குற்றம்காணுதல் (Condemnation / Accusation)

ரோம 2:1. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DBonjTsyOl4

மற்றவர்கள் மீது குற்றம்காணும் சுபாவம் நமக்கு இருக்கக்கூடாது என்று இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் கூறினார். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்று கூறினார். அநேகர் தங்களுடைய கண்களிலிருக்கும் உத்திரம் போன்ற பெரிய பாவங்களை உணராமல், மற்றவர்கள் கண்களிலிருக்கும் சிறிய அளவிலிருக்கும் துரும்பை அதாவது சிறிய தூசியை பார்த்து, அவர்கள் குற்றவாளி என்று தீர்க்கிறார்கள். இது மாய்மாலம் பண்ணுகிறவர்களின் செயலாய் காணப்படுகிறது. ஒரு தவறை பிறர் மீது கடினமாகவும், நம்மீது எளிதாகவும் எடுத்துக்கொள்ளுகிறவர்களாய் நாம் காணப்படக்கூடாது.

இயேசு உபதேசம்பண்ணிக்கொண்டு இருந்தபோது, விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள் என்று அவளை குற்றம் சாட்டினார்கள், மாத்திரமல்ல, அவளை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இயேசுவோ தரையிலே குனிந்து எழுதிக்கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் இருந்த அனைவரும் அவள் மீது குற்றம் சாட்டினார்கள். இப்படி எத்தனை முறை நாம் மற்றவர்களை குற்றம் சாட்டினோம்? உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று இயேசு கூறினார். இதை கேட்டவுடன் கூட்டத்திலிருந்த அத்தனைபேரும் குத்தப்பட்டவர்களாய் பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். காரணம் கூட்டத்திலிருந்த அத்தனை பேரும் மறைமுக பாவத்தில் ஈடுபட்டவர்கள். இப்படி தான் நம்மில் அநேகர் மறைமுக பாவத்தில் ஈடுபட்டு, மற்றவர்களை குற்றப்படுத்துகிறோம். இயேசு அந்த விபச்சார ஸ்திரீயை மன்னித்து இனி பாவம் செய்யாதே என்று கூறினார். நாம் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானோம் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் நமக்கு போக்கு சொல்ல இடமில்லை.

நம்மில் நல்லவர்களுக்குள்ளும் எவ்வளவோ தீயவை காணப்படுகிறது, தீயவர்களுக்குள்ளும் எவ்வளவோ நல்லது காணப்படுகிறது. ஆகையால் யாரையும் சீக்கிரம் ஓரம் கட்டிவிடாதிருங்கள். பிறரிலுள்ள குற்றத்தை காண்பதில் நாம் தேறினவர்களாக காணப்படக்கூடாது. யாரையும் அவர்களுடைய தோற்றத்தின் படி தீர்ப்பு செய்யாதிருங்கள் (யோவா 7:24). ஆண்டவர் சாமுவேலிடம் இப்படியாக சொன்னார். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார் (1 சாமு 16:7) என்பதாக. சுருக்க கூறினால், எவரை குறித்தும் நமக்கு எல்லாம் தெரியாது. எல்லாவற்றிற்கும் மறுபக்கம் உண்டு. ஆகையால் மற்றவர்கள் மீது குற்றம் காணும் சுபாவம் இல்லாமல், எல்லாரையும் மன்னியுங்கள், எல்லாரிடமும் சாந்தத்தோடு நற்சீற்பொருந்துங்கள் (கலா 6:1), ஒருவருக்கொருவர் தங்கள் குற்றங்களை அறிக்கையிடுங்கள் (யாக் 5:16). அப்படிப்பட்ட சுபாவம் நம்மில் பெருகட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org