இயேசு நம்முடைய இரட்சண்ய கொம்பு  (Jesus is our horn of salvation)

தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார் (லூக்கா 1:75)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Zs2ACia1UBo

மல்கியா தீர்க்கதரிசியின் நாட்களிலிருந்து சுமார் நானூறு வருடங்கள்  வேறொரு தீர்க்கதரிசனமும் வெளிப்படவில்லை. பின்பு யோவான் ஸ்நானகன்  பிறந்த வேளையில் அவன் தகப்பனாகிய சகரியா என்ற ஆசாரியன் பரிசுத்த  ஆவியினாலே நிரப்பப்பட்டு மேற்குறிப்பிட்ட வசனத்தைத் தீர்க்கதரிசனமாகக் கூறினான். அவன் பிறந்த தன்னுடைய குமாரனைக் குறித்து தீர்க்கதரிசனம்  உரைப்பதற்குப் பதிலாக,  பிறக்கப் போகிற மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமாக, அவர் நம்முடைய இரட்சண்ய கொம்பு என்று   கூறினான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக நமக்காகப் பிறந்த இயேசு நம்முடைய இரட்சண்ய கொம்பாகக் காணப்படுகிறார்.  பொதுவாக மிருகங்களுடைய கொம்பு வலுவானதாகக் காணப்படும்.    எதிரிகளைத் தாக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மிருகங்கள்  கொம்புகளைப் பயன்படுத்தும். இயேசு நம்முடைய இரட்சண்ய கொம்பு  என்பதாக மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. இயேசு என்ற பெயருடைய  அர்த்தம் அவர் தம்முடைய ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை  இரட்சிப்பார்  என்பதாகும்.  ஆனால் இரட்சண்ய கொம்பு என்பது, அவருடைய  இரட்சிப்பின் வல்லமையையும், பெலனையும் வெளிப்படுத்துகிறதாகக்  காணப்படுகிறது.

பிசாசை வேதம் பலவான் என்று குறிப்பிடுகிறது. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம் என்று மத். 12:29 கூறுகிறது. ஆகையால் அவனைக்  காட்டிலும் இயேசு பலவானாய் காணப்படுகிறார் என்பதைக் குறிப்பதற்கு அவர் நம்முடைய இரட்சண்யக் கொம்பாக வெளிப்பட்டார். பிசாசு ஜனங்களை எந்த விதத்தில் கட்டி அடிமைப்படுத்தினாலும், அவனுடைய கரங்களிலிருந்து  ஜனங்களை விடுவிக்க முடியும், காரணம் இயேசு நம்முடைய இரட்சண்ய  கொம்பாகக் காணப்படுகிறார். இந்நாட்களில் கம்யூனிச  கோட்பாடுகளும்,  சர்வாதிகார ஆட்சிகளும், மதக் கோட்பாடுகளும் ஜனங்களைக் கட்டி வைத்து,  இரட்சிப்பின் சுவிஷேசத்தை அறிய ஜனங்களை அனுமதிக்காமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் இயேசுவின் இரட்சண்யத்தின் வல்லமைக்கு  முன்பாக ஒரு வல்லமையும் நிற்கமுடியாது. ஆகையால் ராஜ்யத்தின் சுவிஷேம் பூமி முழுவதும் கடந்துசெல்லுவதை ஒருவனாலும் தடுக்க முடியாது. அதுபோல இரட்சிக்கப்பட்ட நமக்கு ஆண்டவர் அருளின இரட்சிப்பு பலமும், வல்லமையும் காணப்படுகிறது. ஒருவனும் ஆண்டவருடைய மந்தையின் ஆடுகளாய்  காணப்படுகிற நம்மை அவருடைய கரத்திலிருந்து பறித்துக் கொள்ள முடியாது. ஆகையால், அன்னாளைப் போல என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது என்றும், தாவீதைப் போலக் கர்த்தர் என் இரட்சணியக் கொம்பும் என் உயர்ந்த  அடைக்கலமுமாயிருக்கிறார் என்றும் அறிக்கையிடுங்கள்.

தேவன் ஆசரிப்புக் கூடாரத்தை ஸ்தாபிக்கக் கூறின போது, சீத்திம் மரத்தால்  பலிபீடத்தை உண்டுபண்ணி, அதின் நாலு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கி, கொம்புகள் பலிபீடத்தோடு இணைந்து, ஏகமாய் இருக்கவேண்டும் என்று யாத் 27:1,2ல் கட்டளையிட்டார். பலிபீடத்தின் கொம்புகள், பழைய  ஏற்பாட்டிலும், தேவனுடைய இரட்சிப்பின் பெலனைக் குறிப்பிடுகிறது.  ஆகையால் தான் அதோனியாவும், யோவாப்பும் சாலொமோனுக்குப் பயந்து   எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டார்கள்.  பாவத்திலிருந்து இரட்சிப்பு, இயேசுவின் பிறப்பில் தோன்றினாலும், அவருடைய சிலுவை மரணத்தில் அது முழுவதும் நிறைவேறினது. ஆகையால் நமக்கென்று காணப்படுகிற ஒரே பலிபீடமாகிய சிலுவையில் ஜீவனைக் கொடுத்த  நம்முடைய இரட்சண்ய கொம்பாகிய இயேசுவை பிடித்துக் கொள்ளுங்கள்.  அப்போது அவர் உங்களை இரட்சித்து, இரட்சிப்பின் பெலனை உங்களுக்குக்  கட்டளையிட்டு, உள்ளும் புறம்பும் மேய்ச்சலை கண்டடையும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae