கர்த்தர் குறிக்கும் நேரம் (The  time appointed by the Lord)

நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது (யாத். 12:41).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/swcTqmxaixY

தேவன் எல்லாவற்றையும் அவர் குறித்த நேரத்தில் செய்கிறவர். அவரை யாரும் துரிதப்படுத்தவும், காலதாமதப்படுத்தவும் முடியாது. அவருடைய பிள்ளைகளாகிய நாம் பொறுமையை இழந்து, பலவழிகளில் அவரைத் துரிதப்படுத்த முயன்று தோற்றுப் போன அனேக வேளைகளுண்டு. ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாயிருந்தும், தன் மனைவியாகிய  சாராளோடு சேர்ந்து கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை துரிதப்படுத்த நினைத்து,  பொறுமையை இழந்து, ஆகாரின் மூலம்  இஸ்மவேலைப் பெற்றெடுத்து,   வாக்குத்தத்தத்தின்  சந்ததிக்கு வேதனையை விதைத்து வைத்துப் போனார்கள்.  ஆனால்  யோபுவின் பொறுமையைக் குறித்து தேவன் புகழுகிறதை வேதத்தின் மூலம் பார்க்கமுடிகிறது. இயேசுவின் தாயாகிய மரியாளும் கானாவூர்  கலியாண வீட்டில் திராட்சரசம் குறைபட்ட போது, இயேசுவின்  வேளையைத்  துரிதப்படுத்த முயல நினைத்தபோது, என் வேளை இன்னும் வரவில்லை என்று கடிந்துகொள்ளப்பட்டதைப் பார்க்கிறோம். 

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தில் நானூற்றுமுப்பது வருஷம் அடிமைகளாய் காணப்பட வேண்டும் என்பது கர்த்தர் நிர்ணயம் பண்ணின காலமாய் காணப்பட்டது. ஆனால் அந்த வருடங்கள் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம், அதாவது அனைத்து இஸ்ரவேலர்களும் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்.  அதன்பின்பு ஒரு நாள் கூட பார்வோனால் இஸ்ரவேல் ஜனங்களை அடிமைப் படுத்த முடியவில்லை. அது போல யூதாவின்  குடிகள் பாபிலோனில் எழுபது வருடம் அடிமைகளாய் காணப்பட வேண்டும் என்பதும் கர்த்தர் குறித்த காலமாய் காணப்பட்டது. அந்த வருடங்கள் முடிந்தவுடன் கர்த்தர் கோரேசசை எழுப்பி விடுதலையைக் கொடுத்தார். தானியேலின் மூலம் எழுபது வாரங்களைக் குறித்த தரிசனத்தைக் கொடுத்தார்,  மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும் அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை  அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின் மேலும் உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது என்று தானி. 9:24ல் எழுதப்பட்டிருக்கிறது.  அவைகள்  7 வாரங்கள், 62 வாரங்கள், மற்றும் 1 வாரம் என்று பிரிக்கப்படுகிறது. 1 வாரம் என்பது 7 வருடங்களைக் குறிக்கிறது, முழுமையான 70 வாரம் என்பது 490 வருடங்களைக் குறிக்கிறது. அதில் அறுபத்தொன்பது வாரங்கள், அதாவது 483 வருடங்களைக்குறித்த தீர்க்கதரிசனங்கள் எழுத்தின்படியே நிறைவேறியாகிவிட்டது. கடைசியில் காணப்படுகிற 1வாரம், அதாவது 7 வருடங்கள்  இனிவரப்போகிற  அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியைக் குறிக்கிறது. அதுவும் அப்படியே குறித்த வேளையில் நிறைவேறும்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களுக்கென்று ஒரு குறித்த வேளையை வைத்திருக்கிறார். உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்கும் வேளையை அவர் முன் குறித்திருக்கிறார். ஊழியங்களில் அடைபட்டுப் போன வாசல்களைத் திறக்க  ஒருகுறிப்பிட்ட தினத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அவருடைய வேளைக்குப் பொறுமையோடு காத்திருக்கிறவர்கள், கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்பும் நாட்கள் வரும்.   அப்போது உங்கள் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae