எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும் (நீதி. 4:23)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UtFt6-yX6fQ
கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் உங்கள் வரம்புகளை அறிந்து ஒவ்வொரு காரியங்களில் ஈடுபடவேண்டும். உங்கள் வரம்புகளையும் எல்லைகளையும் மீறும் போது அது உங்கள் ஆத்துமாக்களுக்கு கண்ணியாய் மாறி அழிவைக் கொண்டுவரும். நம்முடைய தேசத்தில் சில சாலைகளில் செல்லும் போது தடிமனான மஞ்சள் கோடு சாலையின் நடுவில் போட்டிருப்பார்கள். எதிரெதிர் திசைகளில் செல்லும் வாகன போக்குவரத்தை பிரிப்பதற்கும், அதைத் தாண்டி மறுபக்கம் செல்லுவது சட்ட விரோதம் என்பதைக் குறிக்கும்படிக்கும் அவ்வாறு போடப்பட்டிருக்கிறது. ஒருவேளை அதைத் தாண்டிச் சென்றால் ஆபத்துகளை சந்திக்க வேண்டியது வரும்.
மரித்துப் போனவர்கள், அகால மரணமடைந்தவர்களுடை ஆவி பூமியில் வந்து உலாவுவதற்கு ஒருநாளை நியமித்து, அதை நினைவு கூறும்படிக்கு ஹாலோவீன்(Halloween) என்ற கொண்டாட்டத்தை புறஜாதிகள் துவங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ம் தியதி அதற்காக நியமிக்கப்பட்டது. ஹாலோவீன் கொண்டாடலாமா, அதில் மரித்துப் போனவர்களுடைய ஆவிகளைப் போன்ற ஆடைகளை தரித்து கலந்துகொள்ளலாமா, என்பது அனேக அரைகுறை கிறிஸ்தவர்களிடம் காணப்படுகிற கேள்வியாய் காணப்படுகிறது. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று எரேமியா 10:2ல் எழுதப்பட்ட ஒரே வசனத்தில் ஆண்டவர் அதற்குரிய பதிலைக் கொடுத்துவிட்டார். இவைகள் பாகால் வணக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக பிசாசினால் மறைமுகமாக புகுத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் என்பதை மறந்து போகாதிருங்கள்.
அதைப்பின்பற்றி அடுத்த நாள், அதாவது நவம்பர் 1ம் தியதி, மரித்துப் போன பரிசுத்தவான்களை நினைவு கூறும்படிக்கு பாரம்பரிய சபைகள் புனிதர் அனைவர் விழா (All saints day) என்ற நாளை நியமித்து ஒவ்வொரு வருடமும் அதை நினைவு கூறுகிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் புனிதமாய் வாழ்ந்து மரித்துப் போனவர்கள், பூமியில் உயிரோடு காணப்படுகிறவர்களுக்காக தேவனிடம் மன்றாடுவார்கள் என்பதாகும். வேதத்தில் ஒரு இடத்திலும் மரித்துப் போனவர்கள் நமக்காக வேண்டுதல் செய்ய முடியும் என்று எழுதப்படவில்லை. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே என்று 1தீமோ. 2:5 கூறுகிறது. அவர்தான் இயேசு கிறிஸ்துவாய் காணப்படுகிறார். ஆகையால் வேதம் சுட்டிக்காட்டாத எந்த பழக்கவழக்கங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதிருங்கள்.
அடுத்ததாக நவம்பர் 2ம் தியதியை கல்லறைத் திருநாள் (All souls day) என்று பாரம்பரிய சபைகள் நினைவுகூருகிறார்கள். மரித்துப்போன உறவுகளை கனப்படுத்தி, நினைவு கூர்ந்து, அவர்களுக்காக ஜெபிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாளாய் காணப்படுகிறது. ஆத்துமாக்கள் பரலோகத்தில் நுழைவதற்கு முன்பு தற்காலிகமாக அவர்கள் செய்த தவறுகளுக்காக சுத்திகரிக்கப்படுவதற்கு உத்தரிப்பின் இடம் (purgatory) காணப்படுகிறது. பூமியில் இவர்கள் ஏறெடுக்கிற ஜெபத்தின் மூலம் உத்தரிப்பின் இடத்தில் காணப்படுகிற மரித்துபோனவர்களுக்கு தேவன் இரக்கம் பாராட்டி, அவர்களை பரலோகத்தில் சேர்த்துக்கொள்ளுவார் என்பது இப்படிப்பட்டவர்களுடைய நம்பிக்கை. ஆனால் எபிரேயர் 9:27 கூறுகிறது, ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதாக.
கர்த்தருடைய பிள்ளைகளே, வேதத்திற்கு புறம்பான பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளாதிருங்கள். உங்கள் விசுவாசத்தின் எல்லைகளை வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள். மனுஷர்களுடைய வீணான போதனைகளை பின்பற்றாதிருங்கள். மனுஷன் மரித்த பின்பு, மண்ணான சரீரம் மண்ணுக்கு திரும்பும், ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும், ஆத்துமா நித்தியத்தை நிர்ணயிக்கும். பாவங்களிலிருந்து மனம்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, ஆவியானவருடைய நிறைவோடு, கிறிஸ்துவின் சாயலை அணிந்து வாழ்பவர்களுடைய ஆத்துமா இளைப்பாறுதலில் பிரவேசிக்கும், மற்றவர்கள் நித்திய தண்டனைக்கு நேராக கடந்துசெல்லுவார்கள். ஆகையால், நீதிக்குரிய ஜீவியம் செய்து, நித்தியத்தை சுதந்தரிக்க உங்களை அர்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

