இயேசு என்று பேரிடுவாய் (You shall call His Name Jesus)

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக,  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் (மத். 1:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/638yaivYzPo

இந்தப் பூமியில் தோன்றின, உச்சரிக்கப்பட்ட எல்லா நாமங்களைப்  பார்க்கிலும் மேலான நாமம் இயேசு என்ற நாமம். இனிமையான இந்த நாமத்தைக் கேட்கும் போது நம்முடைய ஆவியிலும், ஆத்துமாவிலும்  களிகூருதல் உண்டாகிறது. இயேசு கிறிஸ்துவின் ஜெநநத்தின்  விவரத்தைக்  குறித்து மத்தேயு எழுதும் போது, ஆபிரகாமிலிருந்து இயேசு வரைக்கும் சுமார் இரண்டாயிரம் வருட வம்சவரலாறைக் குறித்து எழுதினார். அதுபோல, லூக்கா, ஆதாமிலிருந்து இயேசு வரைக்கும் சுமார் நான்காயிரம் வருட வம்சவரலாறைக் குறித்து எழுதினார். சீனா  தேசத்துத்  தத்துவ  ஞானி கன்பூசியஸ் பிறந்த காங்க் குடும்பத்தின், சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு வருட வம்ச வரலாறுதான், இன்றிலிருந்து எழுதப்பட்ட மிகப்பெரிய மனித வரலாறு என்பதாகக்  கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் கூறுகிறது. ஆனால், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவதரித்ததைக் குறித்து எழுதப்பட்ட வம்ச வரலாறு, இன்றிலிருந்து ஆறாயிரம் வருடத்திற்கு மேற்பட்டது.  

எகிப்பதில் அடிமைகளாய் காணப்பட்ட எபிரேய ஜனங்களை விடுவிக்கும் படிக்காகத் தேவன் மோசேயை தெரிந்தெடுத்தார். அவன் ஆண்டவரிடம், அவர்கள் உம்முடைய நாமம் என்ன என்று கேட்கும்போது நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர், இருக்கிறவராகவே இருக்கிறேன் (I Am that I Am) என்று கூறி, இருக்கிறேன் (I Am) என்றவர், என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். உங்களுக்கு நான் என்னவாக மாற நீங்கள் விரும்புகிறீர்களோ, நான் அவ்வாறு மாறுவேன் என்பது இருக்கிறேன் அந்த வார்த்தையின் அர்த்தமாய் காணப்படுகிறது. இயேசு உங்களுடைய ஆசீர்வாதமாய் மாற நீங்கள் விரும்பினால் அவ்வண்ணமாக அவர் உங்களுக்கு விளங்குவார், உங்களுக்கு பரிகாரியாய் மாறவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் பரிகாரியாக மாறுவார். அவ்வாறு நீங்கள் விரும்புகிற ஆசீர்வாதங்களைத் தருவதற்கு அவருடைய நாமம் போதுமானது. இருக்கிறேன் (I Am) என்ற நாமம் யோவான் சுவிஷேத்திலும் ஏழுமுறை வருகிறது. இயேசு தன்னைக் குறித்துக் கூறும் போது, ஜீவ அப்பம் நானே என்றும், நானே உலகத்தின் ஒளி என்றும், நானே வாசல் என்றும், நானே நல்ல மேய்ப்பன் என்றும், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றும், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றும், நானே மெய்யான திராட்சைச் செடி என்றும் கூறினார். ஆகையால் இயேசு என்ற நாமத்திற்கு ஒத்த வல்லமையான நாமம் இப்பூமியில் இல்லை.

இயேசு, தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. மனுகுலத்தின்  பாவங்களிலிருந்து அவர்களுக்கு விடுதலையைக் கொடுப்பதற்கு இயேசுவால் மட்டும் கூடும். ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை என்று பிர. 7:20 கூறுகிறது. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள் என்று ரோமர் 3:23 கூறுகிறது. ஆகையால் இப்பூமியில் தோன்றின, தோன்றப்போகிற அத்தனை பேருக்கும் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு இயேசு வேண்டும். உலகத்தின் ஜனங்களில் அனேகர் பாவத்திலிருந்து பரிகாரம் தேட பல வழிகளைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் இயேசுவைத் தவிரப் பாவங்களிலிருந்து விடுதலையைத் தர ஒருவராலும் கூடாது. ஆகையால், இன்றே இயேசுவிடம் வந்துவிடுங்கள், அப்போது அவர் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பவராக வெளிப்பட்டு நீங்கள் விரும்புகிற நன்மைகளை உங்கள் வாழ்க்கையில் கட்டளையிடுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae