தேவனையும் மனிதனையும் பிரிப்பது எது? (What separates God and men?)

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது (ஏசாயா 59:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/M55znCQlUvo

ஒரு வருடத்தின் கடைசி நாட்களில் கிருபையாய் கர்த்தர் நம்மை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். புதிய வருடத்திற்குள் நாம் பிரவேசிப்பதற்கு முன்பு நம்முடைய மீறுதல்களையும், அக்கிரமங்களையும், பாவங்களையும் அறிக்கையிட்டு அவற்றை விட்டுவிடுகிறவர்களாய் காணப்பட வேண்டும். பழைய பாவங்களோடு புதிய வருடத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது. அது நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் தருகிற ஆசீர்வாதங்களுக்குத்  தடையாகக் காணப்பட்டுவிடும். 

உங்கள் அக்கிரமங்களும், பாவங்களும் தேவனுக்கும் உங்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்குகிறது, அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.   ஆதி பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் பாவம் செய்கிற வரைக்கும் பகலின் குளிர்ச்சியான வேளையில் கர்த்தர் ஏதேனில் வந்து அவர்களோடு உலாவுகிறவராகவும், பேசுகிறவராகவும் காணப்பட்டார். அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் விலக்கப்பட்ட விருட்சத்தின்  கனியைப் புசித்து பாவம் செய்த போது, அவர்களை  ஏதேனிலிருந்து   துரத்திவிட்டார். அவர்களுடைய பாவம் தேவனுக்கும் அவர்களுக்கும் இடையே பிரிவினையைக் கொண்டுவந்தது.  இஸ்ரவேல்  ஜனங்கள் பாவம் செய்து, அவர்களை ஜெநிப்பித்த கன்மலையாகிய தேவனை நினையாமல், அவர்களைப் பெற்ற தேவனை மறந்தபோது, கர்த்தர் அவர்களைப் புறக்கணித்து: என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன், அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன், அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி, உண்மையில்லாத பிள்ளைகள் என்று வேதனையோடு கூறியதை உபா.32:18-20ல் வாசிக்கமுடிகிறது. அவர்களுடைய பாவத்தினிமித்தம் கர்த்தருடைய முகம் அவர்களுக்கு மறைக்கப்பட்டது. அதுபோல உங்களுடைய பாவங்கள் உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதைக் கூட தடைசெய்துவிடும். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும்  கேளேன் உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது என்று ஏசாயா 1:15ல் எழுதப்பட்டிருக்கிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, வருடத்தின் கடைசியில் நாம்  காணப்படுகிற இவ்வேளையில்,  நம்மை நாமே உய்த்து ஆராய்ந்து பார்க்கிறவர்களாய் காணப்படுவோம். ஆவியான தேவன்   அறிக்கை செய்து விட்டுவிடும் படிக்கு உணர்த்துகிற அக்கிரமங்களையும், பாவங்களையும் அறிக்கை செய்து விட்டுவிடுவோம். பாவங்களை மறைக்கிறவர்களுக்கு வாழ்வு இல்லை, ஆனால் அறிக்கைச் செய்து விட்டுவிடுகிறவர்களுக்கு இரக்கம் நிச்சயம் உண்டு. இயேசு கல்வாரிச் சிலுவையில் சிந்தின இரத்தம் நம்முடைய பாவங்களற  நம்மை கழுவிச்  சுத்திகரிப்பதற்கு  போதுமானதாய் காணப்படுகிறது. ஆகையால் என்னை சுத்திகரியும் என்று வேண்டுதல் செய்து புதிய நன்மைகளைப்  புதிய வருடத்தில் சுதந்தரித்துக்கொள்ளுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae