அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும் அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும், பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனே கூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள், இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான் (எஸ்தர் 5:14).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bEELMS3-QKI
அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனைத் தன்னுடைய பிரபுக்கள் எல்லாரைக் காட்டிலும் உயர்த்தி வைத்தான். எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரிக்க வேண்டும் என்றும் ராஜா கட்டளையிட்டிருந்தான். ஆகையால் அகாஸ்வேரு அரசாண்ட நூற்றிருபத்தேழு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஜனங்களும் ஆமானை வணங்கி அவனுக்குக் கனத்தைச் செலுத்தினார்கள். ஆனால் அரண்மனை வாசலில் காணப்பட்ட மொர்தேகாய் என்ற மனுஷன் யூதனாய் காணப்பட்டதின் நிமித்தம் ஆமானை வணங்கவும், நமஸ்கரிக்கவும் இல்லை. யூதர்கள் தேவனைத் தவிர எந்த மனுஷனையும் வணங்குவதில்லை. இந்தக் காரியத்தைக் குறித்து ஆமான் தன் மனைவியாகியசிரேஷுவிடம் கூறிய வேளையில் அவள் ஆமானின் கோபத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, அவன் கோபத்தை இன்னும் தூண்டிவிடுகிறவளாய் காணப்பட்டாள். மொர்தெகாய்க்காக தூக்கு மரத்தைச் செய்வித்து அவனை அதில் தூக்கிப் போடும் படிக்கு ஆமானுக்கு துராலோசனை கொடுக்கிறவளாய் காணப்பட்டாள். அவளுடைய புருஷனாகிய ஆமானையே ராஜா தூக்கிப் போடப் போகிறான் என்பதை அறியாதவளாய் தன் புருஷனை உசுப்பேற்றினாள். அந்தோ பரிதாபம், சிலநாட்களுக்குப் பின்பு, ஆமானை ராஜா அதே தூக்கு மரத்தில் தூக்கிப் போட்டான்.
ஆகாப் என்ற இஸ்ரவேலின் ராஜாவின் அரண்மனையின் அருகில் நாபோத் என்ற மனுஷனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் காணப்பட்டது. அதை ஆகாப் வாங்கி கீரைக்கொல்லையாக்கும் படிக்கு விரும்பினான். அதை விலைக்குக் கேட்ட வேளையில், நாபோத் என் பிதாக்களின் சுதந்திரத்தை நான் விற்கலாகாது என்றான். நடந்த காரியங்களை ஆகாப் தன் துன்மார்க்க மனைவியாகிய யேசபேலிடம் கூறினான். அவள், நான் அந்தத் திராட்சை தோட்டத்தை உமக்குக் கொடுப்பேன் என்று கூறினாள். ஆகாப் அவளுடைய துன்மார்க்கக் கிரியைகளை அறிந்திருந்தும் அவளுடைய ஆலோசனையை அங்கீகரித்தான். அவள் நாபோத்தை கல்லெறிந்து கொலைசெய்வதற்கு ஏற்பாடு செய்து, அவ்வாறே கொன்றுபோட்டாள். அதன் விளைவாக, நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கின அதே இடத்தில் ஆகாப்பின் இரத்தத்தையும் நாய்கள் நக்கும் படிக்குக் கர்த்தர் செய்தார். தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை என்று அவனைக்குறித்து வேதம் கூறுகிறது.
சுனேம் ஊராளாகிய கனம் பொருந்திய ஸ்திரீ எலிசாவைக் குறித்து தன் புருஷனிடம் நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன் என்று நல்ல ஆலோசனையைக் கூறி, அவனுக்குத் தன் வீட்டின் மெத்தையின் மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைக்கும்படிக்குச் செய்தாள். அதனிமித்தம் கர்த்தர் அவளுக்கு ஒரு கர்ப்பத்தின் கனியைக் கொடுத்தார். பின்னாட்களில் அந்த பாலகன் மரித்த வேளையில் எலிசா அவனை உயிரோடு எழும்பினான். அவளுடைய நல் ஆலோசனை அவர்களை வாழ்ந்திருக்கும் படிக்குச் செய்தது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் எப்படிப்பட்ட ஆலோசனைகளை ஒருவருக்கொருவர் கொடுக்கிறீர்கள். கர்த்தருடைய காரியங்களில் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்துகிறவர்களாய் காணப்படுகிறீர்களா? இல்லையேல் பின்னிற்கு இழுக்கிறீர்களா, மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் உற்சாகப்படுத்துகிறதும், நீதிக்குரிய காரியங்களைச் செய்வதற்கும் உங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கு ஆலோசனை கூறுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

