தலைவனும் ஊழியனும் (Master and servant)

யாத் 24:13. அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/D33IO3ZUoh8

இன்றைக்கு அநேகருக்கு ஏதாவதொரு ஊழியத்தில், பொறுப்பில், துறையில் தலைமையாக இருக்க வேண்டுமென்றே வாஞ்சிக்கிறார்கள். தலைவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்கள் குறைந்துபோய்விட்டார்கள். யோசுவா மோசேக்கு உதவி ஊழியம் செய்தவன். ஒருநாளும் யோசுவா தான் தலைமைக்கு வரவேண்டும் என்று மோசேயின் இடத்தை இச்சிக்கவில்லை. ஆண்டவர் சொன்னபோது தான் மோசே தன் கைகளை யோசுவாவின் மீது வைத்தான். அவன் அப்பொழுது கனப்படுத்தப்பட்டான்.

எலிசா எலியாவுக்கு பணிவிடை செய்தவன். எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்தவன். எலிசா எலியாவுக்கு ஒரு மகனை போல இருந்தான். எலியாவும் எலிசாவுக்கு ஆவிக்குரிய தகப்பனாக காணப்பட்டான். ஆகையால் தான் எலியா எடுத்துக்கொள்ளப்படும்போது எலிசா தகப்பனே தகப்பனே என்று எலியாவை அழைப்பான். என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான் என்று 2 இராஜா 2 :12 கூறுகிறது.

தாவீது தன்னுடைய எஜமானாகிய சவுல் அனுப்பிய எவ்விடத்திற்கும் அவன் கடந்துபோனான். தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கு இராஜாவாக உயர்த்தப்படுவதற்கு முன், சவுலுக்கு கீழ்ப்படிந்திருந்தான். அதினிமித்தமாக சவுல் தாவீதை உயர்த்தினான். 1 சாமு 18:5 கூறுகிறது, தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான் என்பதாக.

தகப்பனுக்கு மகன் உதவி செய்வதுபோல தீமோத்தேயு பவுலுக்கு உதவி செய்தான். அதை பவுலே கூறுகிறான். பிலி 2:22ல் பவுல் கூறுகிறான், தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாக. இப்படி உதவி ஊழியம் செய்கிறவர்களுக்கு ஆண்டவர் நன்றாய் இருப்பார்கள் என்ற வாக்குத்தத்தையும் கொடுக்கிறார். 1 தீமோ 3:13 கூறுகிறது, இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள் என்பதாக.

இன்றைய சூழ்நிலையில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை; ஆனால் உதவி ஊழியம் செய்பவர்களுக்கோ தட்டுப்பாடு காணப்படுகிறது. இன்றைக்கு அநேக சபைகளில் நிலவும் ஒரு வியாதி என்னவென்றால் தலைவர்களை விட்டு உதவியாளர்கள் விலகி தனி சபையை ஆரம்பித்துவிடுகிறார்கள். அதன் விளைவு, சொற்ப நாட்களிலேயே குழப்பங்களும் மேய்ப்பனில்லாத ஆடுகளுமாய் சபை காணப்படுகிறது. தலைவர்கள் மீது பொறாமையல்ல பரிதாபம் கொள்ளுங்கள் என்றார் ஒரு ஊழியக்காரர். நல்ல தலைவனுக்கு உதவி செய்யுங்கள், உதவி ஊழியத்தை கர்த்தருக்குள் நிறைவேற்றுங்கள். அப்பொழுது கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படி, நீங்கள் நன்றாய் இருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org