சீமோன் என்ற மாயவித்தைக்காரனுடைய ஞானஸ்நானம் (Baptism of Simon the sorcerer) 

அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று,  பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான் (அப். 8:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CDfiqQu1OLc

ஆதி சபையின் நாட்களில் எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சிதறப்பட்டு போனார்கள். அப்படி சிதறிப்போனவர்கள் கர்த்தருடைய சுவிஷேச வசனத்தை எங்கும் பிரசங்கித்தார்கள்.  அவர்களில் ஒருவன்தான் பிலிப்பு என்ற சுவிசேஷகன்.  சமாரியாவின் குடிகளில் அனேகர் அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு   விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். சீமோன் என்ற மாயவித்தைக் காரனும் அவர்களில் ஒருவனாய் காணப்பட்டான். அதுவரை அவன் தன்னுடைய மாயவித்தையினால் சமாரிய  ஜனங்களைப் பிரமிக்கப் பண்ணிக்கொண்டிருந்தான். அவர்கள் இவனைத் தேவனுடைய பெரிதான சக்தி என்பதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவன் இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்து, பிலிப்புவை பற்றிக்கொண்டு அவனோடு காணப்பட்டான்.

சிலநாட்களுக்குப் பின்பு  பேதுருவும்  யோவானும் சமாரியாவில் ஊழியம்  செய்யும் படிக்கு எருசலேமிலிருந்து வந்தார்கள். இவர்கள் பிலிப்புவின்  மூலம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை  பெற்றுக் கொள்ளும்படிக்கு அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபித்த வேளையில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். உடனே மாயவித்தைக்காரனாயிருந்த சீமோனும் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொண்டுவந்து இந்த அதிகாரத்தைப்  பணத்தினால்  விலைகொடுத்து வாங்க முயற்சித்தான். உடனே பேதுரு, உன்  இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லையென்றும், நீ உன் துர்க்குணத்தை விட்டு மனம்திரும்பு என்றும், நீ கசப்பான பிச்சிலும், பாவக்கட்டிலும் காணப்படுகிறாய் என்றும் கடிந்து கொண்டான். இதிலிருந்து  சீமோன் மனம்திரும்பாமலும், பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறாமலும் ஞானஸ்நானம் எடுத்தான் என்பதை அறியமுடிகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, ஞானஸ்நானம் என்பது இயேசுவைப் போலத் தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதாய்க் காணப்படுகிறது. பரிசேயகர்கள், நியாய சாஸ்திரிகளைப்  போலக் கர்த்தருடைய பிள்ளைகள் யாரும் இந்த ஆலோசனையை தள்ளிவிடக் கூடாது. ஆனால், மெய் மனம்திரும்புதலும் பாவமன்னிப்பின் நிச்சயமும் நமக்குள் காணப்பட வேண்டும். ஞானஸ்நானத்தின் மூலம் கிறிஸ்துவோடு நாம் சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுக்கிறோம். தண்ணீருக்குள் நாம் செல்லும் போது இயேசுவோடு அடக்கம் செய்யப்படுதலுக்கு அடையாளமாகவும், தண்ணீரிலிருந்து வெளியே வரும் போது, மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்தது போலப் புதுச் சிருஷ்டியின் அனுபவத்தோடு வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதாகவும் காணப்படுகிறது. ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்  பழையவை எல்லாம் ஒழிந்தது, எல்லாம் புதிதானது என்ற ஒரு புதிய வாழ்வாக, மறுபடியும் பிறந்த வாழ்வின் துவக்கமாகக் காணப்படுகிறது. அதன்பின்பு அனுதினமும் கிறிஸ்துவின் சாயலையும், சுபாவங்களையும் தரித்தவர்களாய் வாழவேண்டும் என்று கலா. 3:27 கூறுகிறது. ஆனால் இந்நாட்களில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றேன் என்று கூறுகிற அனேகர் சீமோனைப் போல மாய்மாலம் செய்கிறவர்களாகவும்,  பாவச் சுபாவங்களைச் சிலுவையில் அறையப்பட  ஒப்புக்கொடாதவர்களாகவும், கசப்புகளினால் நிறைந்தவர்களாகவும், முறுமுறுக்கிறவர்களாகவும், இயேசுவை பிரதிபலிக்காதவர்களாகவும்  காணப்படுகிறார்கள். ஆகையால் நாம் எடுத்த ஞானஸ்நானமானது வேதவசனத்திற்கு ஒத்திருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்த்து மனம்திரும்புங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae