நல்ல மனுஷனுடைய நடைகள் (The steps of a good man).

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் (சங். 37:23-24).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/3B2vgvAr-EE

நல்ல மனுஷர்களுடைய  சுபாவங்கள் அனேகமாய் காணப்படுகிறது. இலவசமாய் கர்த்தர் ஈந்தளித்த இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட மனுஷன் கர்த்தருடைய பார்வையில் நல்ல மனுஷன்.  எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். இஸ்ரவேலே நீ பாக்கியவான், கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் யார் என்று வேதம் கேட்கிறது. சிமியோனைப் போல பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அவரால் நடத்தப்படுகிற மனுஷன் நல்ல மனுஷன். பரிசுத்தமாய் ஜீவிக்கத் தன்னை அர்ப்பணித்த மனுஷன் நல்ல மனுஷனாய் காணப்படுகிறான். எலிசாவின் பரிசுத்த நடக்கையைக்கண்டு கனம் பொருந்திய சுனேம் ஊராளாகிய ஸ்திரி அவரை பரிசுத்தவான் என்று அழைத்தாள். கொர்நேலியுவைப் போல தேவ பக்தியுள்ளவனும், தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்கிற மனுஷன் நல்ல மனுஷன். காலேப்பைப் போல உத்தமமாய் தேவனைப் பின்பிற்றுகிற மனுஷன் நல்ல மனுஷன். தேவனைத் தேடுவதற்கு உணர்வுள்ள இருதயத்தை உடைய மனுஷன் நல்ல மனுஷன். தன் குடும்பத்தைச் செம்மையாய் நடத்துகிற மனுஷனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கத்தோடும் வளர்த்துகிற மனுஷனும் நல்லமனுஷனாய் காணப்படுகிறான். கர்த்தருடைய ஓய்வுநாளை கனம் பண்ணி, கர்த்தருடைய சமூகத்தைத் தேடுகிற மனுஷன் நல்ல மனுஷன். கர்த்தர் கொடுத்த கனமான ஊழியத்தை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்கிற மனுஷன் நல்ல மனுஷன்.

அப்படிப்பட்ட நல்ல மனுஷர்களாய் நீங்கள் காணப்படும் போது உங்கள் நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். உங்கள் கால்கள்  சறுக்குகிற சூழ்நிலைகள் வரும்போது கர்த்தருடைய கிருபை உங்களைத் தாங்கிக்கொள்ளும்.  ஆகையால் நீங்கள் ஒருநாளும் தள்ளுண்டுபோவதில்லை. யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு, பரிசுத்தமுள்ள வாலிபனாய் காணப்பட்டான், தன் சகோதாரர்களும் தன்னைப் போல நல்லவர்களாய் காணப்பட வேண்டும் என்று விரும்பி அவர்கள் செய்யும்  தவறுகளைத் தகப்பனிடம் கூறினான். அதினிமித்தம் சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, குழியில் தள்ளப்பட்டு, புறஜாதிகளிடம் விற்கப்பட்டான். யோசேப்பு செய்யாத குற்றத்திற்காக போத்திபார் அவனை சிறைச்சாலையில் தள்ளினான்.  ஆகிலும் தேவனுக்குப் பயந்தவனாய், நல்லவனாய் காணப்பட்டான், கறைபடாத ஜீவியம் செய்தான். கர்த்தர் அவன் வழிகளின் மேல் பிரியமாயிருந்தார். ஆகையால் அவனை ஆசீர்வதித்து உயர்த்தி பார்வோனுடைய அடுத்த இடத்தில் நிறுத்தினார். நீங்கள் நல்லவர்களாய் காணப்படும் போது, பரிபூரண ஆசீர்வாதங்களைக் கர்த்தர் உங்களுக்குத் தந்து உங்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.   

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org