என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன் (யாத். 33:22)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nCCRy_AmIOs
தேவனுடைய மகிமையைக் காண விரும்பின மோசேயிடம் கர்த்தர், நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்க முடியாது, இதோ, என்னண்டையில் ஓர் இடம் உண்டு, நீ அங்கே கன்மலையில் நில்லு, என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, என் கரத்தினால் உன்னை மூடுவேன் என்றார். கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் அதிகமாய் காணப்பட்டதனால், அதை மோசே பார்க்கும் போது அதைத் தாங்குவதற்கு இயலாத காரணத்தினால் கன்மலை வெடிப்பில் வைத்தும், கரத்தினாலும் அவனை மூடி பாதுகாப்பதைக் குறித்து எழுதப்பட்டிருந்தாலும், கர்த்தருடைய ஜனங்களுக்கு ஆண்டவர் வைத்திருக்கிற இரண்டு விதமான பாதுகாப்பையும்; குறித்து மேற்குறிப்பிட்ட வசனம் கூறுவதாகக் காணப்படுகிறது.
முதலாவது, கன்மலையின் வெடிப்பு என்பது இயேசுவைக் குறிக்கிறது, கல்வாரியில் அவரே உங்களுக்காக பிளவுண்ட கன்மலையானார். அவருடைய காயங்களின் மறைவில் கர்த்தருடைய பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் தண்ணீருக்காக முறுமுறுத்த வேளையில் மோசே தேவனை நோக்கி முறையிட்டான். அப்போது கர்த்தர், ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன், நீ அந்தக் கன்மலையை அடி, அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார், அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். அவ்வண்ணமாகவே நமது கன்மலையாகிய இயேசுவும் கல்வாரிச் சிலுவையில் நமக்காக அடிக்கப்பட்டார். அவருடைய காயங்களின் மறைவில் நம்மை மறைத்து வைத்துப் பாதுகாக்கிறவர். அவர் நம்மைக் கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே என்றும் உன். 2:14ன் படி அழைக்கிறார். அதுபோல கொடூரமான ஜனங்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், அவர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானார் என்று ஏசாயா 25:4ம் கூறுகிறது. இரண்டாவது, கர்த்தர் அவருடைய கரத்தினாலும் நம்மை மூடி பாதுகாக்கிறவர். அவர் தம்முடைய கரங்களினால் உங்களை மூடும் போது விக்கினங்கள் என்ற துன்பங்கள் ஒன்றும் உங்களைத் தொடமுடியாது, பொல்லாங்கனுடைய கண்கள் உங்கள் மேல் படுவதுமில்லை.
கர்த்தருடைய பிள்ளைகளே, மரண ஓலங்களும், யுத்தங்களின் சத்தமும் எங்கும் ஓய்ந்தபாடில்லை. சாலை விபத்துகளும், ஆபத்துகளும், இயற்கைச் சீற்றங்களினால் உண்டாகும் மரணங்களும் எங்கும் நடக்கிறது. கடினமான காலகட்டத்திற்குள்ளாக மனுகுலம் கடந்து செல்லுகிறது. இந்த வேளையில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இயேசு ஒருவரே பாதுகாப்பாய் காணப்படுகிறார். அவருடைய காயங்களின் மறைவும் கரங்களின் பாதுகாப்பும் உங்களைக் கண்ணின் மணி போலப் பாதுகாக்கும். ஆகையால் சூழ்நிலைகள் எதிராகக் காணப்படும் போது பயந்துவிடாதிருங்கள். இப்படிப்பட்ட நிலைகளிலும் கர்த்தர் உங்களைப் பாதுகாத்து அவருடைய தயவினாலும் நன்மையினாலும் உங்களை நிறைவாய் ஆசீர்வதித்து நடத்துவதற்கு அவர் போதுமானவர்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

