குறுக்கு சோதனை (Cross check)

சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள்.  சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான் (ஆதி. 16:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/idRhuf6usUQ

கர்த்தருடைய ஜனங்கள், எல்லா விதமான மனுஷீக  ஆலோசனைகளையும் தேவனோடு விசாரித்து, அவைகளின்  நம்பகத்தன்மைகளையும் விளைவுகளை அறிகிறவர்களாகக் காணப்பட வேண்டும். தேவன் ஆதாமிடம், நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.  ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம், அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் மனைவியாகிய ஏவாள் அதின் கனியைப் பறித்து, புசித்து, அவனுக்கும்; கொடுத்த வேளையில், ஆதாம் தேவனோடு குறுக்கு சோதனை செய்யாமல் அதைப் புசித்தான். ஆகையால் மனுகுலம் பாவத்திற்குள் விழுந்தது. 

ஆபிராமுக்கு கர்த்தர் சந்ததியை வாக்குத்தத்தம் செய்திருந்தும் பத்து வருடங்களுக்கு மேல் அவனுக்கும் அவன் மனைவியாகிய  சாராளுக்கும் பிள்ளைகள் இல்லாமல் இருந்தது. ஆகையால் அந்நாட்களின் வழக்கத்தின்படி, சாராள் தனக்கு அடிமைப் பெண்ணாய் காணப்பட்ட எகிப்திய ஸ்திரீயாகிய ஆகாரை தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆபிராம் தேவனோடு விசாரிக்காமல் தன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்தான். ஆகையால் ஆபிரகாமின்  மாம்சீக சந்ததியாக இஸ்மவேல் பிறந்தான். தேவன் வாக்குத்தத்தத்தில்  உண்மையுள்ளவர். இஸ்மவேல் பிறந்து சுமார் பதின்மூன்று வருடங்களுக்குப் பின்பு வாக்குத்தத்தத்தின் குமாரனாக சாராளின்  மூலம் ஈசாக்கு பிறக்கும் படிக்குச் செய்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் வாக்குத்தத்தத்தின் சந்ததிக்கும் மாம்சீக சந்ததிக்கும் பிரிவினைகளும், சண்டைகளும், யுத்தங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஆபிராம் தேவனுடைய சிநேகிதனாயிருந்தும், விசுவாசிகளின் தகப்பனாகவிருந்தும் அவன் தேவனோடு விசாரியாமல் செய்த ஒரு தவறின் விளைவை இன்றைக்கும் அவனுடைய வாக்குத்தத்தத்தின் சந்ததி அனுபவிக்கிறது.

பெரோயா  பட்டணத்தின் ஜனங்கள் அப்போஸ்தலனாகிய  பவுலின் பிரசங்கத்தைக் கூட வசனங்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்ததின் நிமித்தம் தெசலோனிக்கேயில்   உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, கடைசி நாட்களில் எல்லாவற்றையும் நீங்கள் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். அதுபோல, எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால்  உண்டானவைகளோ  என்று சோதித்தறியுங்கள். நீங்கள் தேவ ஆவியின் உதவியோடு காரியங்களைச் சரிபார்க்கிறவர்களாய் காணப்பட்டால், கள்ள உபதேசங்களிலிருந்தும், போலி ஆராதனைகளிலிருந்தும், போலி அற்புதங்களிலிருந்தும், ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்த சத்துருவின் மாய்மாலங்களிலிருந்தும் உங்களைத் தப்புவித்துக் கொள்ளலாம். வாழ்க்கைத் துணைகள் ஒருவருக்கொருவரும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும், விசுவாசிகள் போதகர்களிடமும்  காரியங்களின் நம்பகத்தன்மைகளைச் உறுதிசெய்து கொள்ளுங்கள்.     இந்நாட்களில் உங்களுக்கு ஆலோசனைகள் எவ்விதங்களிலிருந்து வந்தாலும், அதைத் தேவனோடும் அவருடைய வார்த்தையோடும் சரிபார்க்கிறவர்களாய் காணப்படுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae