நன்றி சொல்ல நேரமெடுங்கள் (Take the time to say thank you)

சங் 100:4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/B169-k0WT6k

வீட்டிற்குள் செல்ல வாசல் காணப்படுகிறது; விமானத்திற்குள்ளாக செல்லவும், இரயிலுக்குள் செல்லவும், பேருந்திற்குள் செல்லவும் வாசல் காணப்படுகிறது. அதுபோல தான், தேவனை தொழுதுகொள்ளவும், அவர் பிரசன்னத்தால் நிறையவும் வாசல் காணப்படுகிறது. அந்த வாசல் தான் துதியும் ஸ்தோத்திரமுமாய் காணப்படுகிறது. மாணவர்கள் பரீட்சையில் தேர்ச்சியடையாமல் அடுத்து வகுப்பிற்கு செல்லமுடியதல்லவா? அதுபோல தான், துதி மற்றும் ஸ்தோத்திரம் என்னும் வாசலை கடக்காமல் தேவனை தொழுதுகொள்ள முடியாது. அப்படியென்றால் தேவனுக்கு நன்றி செலுத்துவது என்பது தொழுகையில் உச்சம் இல்லை; அது தான் முதற்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.மனித உள்ளம் எப்பொழுதும் தான் அடைந்த தீமையை நினைப்பதுபோல், தான் அடைந்த நன்மைகளை நினைப்பதில்லை. மற்றவர்களிலிருக்கும் குற்றங்களை பார்த்து நியாயம் செய்ய மனது விரும்பும்; ஆனால், அவரிலிருக்கும் நல்ல எண்ணங்களை நினைத்து தேவனுக்கு நன்றி சொல்ல நினைப்பதில்லை. இப்படிப்பட்ட சுபாவத்தை களைத்து, வருடத்தின் கடைசி மாதத்தில் வந்திருக்கும் நாம் எல்லாரும் நேரம் எடுத்து தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இயேசு சிறிய சிறிய காரியங்களுக்கு நன்றி செலுத்த நன்றாக அறிந்திருந்தார். பிசாசுகள் தங்களுக்கு கீழ்ப்படிகிறது என்று எழுபது சீஷர்களும் பரவசமடைந்தார்கள். ஆவிகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்கு சந்தோசப்படாதிருங்கள் என்று சொன்னவர், உடனே ஆவியில் களிகூர்ந்து சொன்னார்; பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் (லுக் 10:21) என்று நன்றியோடு இயேசு ஆர்ப்பரித்தார். இயேசு அன்றன்றுள்ள ஆகாரம் கூட தேவனிடத்திலிருந்து வந்தது என்று உணர்ந்து அதற்காக நன்றி கூறினார். அப்பங்களை மீன்களை எடுத்து அதற்காக நன்றி சொல்லி அதை பெருகப்பண்ணினார். இப்படி சிறிய காரியங்களுக்கும் பெரிய காரியங்களுக்கும் இயேசு நன்றி செலுத்தினார்.

தேவன் இந்த வருஷத்தில் கொடுத்த வசனங்களும், தேவன் கொடுத்த வெளிப்பாடுகளும் நமக்கு இலவசமாக தேவன் கொடுத்த சொத்து என்று உணர்ந்துகொள்ளுங்கள். வசனம் கேட்ககூடாத பஞ்ச காலம் வருகிறது. அதற்குமுன் இந்த வருஷத்தில் ஆண்டவர் எத்தனையோ வசனங்களை, வெளிப்பாடுகளை கொடுத்தாரே அதற்காக நன்றி சொல்லுங்கள். வசனம் கிடைத்தவுடன் அதை உட்கொண்டேன் என்று பக்தன் சொல்லுகிறான். வீடு, நிலம், வாகனம் போன்ற சொத்துகளை வாங்க தேவன் கிருபையளித்திருப்பார். அதை காட்டிலும் சொத்தான தேவ வசனத்தை ஆண்டவர் கொடுத்தார் எனபதை நினைவுகூர்ந்து, உங்கள் உள்ளம் அகமகிழ்ந்து ஆண்டவருக்கு நன்றிப்பலியை செலுத்தட்டும்.

ஆதி அப்போஸ்தலர்கள், அநேக பரிசுத்தவான்கள் நன்றி சொல்லி ஆண்டவரை மகிமைப்படுத்தினார்கள். ஆகையால், துதியும் நன்றியும் செலுத்துவது தான் வாசல் என்பதை அறிந்து நன்றி நிறைந்த இருதயத்தோடு அடுத்த வருஷத்திற்குள் செல்ல ஆயத்தமாகுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org