே முதுகு காட்டினார்கள் என்று சங். 78:9 கூறுகிறது. யுத்தக்காலத்தில், ரூபன் புத்திரர்களுக்குள் பிரிவினைக் காணப்பட்டது என்றும், தாண் புத்திரர்கள் கப்பல்களில் தங்கியிருந்தார்கள் என்றும், ஆசேர் மனுஷர்  குடாக்களில் தாபரித்தார்கள் என்றும், செபுலோனும் நப்தலியும் போர்க்களத்தின் முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்திற்குத்  துணிந்து நின்றார்கள் என்று தெபோராள் பாடினாள். நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாய் காணப்படுகிறீர்கள்?

தாவீது, எப்ரோனிலிருந்து, யூதா கோத்திரத்தின் மேல் ஏழு வருடமும் ஆறு மாதங்களும் ஆட்சி செய்தான், பின்பு முப்பத்துமூன்று வருடங்கள் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் எருசலேமைத் தலைமையகமாய் வைத்து ஆட்சிசெய்தான். அவன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக தெரிவு செய்யப்பட்ட உடன் எபூஸ் என்றும், சீயோன் கோட்டை என்றும் அழைக்கப்பட்ட எருசலேமைப் பிடிக்கும்படிக்குச் சென்றான்.   யோசுவா கானானைச்  சுதந்தரிக்கும் போது எபூசியர்களை விட்டு வைத்ததினால், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அங்கே கோட்டைக் கட்டி வாழ்ந்து வந்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, அழிக்கவும் நிர்மூலமாக்கவும் வேண்டிய பாவப்பழக்கவழக்கங்களை உடனே உங்களைவிட்டு அகற்றவில்லையென்றால் அது பின்னாட்களில் உங்கள் வாழ்க்கையில் சத்துருவின் கோட்டையாக மாறிவிடும் என்பதை மறந்து போகாதிருங்கள். செய்யவேண்டியதை உடனுக்குடன் செய்யாததினால் அனேகர் பிசாசின் அரணுக்குள்ளாய், அவனுடைய கோட்டைக்குள்ளாய், அதாவது போதை வஸ்துக்கள், பாவப் பழக்க வழக்கங்கள், இன்னும் இப்படிப்பட்ட பல பொல்லாதகாரியங்களுக்குள்  அடிமைகளாய் காணப்படுகிறார்கள்.  அப்பொழுது எபூசின் குடிகள்  தாவீதைப் பார்த்துச் சொன்னார்கள், எங்கள் கோட்டைக்குள் நீ பிரவேசிப்பதில்லை, இங்கே காணப்படுகிற குருடரும் சப்பாணிகளுமே உன்னையும் உன் ஜனங்களையும் தடுக்கப் போதுமானவர்கள் என்று ஏளனமாகச் சொன்னார்கள். உடனே தாவீது,  எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று  சொல்லி, அந்தக் கோட்டையைப் பிடித்து, தன்னுடைய தலைநகரமாக்கினான். கர்த்தருடைய பிள்ளைகளே, சத்துரு ஜனங்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி, அடிமைப்படுத்தி, என்கையிலிருந்து யாராலும் விடுவிக்கமுடியாது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு காணப்படலாம். சபைகளிலிருந்து ஒரு ஜெப சேனை எழும்பும் என்றால் பாதாளத்தின வல்லமைகள் தோற்றுப்போவது நிச்சயம், எழுப்புதலுக்கு எதிராய் காணப்படுகிற தடைகளும் விலகும்.   கடைசி நாட்களில் சத்துருவின் கோட்டைகளைத் தகர்க்கும்படிக்கு  முந்திச் செயல்படுகிறவர்களைக் கர்த்தர் தலைவர்களாகவும், உயர்ந்த நிலையிலும்; ஆசீர்வதித்து மேன்மைப்படுத்துவார்.   நீங்கள் ஒவ்வொருவரும் அப்படிப்பட்டவர்களாய் காணப்படத் தேவன் தாமே உங்களுக்கு அருள் செய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae