நீங்கள் ஆசீர்வாதமாயிருக்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (You are blessed to be a blessing)

உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார் (ஆதி. 12:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iF8tFHPeOVY

ஆபிராம் ஊர் என்ற கல்தேயருடைய தேசத்தில் காணப்பட்ட வேளையில் தேவனிடத்திலிருந்து முதல் அழைப்பைப் பெற்றான்.  ஸ்தேவான் அதைக்குறித்துக் கூறும் போது, சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம்  காரானூரிலே, அதாவது ஆரானிலே, குடியிருக்கிறதற்கு முன்னமே  மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார் என்று அப். 7:2,3ல் எழுதப்பட்டிருக்கிறது.  ஆபிராம் தேவ அழைப்பைப் பற்றி தன் தகப்பனாகிய தேராகுவிடம் கூற, அவர்கள் குடும்பமாய் புறப்பட்டு கானான் தேசத்திற்கு நேராக வந்தார்கள். வரும் வழியில் ஆரான் என்ற ஊர் வந்தவேளையில், கானானுக்கு நேராக வருவதை நிறுத்திவிட்டு,  ஆரானிலே தங்கி விட்டார்கள். ஆபிராம்  தேவனுடைய  அழைப்பிற்குப் பாதியளவு கீழ்ப்படிகிறவனாய் காணப்பட்டான், தேவ சித்தம் இல்லாதபடி அவன் தகப்பனையும், சகோதரன் மகனாகிய  லோத்தையும்  அழைத்து வந்தது, அவன் முழுமையுமாய்  கீழ்ப்படிவதற்குத் தடையாகக் காணப்பட்டது. தேராகு என்ற  பெயருக்குத் தாமதம் என்றும் ஆரான் என்பதற்கு உலர்ந்த, வறண்ட, கனியற்ற நிலம் என்பதும் பொருளாய் காணப்படுகிறது. ஆகையால் ஆபிராமுடைய  வாழ்கையில் வரவேண்டிய ஆசீர்வாதம் காலதாமதமாகியும்,  கனியற்றதுமாய்  போய்விட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே, பாதி கீழ்ப்படிதல் என்பது முற்றிலும் கீழ்ப்படியாமைக்குச்  சமம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற தேவையில்லாத சுமைகள் உங்கள் நன்மைகளுக்குத்  தடையாய் காணப்படுகிறது என்பதை மறந்து விடாதிருங்கள்.

ஆபிராம் ஆரானிலே எத்தனை நாட்கள், வருடங்கள் தங்கியிருந்தான் என்பதை அறியமுடியவில்லை. ஆனால் அவன் எழுபத்தைந்து வயதான வேளையில் அவன் தகப்பனாகிய தேராகு மரித்தான். பின்பு  தேவனிடத்திலிருந்து  இரண்டாவது அழைப்பைப் பெற்றான். கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்று   ஆதி. 12:1ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் ஆபிராமுக்கு சொன்னபடியே அவன் கீழ்ப்படிந்து போனான் என்று ஆதி. 12:4 கூறுகிறது. அவன்  விசுவாசத்தோடு தான் போகும் தேசம் எது என்று அறியாதிருந்தும் கர்த்தருடைய வார்த்தையை நம்பி அணைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றான். அவனுடைய பூரண கீழ்ப்படிதல் அவனுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நீங்களும் பெற்றுக் கொள்ள அவர் உங்களிடமிருந்தும் பூரண கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்.

ஆபிரகாமை கர்த்தர் ஏழு விதங்களில் ஆசீர்வதித்தார் என்று ஆதி.12:2,3 கூறுகிறது. முதலாவது, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்கு கொடுத்தார். இன்றைக்கும் கிறிஸ்தவர்களும்,யூதர்களும், இஸ்லாமியர்களும் ஆபிரகாமைத் தகப்பன் என்று அழைக்கின்றனர். இரண்டாவது, உன்னை ஆசீர்வதிப்பேன் என்று பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்துக் கூறினார். அவனுடைய செல்வம் பூமி கொள்ளாததாய் காணப்பட்டது. மூன்றாவது, உன் பெயரைப் பெருமைப் படுத்துவேன் என்றார், அவனுடைய பெயர் வேதத்தில் சுமார் 230 இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது, அதில் 67 முறை புதிய ஏற்பாட்டிலும் வருகிறது. அவருடைய பெயர் பூமியில் இன்றைக்கும் கனத்திற்குரியதாய் காணப்படுகிறது. நான்காவது, நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். அவன் ஆசீர்வதிக்கப்படும் போது, அனேகருடைய ஆசீர்வாதத்திற்கு  வாய்க்காலாய் காணப்படுவான் என்று கருதி கர்த்தர் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். ஐந்தாவது, உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்றார், இன்றைக்கும்  யூதர்களுக்குத் துணையாயிருக்கிற தேசங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறது. ஆறாவது, உன்னைச்  சபிக்கிறவர்களைச் சபிப்பேன் என்றார்.  இஸ்ரவேல் தேசத்தை  அழித்தொழிக்கும் படிக்கு முயன்றவர்கள் அழிக்கப்பட்டார்களே ஒழிய, அவர்கள் இன்றைக்கும் வாழ்ந்திருக்கிறார்கள். ஏழாவது, பூமியிலுள்ள வம்சங்கள் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்குக் கொடுத்தார்,  ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவின் மூலமாய் நமக்கும் கிடைத்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, நீங்கள் விடவேண்டியவற்றை விட்டு, பூரணமாய் ஆண்டவருக்குக்  கீழ்ப்படியும் போது, தேவன் உங்களையும் இவ்விதமாக ஆசீர்வதித்து உயர்த்துவது நிச்சயம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae