நற்செய்தி (Good News)

லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aw5wqUzaI-s

இந்த உலகத்திலிருக்கும் அனைவருக்கும் பேரானந்தம் கொடுக்கும் ஒரு நற்செய்திதான் இயேசுவின் பிறப்பு. குறிப்பிட்ட இனத்திற்கான, குறிப்பிட்ட பட்டணத்திற்கான, குறிப்பிட்ட கொள்கைகளை உடைய ஜனங்களுக்கான, குறிப்பிட்ட நிறத்தை உடைய ஜனங்களுக்கான, குறிப்பிட்ட நாட்டிற்கான நற்செய்தியல்ல; எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டாகும் நற்செய்தி தான் இயேசுவின் பிறப்பு. ஏறத்தாழ 2025 வருடங்களுக்கு முன்பு தேவதூதன் இப்படித்தான் இந்த நற்செய்தியை அறிவித்தான். உங்களுக்காகவும் எனக்காகவும் கிறிஸ்து இந்த உலகத்தில் உதித்தார் என்பது பேரானந்தம் கொடுக்கும் நற்செய்திதானே!. பாவிகளாகிய நம்மை மீட்டெடுக்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவருடைய இந்த பயணம் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணத்தை போன்றது என்றோ, மனிதன் விண்வெளிக்கு செல்லும் பயணத்தை போன்றது என்றோ குறைவாக மதிப்பிடமுடியாது. காரணம் அவருடைய இந்த பயணம் பரலோகம் தீர்மானித்த பயணம். பிதாவாகிய தேவன் நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தான் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த இயேசுவின் ஈடுகட்ட முடியாத தெய்வீக பயணம்.

நாம் எல்லாரும் பாவம் செய்தோம். இந்த பாவத்தின் விளைவு தான் மரணம். அதாவது என்றென்றும் தேவனைவிட்டு பிரிந்து நரகத்தில் தள்ளப்படுவது தான் பாவத்தின் விளைவினால் வரும் மரணம். தேவன் அன்பாகவே இருக்கிறார். யாரும் இவ்வகையான மரணத்தை சந்திக்க வேண்டும் என்று அவர் விருப்பம் கொள்ளவில்லை. நம்மீது பிதாவாகிய தேவன் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார். அந்த அன்பின் வெளிப்பாடு தான் தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்வைகையான மரணத்திலிருந்து நம்மை மீட்டெடுக்கவே இயேசு இந்த உலகத்திற்கு சாதாரண மனிதனாக பிறந்தார். அவர் பிறப்பு தான் உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு தெய்வீக நாள். இயேசுவை நம்பினால், விசுவாசித்தால், அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டால், நித்திய மரணத்திற்கு பாத்திரமானவர்கள், நித்திய ஜீவனுக்கு பாத்திரமானவர்களாக மாறுவார்கள். அதாவது பாவிகளாய் காணப்படுகிறவர்கள் பரலோக பிரஜைகளாக மாற்றப்பட்டுவிடுவார்கள்.

நம்மை போல ஆண்டவருக்கு பல சோதனைகள் இந்த உலகத்தில் வந்தது. ஆனால் அந்த சோதனைகளுக்கு அவர் அடிபணியவில்லை. சோதனைகளை வென்று, பாவமில்லாத வாழ்க்கை வாழ முடியும் என்ற முன்மாதிரியை அவர் வைத்து போனார். இயேசு இந்த உலகத்தில் இருந்த போது எங்கு சென்றாலும் நன்மைகளை செய்தார், அநேகருடைய பாவங்களை மன்னித்தார், எண்ணற்ற அற்புதங்களை செய்தார், பிசாசின் பிடிகளிலிருந்த ஜனங்களை விடுவித்தார், இறந்து போன சிலரையும் உயிரோடு எழுப்பினார், சீஷர்களை உருவாக்கினார், எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொடுத்தார், நீங்களும் உலகமெங்கும் சென்று அவரை குறித்து பிரசங்கியுங்கள் என்று அனுப்பினார்.

இயேசு வெறும் கற்பனை மனிதர் அல்ல. இந்த உலகத்தின் வரலாற்றையே நடுவாக பிரித்தெடுத்தவர். வெறும் 33 1/2 வருடம் மாத்திரமே வாழ்ந்த இயேசு, உலக வரலாற்றையே கி.மு மற்றும் கி.பி என்று பிரித்தார். இந்த உலகத்தில் நம்மை மீட்கும்படியாக வந்த தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் தான் இரட்சிப்பு என்பதை அறிவிக்கவே, அவருடைய சீஷர்களில் ஒருவரான தோமா இந்திய தேசத்திற்கு வந்தார்.

இந்த உலகம் எத்தனையோ நற்செய்தியை கேள்விப்பட்டிருக்கும். ஒருவர் பிரதமரானால் சிலருக்கு நற்செய்தி, ஒரு குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்திற்கு நற்செய்தி, ஒரு தேசத்தில் வளம் பெருகினால் அந்த தேசத்திற்கு நற்செய்தி. ஆனால், இந்த முழு உலகத்திற்கும், எல்லாருக்குமுரிய ஒரே ஒரு நற்செய்தி காணப்படுகிறது. அது தான் இயேசுவின் பிறப்பாய் காணப்படுகிறது. இன்று இந்த நற்செய்தியை உலகத்திற்கு எடுத்துச்செல்லும் பொறுப்பில் தான் நாம் காணப்படுகிறோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org