விலகாத மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் (The pillar of cloud and the pillar of fire that never depart)

யாத் 13:21,22 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Z_2U6rJ3CCQ

ஒரு தேசத்தையே கர்த்தர் வழிநடத்தி கொண்டுபோன விதத்தைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பகலில் சூரிய வெப்பத்தினால் இஸ்ரவேல் ஜனங்கள் சோர்வடைந்து போகக்கூடாது என்பதற்காக அவர் பகலில் மேகஸ்தம்பத்தைக் கொடுத்தார். இரவில் பாதை தெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காகவும், குளிரினால் அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இரவிலே அவர் அக்கினி ஸ்தம்பத்தைக் கொடுத்தார். சங் 105:39 கூறுகிறது, அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார் என்பதாக.

இன்று நமக்கு இந்த வகையான புலப்படும் வழிகாட்டுதல் இல்லை. அதற்கு பதிலாக நமக்கு ஆண்டவர் வேத வசனத்தைக் கொடுத்திருக்கிறார். சங் 119:105 கூறுகிறது, உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது என்பதாக. “என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ?” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எரே 23:29 கூறுகிறது. ஒரு பிரமிப்பான காரியத்தைப் பாருங்கள். அக்கினி ஸ்தம்பமானது யூதர்களுக்கு மாத்திரம் பாதை காட்டியது; ஆனால், எகிப்து தேசத்தாருக்கு அது இருளாய் இருந்தது. யாத் 14:20 கூறுகிறது, அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று என்பதாக. அதுபோலத்தான் கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய வசனத்தினால் வெளிச்சம் காண்பார்கள்; மற்றவர்கள் அந்த வெளிச்சத்தை காணாமல் இருளையே பார்க்கிறவர்களாக இருப்பார்கள். அதைத்தான் இயேசு சொன்னார், “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” (மத் 11:25) என்பதாக.

பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறவர் என்று வேதம் கூறுகிறது. எப்படி அன்றைக்கு ஆண்டவர் மோசேயிடம் மேகஸ்தம்பத்தில் பேசினாரோ, அதே போல இன்று அவர் அவருடைய வசனத்தைக்கொண்டு பேசுகிறார். எப்படி அன்றைக்கு பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகாமல் இருந்ததோ, இன்றைக்கு அவர் கொடுத்த வசனம் நம்மை விட்டு விலகிப்போகாமல் இருக்கிறது. காரணம் அவருடைய வசனம் வானங்களில் நிலைத்திருக்கிறது. அவர் வசனத்தைக்கொண்டு பேசுவார். உங்கள் வாழ்நாளெல்லாம் பாதைக்கு வெளிச்சமாக அந்த வசனம் உங்களை விட்டு விலகாமல் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org