ஒரே நாளில் உயர்த்தப்பட்ட யோசேப்பு (Joseph was exalted in one day)

ஆதி 41:42,43 பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zYF4pBJZ8ks

பொதுவாக நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களின் உயர்வு படிப்படியாக வரும். கட்டுமானப்பணி துறையிலிருப்பவர்கள், முதலாவது Supervisor பதவியில் சேருவார்கள், சிலகாலம் சென்றபிறகு அவர்களுடைய திறமையின் அடிப்படையிலும் அவர்கள் அனுபவத்தினடிப்படையிலும் Engineer பதவிக்கு உயர்த்தப்படுவார்கள், பின்பு Senior Engineer பதவிக்கு உயர்த்தப்படுவார்கள், பின்பு Manager , Director போன்ற பதவிக்கு உயர்த்தப்படுவார்கள். எல்லா உயர்வுகளும் படிப்படியாக தான் வரும். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் அவன் ஒரே நாளில், குறைந்த வயதில் அதாவது அவனுடைய முப்பதாவது வயதில், அனுபவம் குறைந்த வயதில், அவன் எகிப்து தேசத்திற்கே அதிகாரியாக உயர்த்தப்பட்டான்.

அவன் ஒரே நாளில் உயர்த்தப்படுவதற்கு முன்பாக பலவிதமான சிட்சையின் பாதையில் அவனை கர்த்தர் நடத்தினார். காரணம் அவன் சுத்த பொன்னாக விளங்கும்படியாக கர்த்தர் அப்படி செய்தார். அடிமையாக விற்கப்பட்ட போது அவன் தன்னுடைய வேலையை உண்மையாக செய்தான். சிறைச்சாலையிலிருக்கும்போதும் கொடுத்த வேலையை உண்மையாக செய்தான், குறிப்பாக சொல்லப்போனால், மாம்சத்தின் இச்சை என்னும் பாவத்திற்கு அவன் விலகி ஓடினான். போத்திபாரின் மனைவி நித்தம் யோசேப்பை தன்னோடு பாவம் கொள்ளும்படி தூண்டினபோதும் அவன் அந்த பாவத்திற்கு விலகி ஓடினான். தேவன் அவனுடைய நடக்கைகளெல்லாவற்றிலும் பிரியமாயிருந்தார்.

தேவ ஜனங்களே, நாம் உயர்த்தப்படுவதற்கு நாம் செய்யவேண்டியவற்றை நாம் செய்யவேண்டும், கர்த்தர் செய்யவேண்டியதை கர்த்தர் செய்வார். நாம் செய்ய வேண்டியது யோசேப்பை போல எந்த நிலையிலிருந்தாலும் உண்மையாக இருக்கவேண்டும், பாவத்திற்கு விலகியோட வேண்டும், ஜீவனுள்ள தேவனையே எல்லாவற்றிலும் சார்ந்திருக்கவேண்டும். கர்த்தர் செய்யவேண்டியது என்னவென்றால், வசனம் சொல்லுகிறது கர்த்தர் யோசேப்போடே கூட இருந்தார், கர்த்தர் யோசேப்பிற்கு தயவை பாராட்டினார், கர்த்தர் யோசேப்பிற்கு வேண்டிய வெளிப்பாட்டு வரங்களை கொடுத்திருந்தார், கடைசியாக, ஏற்ற வேலையில் தேவன் அவனை ஒரே நாளில், ஒரே சூழ்நிலையில், நேரடியாக தேசத்தின் அதி உச்ச பொறுப்பிற்கு உயர்த்தினார்.

உங்களையும் ஆண்டவர் ஒரே நாளில், ஒரே சூழ்நிலையில் அவர் உயர்த்த முடியும். நீங்கள் யோசேப்பை போல உங்கள் எல்லா நடக்கைகளிலும் பரிசுத்தத்தை காத்துக்கொள்ளும்போது, நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். சங் 27:6 கூறுகிறது, இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன். உங்கள் தலை யோசேப்பை போல, மொர்தகாயை போல ஒரே நாளில் உயர்த்தப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org