இயேசு ஏழ்மை கோலம் எடுத்தார் (Jesus took the form of poor)

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள் (லூக்கா 2:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3cfWfJXrMRc

இயேசு பிறந்த வேளையில், நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க அவருடைய பெற்றோர் தேவாலயத்திற்குக் கொண்டு சென்றார்கள். அவர்கள், எல்லாரும் செலுத்துகிற ஒரு வயதான ஆட்டுக்குட்டியை  சர்வாங்கதகனபலியாக செலுத்தத் திராணியில்லாத, ஏழைகளாய் காணப்பட்டார்கள். ஆகையால், நியாயப்பிரமாணத்தின் படி இரண்டு காட்டுப்புறாக்களையும், இரண்டு புறாக்குஞ்சுகளையும்,   சர்வாங்கதகனபலியாகவும், பாவநிவாரணபலியாகவும் கொடுக்கும் படிக்குக் கொண்டுவந்தார்கள். இயேசு ஐசுவரிய சம்பன்னர், பூமியும் அதின் நிறைவும் அவருடையது, காண்கிறவை எல்லாம் அவருக்கென்றும் அவர் மூலமாகவும் சிருஷ்டிக்கப்பட்டது. இருப்பினும், அவர் நமக்காக ஏழையானார்.  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே என்று 2 கொரி. 8:9ல் எழுதப்பட்டிருக்கிறது.  இயேசு ஏழ்மை கோலம் எடுத்து இந்த பூமியில் அவதரித்ததின் நோக்கம், சிறுமைப் பட்ட நிலையில் காணப்படுகிற ஜனங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவும் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, ஏழைகளுக்கு உதவிசெய்வதைத் தர்ம ஊழியம் என்று வேதம் அழைக்கிறது. பர்னபாவும், சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினார்கள் என்று அப். 12:25 கூறுகிறது. ஆகையால் தான் தர்மம் செய்வதையும் ஓர் ஊழியமாகக் கருதுங்கள். தேசத்தில் எளியவர்கள் இல்லாமல் இருப்பதில்லை என்று உபா.15:11ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவும் தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று மத். 26:11ல் கூறினார்.  எதற்காய் ஏழைகளைக் கர்த்தர் தேசங்களில் நம் நடுவில் வைத்திருக்கிறார்? இருக்கிற கர்த்தருடைய பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக. உங்களுடைய விஷேசித்த நாட்களிலும்,    பண்டிகை நாட்களிலும் எளியவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன்  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்,    தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்    அந்நியனாயிருந்தேன் என்னைச்  சேர்த்துக்கொண்டீர்கள்,    வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு  வஸ்திரங்கொடுத்தீர்கள்,    வியாதியாயிருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள்,    காவலிலிருந்தேன் என்னைப் பார்க்கவந்தீர்கள் என்று இயேசு கூறினார், அப்போது   வலப்பக்கத்தில் நின்றவர்கள் நாங்கள் எப்பொழுது உம்மை இந்த நிலையில் கண்டோம் என்றபோது,    மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ    அதை எனக்கே செய்தீர்கள் என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்து விடாதிருங்கள். ஏழைகளையும்    கைவிடப்பட்டவர்களையும் கர்த்தர் தன்னுடைய  சகோதரர்களாகக்  கருதுகிறார்.   அவர் திக்கற்றப் பிள்ளைகளின் தகப்பனாகக் காணப்படுகிறார்.

கிரியையில்லாத  விசுவாசம் செத்தது என்று வேதம் கூறுகிறது. நாம் விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிறவர்கள். நாம் விசுவாசிகள் என்பதையும், நம்முடைய விசுவாசத்தையும், நம்முடைய செயல்களில் வெளிப்படுத்த வேண்டும்.  சிறுமைப்பட்டவர்கள் மேல் நீங்கள் உங்கள் சிந்தையை வைத்து உதவி செய்யும் போது, கர்த்தர் உங்களைப் பாக்கியவான்களாய் மாற்றுவார்,  தீங்கு நாட்களில் உங்களை விடுவிப்பார், அவர் உங்களைப் பாதுகாத்து, உங்கள் சத்துருக்களின் கரங்களிலிருந்து தப்புவிப்பார், உங்கள் வியாதிகளின் நேரத்தில் உங்களைத் தாங்கி, உங்கள் வியாதியின் படுக்கையை மாற்றிப் போடுவார். யோபு,   முறையிடுகிற ஏழையையும்    திக்கற்ற பிள்ளையையும்    உதவியற்றவனையும் இரட்சித்தான்,    குருடனுக்குக் கண்ணும்    சப்பாணிக்குக் காலுமாயிருந்தான்,    எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்தான், ஆகையால் கர்த்தர் அவன் இழந்ததை எல்லாம் இரட்டிப்பாய் கொடுத்து ஆசீர்வதித்தார். நீங்களும் சிறுமை பட்டவர்கள் மேல் சிந்தையை வைத்து, ஏழைகளுக்கு உதவிசெய்யும் போது, கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae