அதிசயமாய் நடத்தினார்  (Miraculously led us)

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை (யோவேல் 2:26).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sdcGL57ZRnk

தேவன், 2025ம் ஆண்டு முழுவதும் நம்மை அதிசயமாய் நடத்தினார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரைக்கும் அவருடைய கண்களை நம்மேல் வைத்து, பாதுகாத்து, பராமரித்து, போஷித்து நன்றாய் நடத்தினார்.  யாக்கோபைக் குறித்து அவர் கூறும் போது, பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும்   அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார் என்று உபா. 32:10ல் எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் சபை  வனாந்தரத்தில் காணப்பட்ட நாற்பது வருடங்களும் கர்த்தர் அவர்களை ஒவ்வொருநாளும் அதிசயமாய் நடத்தினார், அவர்களோடு மேக ஸ்தம்பமாய், அக்கினி ஸ்தம்பமாய் உடன் சென்றார், வானத்தின் அப்பமாகிய மன்னாவினால் போஷித்தார், கன்மலையின் தண்ணீரினால் தாகம் தீர்த்தார், அவர்கள் வஸ்திரங்கள்  பழையனவாகிப்  போகவில்லை.  ஆகையால் அவர்கள் பூமியிலுள்ள ஜனங்கள் எல்லாரிலும்   விசேஷித்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர்களைப் போலவே கர்த்தர் நம்மையும் அதிசயமாய் இந்த வருடம் முழுவதும் நடத்தினார் என்பதை நன்றியறிதலோடு நினைத்துப்பாருங்கள்.

வருடத்தின் இறுதிநாளாகிய இன்று, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த தேவனைத் துதிக்கவும், நன்றி செலுத்தவும் மறந்துவிடாதிருங்கள். சங்கீதக்காரனாகிய தாவீது தன் ஆத்துமாவோடு, அதாவது உள்ளான மனிதனோடு பேசும்போது,  என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி, என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று கூறுகிறதை சங்.103:1,2ல் வாசிக்கமுடிகிறது. அவர் அக்கிரங்களை எல்லாம் மன்னித்தார் என்றும், நோய்களைக் குணமாக்கினார் என்றும், உயிரை ஆபத்துகளுக்கும் அழிவுக்கும் விலக்கி மீட்டார் என்றும், கிருபையினாலும் இரக்கங்களினாலும் அலங்கரித்தார் என்றும், நன்மைகளினால் திருப்தியாய் ஆசீர்வதித்தார் என்றும் நன்றியோடு அறிக்கையிடுகிறதைப்  பார்க்கமுடிகிறது. நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் இப்படிப்பட்ட நன்மைகளைச் செய்தார் என்பதை நினைத்து, நினைத்து ஆண்டவரைத் துதியுங்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே, மருத்துவமனைகளிலும், சிறைச் சாலைகளிலும், தெருவோரங்களிலும், கைவிடப்பட்ட நிலைகளிலும், கிறிஸ்துவின் நிமித்தம் உபத்திரவங்களை அனுபவிப்பவர்களையும் நினைத்துப் பாருங்கள். அப்பொழுது கர்த்தர் நம்மை எவ்வளவு ஆசீர்வதித்து உயர்த்தி மேன்மையாய் வைத்திருக்கிறார்  என்பதைப் புரியமுடியும். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வேலைகளுக்காகவும், குடும்பங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், சபைக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஒருநாளும் கர்த்தர் செய்த உபகாரங்களை மறந்து போகிறவர்களாய் காணப்படாதிருங்கள். அவர் உங்களுடைய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் பாராட்டின சொல்லிமுடியாததும், வார்த்தைகளால் விவரிக்கக் கூடாததுமான ஈவுகளுக்காக நன்றி செலுத்தும் போது, தேவன், உங்களைப் புதிய வருடத்தில் இன்னும் அதிகமாய்   ஆசீர்வதித்து, ஜெயமாக நடத்துவார்!

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae