உமது அடியானுக்கு நன்மை செய்தீர் (You have dealt well with Your servant) 

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். சங்கீதம் 119:65.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3Tm0odF2rmY

வேதத்தில் காணப்படுகிற அதிகாரங்களில் சங்கீதம் 119 மிகவும் பெரியது. 176 வசனங்கள் உண்டு. எபிரேய மொழியில் காணப்படுகிற 22 எழுத்துக்களைத் தலைப்புகளாகக் கொண்டு   ஒவ்வொன்றின் கீழ் 8 வசனங்களாக இந்தச் சங்கீதம் பிரித்தெழுதப்பட்டுள்ளது. வசனம்,  பிரமாணம், சாட்சி, கட்டளை, கற்பனை என்று வேத வார்த்தைகளை  முக்கியப்படுத்தி எழுதப்பட்ட ஓர் உன்னதச் சங்கீதம்.

சங்கீதக்காரன் தன்னை நன்றாய் நடத்திக் கொண்டு வந்த தேவனை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறதை மேற்குறிப்பிட்ட வசனத்தின்மூலம் பார்க்கமுடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே ஒரு வருஷத்தின் கடைசி மாதத்தில் வந்திருக்கிறோம். கர்த்தர் கிருபையாய் நம்மை இதுவரை நடத்திக் கொண்டுவந்தார். அவருடைய பாதுகாப்பும், நடத்துதலும் இல்லையென்றால் ஒருநாளைக் கூட கடத்துவது இயலாத  காரியம். ஆகையால்,   தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடு எம்மாத்திரம்? என் ஊழியம் எம்மாத்திரம் என்று அறிக்கையிட்டு, நன்றி செலுத்துகிறவர்களாக நாம் காணப்பட வேண்டும். 

வசனத்தின்படி நடத்தப்படுகிற வாழ்க்கை மேன்மையானது. என்னை நன்றாய் நடத்தினீர் என்று சொல்லுவதைப்பார்க்கிலும், உமது வசனத்தின்படி என்னை நடத்தினீர், என் குடுப்பத்தை நடத்தினீர், என் ஊழியத்தை நடத்தினீர் என்று அறிக்கையிடுவது மேன்மையானது. வசனத்தின்படி நடத்தப்படுகிற ஜீவியமே நம்முடைய வாழ்க்கைத்தரமாக (Standard of living) காணப்படவேண்டும். இந்நாட்களில் உலக ஜனங்களை முன்மாதிரியாக (Role Model) வைத்து வாழ விரும்புகிறோம். உலகத்தின் வேஷங்களை பின்பற்றி  அவற்றை வாழ்க்கைத்தரமாக்க முயல்கிறோம். நம்முடைய பாரம்பரியங்கள்  மனுஷனுடைய கோட்பாடுகளினால் தேவனுடைய வசனத்தை மீறி அவற்றையே முக்கியப்படுத்துகிறோம்.  இவைகள் மணலின்மேல் கட்டியெழுப்புகிற வாழ்க்கைக்கு ஒப்பானது. அவைகள் நிலைநிற்பதில்லை.  வசனத்தின்படி கட்டப்படுகிற வாழ்க்கை தான் என்றும் நிற்கும். பெருமழை சொரிந்து பெருவெள்ளம்  வந்து பெருங்காற்று அடித்து மோதினாலும் வசனத்தின்படி கட்டப்படும் வாழ்க்கையானது என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

கர்த்தர் அவருடைய வசனத்தின்படி வாழ விரும்புகிறவர்களை நன்றாய் நடத்துகிறவர். இந்த புதிய மாதத்தில் ஆண்டவருடைய வசனத்தின்படி வாழ உங்களை முழுவதும் அர்ப்பணியுங்கள். ஆண்டவர் யோசுவாவிடம்  பேசும் போது, இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் என்று வாக்குக் கொடுத்தார். அதுபோல நீங்களும் கர்த்தருடைய  வார்த்தையைத் தியானித்து, அதன்படி வாழும் போது உங்கள் காரியங்கள் வெற்றியாய் மாறும், நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். 

கர்த்தருடைய பிள்ளைகளே, இதுவரை உங்களுக்கு உதவிசெய்து உங்களை நடத்திக் கொண்டுவந்த எபிநேசருக்கு நீங்கள் நன்றி செலுத்தும்போது, இனிமேலும் அவர் உங்களுக்கு உதவி செய்து, நன்மைகளைத் தந்து, நன்றாய் நடத்துவது உறுதி.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae