எபே 5:20,21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xmO3xCczCEU
தமிழ் எஃப்எம் (FM) ரேடியோ அலைவரிசையில் சொல்லுவதை கேட்டிருக்கிறீர்களா? அவர்கள் சொல்லுவார்கள் இந்த Radio FM 24/7,அதாவது 24 மணிநேரமும் 7 நாட்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்று கூறுவார்கள். அதுபோலத்தான் 24/7 மணிநேரமும் அதாவது எப்பொழுதும் நாம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும் என்று பவுல் எபேசியருக்கு எழுதும்போது கூறுகிறான். எப்பொழுதும் என்றால் எல்லா நேரங்களிலும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று மந்திரம் சொல்வதைப்போல சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நம்முடைய ஆவியில் நாம் எப்பொழுதும் நன்றி நிறைந்த இருதயத்தோடு காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
24 மணிநேரத்தில் நாம் கடந்து செல்லும் பாதையில் ஏற்றமும் காணப்படும், தாழ்வும் காணப்படும். நாம் ஏற்றம் வந்தாலும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும், தாழ்வு வந்தாலும், எல்லாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும். ஒரு ஊரில் 70 வயது மூதாட்டி காணப்படுகிறார்கள். அவர்கள் இயேசுவை மிகவும் நேசிப்பவர்கள். அவர்கள் தன்னுடைய 18வது வயதில் ஒரு பக்கம் பக்கவாதம் வந்ததால், சரீரத்தில் ஒரு பகுதி முழுவதும் செயலிழந்து போய்விட்டது. அந்த நோய் வந்த நாளிலிருந்து சுமார் 52 வருஷ விசுவாச வாழ்க்கையில், ஒரு நாள் கூட ஆண்டவரை அவர்கள் கேள்விகேட்கவில்லையாம், ஒருபோதும் ஆண்டவரை குறித்து முறுமுறுக்கவில்லையாம். இத்தனை வருஷங்களுக்கு ஆண்டவர் கொடுத்த நாட்களுக்காக தேவனை ஒவ்வொருநாளும் ஸ்தோத்தரித்தார்களாம். இப்படிப்பட்ட சாட்சிகளிலிருக்கும்போது, நாமெல்லாம் எவ்வளவாய் ஆண்டவருக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று யோசித்துப்பாருங்கள். யார் அதிகமாக ஸ்தோத்திரம் செலுத்துகிறார்களோ, அவர்கள் அதிகமாக தேவனிடம் அன்பும் விசுவாசமும் செலுத்துகிறவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் (5:18) என்று வசனம் கூறுகிறது. மதுபானம் வெறிகொள்ளுகிற கிறிஸ்தவர்கள் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் சொல்லுவது இயலாத காரியம். அடுத்தது, பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் மாத்திரமே தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த முடியும். இன்று பரிசுத்த ஆவியினால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுபவர்களும், ஆவியின் அபிஷேகத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுபவர்களும், அந்நிய பாஷையின் வரத்தை பெற்றிருக்கிறேன் என்று சொல்லும் திரளான கிறிஸ்தவர்கள், இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சி சாப்பாட்டிற்காக முறுமுறுத்ததுபோல, அநேக காரியங்களை குறித்து முறுமுறுத்துக்கொண்டே தான் காணப்படுகிறார்கள். சக ஊழியர்களை குறித்து, விசுவாசிகளை குறித்து, உறவுகளை குறித்து முறுமுறுத்து கொண்டே தான் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உண்மையாகவே ஆவியினால் நடத்தப்படுகிறார்களா என்பதே கேள்விக்குறியாக காணப்படுகிறது. எல்லாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தாமல் முறுமுறுத்துக்கொண்டே இருப்பவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுபவர்கள் அல்ல. பரிசுத்த ஆவியினால் நிரப்பட்டவர்கள் எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் செலுத்துவார்கள். இன்றே நீங்களும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து நீங்கள் கடந்து வந்த எல்லா காரியத்திற்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

