கர்த்தர் உங்கள் மேல் இரக்கமாயும், உருக்கமாயும் இருப்பார் (The Lord will be merciful and gracious to you)

அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். (ரோமர் 9:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ilc2hx97gSc

ஒரு புதிய மாதத்தில் பிரவேசிக்கும்படிக்கு கர்த்தர் கிருபை பாராட்டினார், இந்த வருடத்தில் பத்து மாதங்களையும் கடக்கும்படிக்குச் செய்தார், ஆகையால் கர்த்தரை நன்றி நிறைந்த இருதயத்தோடு துதியுங்கள். யுத்தங்களும், உள்நாட்டு குழப்பங்களும், இயற்கைச் சீற்றங்களும், ஆபத்துகளும், வியாதிகளும் அகேரை வாரிக்கொண்டிருக்கிற இந்நாட்களில் கர்த்தர் உங்களுக்கு பாராட்டின ஈவுகளை நினைத்து கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்கொத்த கனத்தைச் செலுத்தி மகிமைப் படுத்துங்கள். மோசே மலையுச்சியில் ஆண்டவரோடு சஞ்சரித்து பிரமாணங்களை பெற்றுக் கொண்டிருந்தான், அவ்வேளையில் கீழே காணப்பட்ட ஜனங்கள் அவன் இறங்கி வருவதற்கு தாமதமாகிறதைக் கண்டு, ஆரோனைப் பார்த்து அந்த மோசேக்கு என்ன சம்பவித்தது என்று தெரியாது, ஆகையால் எங்களுக்கு முன் செல்வதற்கு தெய்வங்களை உண்டு பண்ணும் என்று கூறி அவனை நெருக்கினார்கள். ஆரோன் அவர்களுடைய பொன்னாபரணங்களை எல்லாம் வாங்கி பொன் கன்றுக்குட்டியாய் உருவாக்கி உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த தெய்வங்கள் இவைகளே என்று கூறி பலிசெலுத்தி பண்டிகையை ஆசரிக்கும்படிக்குச் செய்தான். கர்த்தர் விதித்த வழிகளை விட்டு விலகியதின் நிமித்தம் அவர்கள் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. ஆகையால் அவர்களை அழித்து விட்டு உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார். அவ்வேளையில் மோசே ஜனங்களுக்காக கர்த்தரிடம் மத்தியஸ்தம் செய்து, அவர்களுக்காக கெஞ்சிப் பிரார்த்தித்தான், ஆகையால் கர்த்தர் செய்யும்படிக்கு நினைத்த தீங்கைச் செய்யவில்லை. ஆகிலும் நான் இனி உங்களோடு வருவதில்லை, ஒரு தூதனை அனுப்புவேன் என்று கூறினார். துக்கமான இந்த வார்த்தைகளைக் கேட்ட போது, மோசே ஆண்டவரிடம் உம்முடைய சமூகம் என்னோடே கூடச் செல்லாமல் போனால் எங்களை இந்த வனாந்திரத்திலிருந்து அழைத்துக் கொண்டு செல்லாதிரும் என்றான். இந்த பூமியின் மேலுள்ள எல்லாரிலும், நீர் எங்களோடு வருவதினால் அல்லாவா நாங்கள் விஷேசித்தவர்கள் என்று கூறி ஆண்டவருடைய இரக்கத்திற்காக கெஞ்சினான். அவ்வேளையில் யாத். 33:19ன் படி கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, இஸ்ரவேல் ஜனங்களைப் போல நாம் தேவனை துக்கப்படுத்தின வேளைகள் அனேகம் காணப்படுகிறது. அவருக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்து, பொருளாசைகளை சார்ந்து, அவருடைய சமூகத்தை அசட்டைச் செய்து, இப்படிப்பட்ட அனேக காரியங்களைச் செய்து அவரை வேதனைப்படுத்தின வேளைகள் உண்டு. ஆகிலும் மோசேயைப் போல, இயேசு நமக்காக பிதாவின் வலது பாரிசத்திலிருந்து பரிந்து பேசி ஜெபித்துக் கொண்டு காணப்படுகிறார். ஆகையால் தேவன், உங்களுக்கு இரங்கி, உங்களை மன்னித்து இம்மட்டும் நடத்திக்கொண்டு வருகிறார். அவர் உங்கள் மேல் கொண்ட இரக்கமும் உருக்கமும் ஒருநாளும் மாறுவதில்லை. அது உங்கள் நீதியினாலும், தகுதியினாலும் உண்டானது அல்ல, இயேசுவின் தகுதியினால் உங்களுக்காக உண்டான ஈவாய்  காணப்படுகிறது.  பூமியில் கோடிக்கணக்கான ஜனங்கள் இருந்தும் அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்ற நீங்கள் பாக்கியவான்களாய், பாக்கியவதிகளாய் காணப்படுகிறீர்கள். அவருடைய இரக்கமும் கிருபையும் உங்களை சூழ்ந்து கொள்ளும், கர்த்தர் இந்த மாதம் முழுவதும் உங்களை ஜெயமாய் நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae