மறவாதே (Forget Not)

சங் 103:1,2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/z3XjCGzjOPA

ஒவ்வொரு ஜெபத்தின் முடிவில் மேற்குறிப்பிட்ட ஜெபத்தை ஏறெடுக்க நாம் தவறுவதில்லை. ஆனால் அதில் சொல்லப்பட்டத்தின்படி அநேகராகிய நாம் செய்வதில்லை. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய் என்று உபா 15:15 கூறுகிறது. ஆண்டவர் உங்களை மறவாமல் நினைக்கிறார். உள்ளங்கையில் உங்களை வரைந்துவைத்து ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவாகவே இருக்கிறார். பெற்ற தாய் தகப்பன் மறந்துபோனாலும், நம் ஆண்டவர் ஒருபோதும் உங்களை மறப்பதில்லை. அதுபோல, நீங்களும் கர்த்தர் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பண்ணினதை நினைத்து பார்த்து, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பாவத்திற்கு அடிமைகளாக இருந்த உங்களை ஆண்டவர் இரட்சித்தார். அநேக சடங்காச்சாரங்களுக்கு அடிமைகளாக இருந்த உங்களுக்கு சத்தியம் இன்னது என்று கற்று கொடுத்தார். உளையான சேற்றில் வாழ்ந்துகிடந்த நம்மை ஆண்டவர் மீட்டெடுத்தார் என்பதை நாம் மறந்துபோய்விட கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய பாவங்களை நினைத்துப்பார்க்கவேண்டுமென்று அல்ல; இரட்சிப்புக்கு முன்னிருந்த அடிமைத்தனத்தை நினைத்துப்பார்க்கவேண்டும்.

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபே 2:13) என்று வசனம் கூறுகிறது. கடந்த வருஷத்தில் ஒருவேளை நீங்கள் ஆண்டவருக்கு தூரமாயிருந்திருக்கலாம். இந்த வருஷத்தில் எவ்வளவாய் ஆண்டவர் உங்களை அவர் பக்கம் இழுத்துக்கொண்டார் என்பதை மறந்துபோய்விடாதிருங்கள். அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று எபே 2:12 கூறுகிறது.

பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள் என்று உபா 32:7 கூறுகிறது. பூர்வகாலங்களில் நீங்களும் உங்கள் குடும்பமும் எப்படி இருந்தது என்று உங்கள் தகப்பனிடமும், மூத்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். அப்பொழுது உங்களை மீட்டெடுத்து, இஸ்ரவேலின் காணியாட்சிக்குள் உங்களை கர்த்தர் கொண்டுவந்ததின் மேன்மையை அறிந்துகொள்ளுவீர்கள். ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறவர் மாத்திரமல்ல; அவர் நினைப்பூட்டுகிறவர் என்று யோவான் எழுதி வைத்திருக்கிறான். ஆகையால் பரிசுத்த ஆவியானவர் தாமே கர்த்தர் உங்களுக்கு இந்த வருஷத்தில் செய்த நன்மைகளை நினைப்பூட்டும்படி அவரிடம் கேளுங்கள். ஆவியானவர் நினைப்பூட்டுகிற எல்லா காரியத்திற்காகவும் மறவாமல் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org