பாராட்டுதல் (Appreciation)

மத் 8:10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NWM5XAIXJm0

இந்த உலகில் அநேகருக்கு மத்தியில் ஒரு மனிதன் பாராட்டப்பட்டாலோ, தலைவர்கள் பாராட்டினாலோ, பாராட்டைப் பெற்றுக்கொள்ளும் நபருக்கு கனமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அதேவேளையில் இயேசு ஒரு மனிதனைப் பாராட்டுவாரென்றால் வரும் மகிழ்ச்சிக்கு எதை ஒப்பாகச் சொல்ல முடியும். இன்று அநேகருக்கு மற்றவர்களைப் பாராட்டவே மனம் வருவதில்லை. மற்றவர்களைப் பாராட்ட மனமில்லாதவர்கள் தெய்வீக சுபாவம் இல்லாதவர்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இயேசு மக்களைப் பாராட்டுவதிலும் ஊக்குவிப்பதிலும் வல்லவராக இருந்தார். அவர் ஒருமுறை பேதுருவைப் பாராட்டி, “இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு 16:17) என்று கூறினார். அவர் நாத்தான்வேலைப் பாராட்டி, “இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்” (யோவான் 1:47) என்று கூறினார். மக்கள் யாரும் பரிபூரணர்களாக இல்லாவிட்டாலும், இயேசு அவர்களைப் போற்றுவதில் தாராளமாக இருந்தார். ரோமானிய நூற்றுக்கதிபதி, பேதுரு மற்றும் நாத்தான்வேல் அனைவரும் பூரணமான மனிதர்கள் அல்ல. ஆனால் இயேசு அவர்கள் அனைவரிடமும் பாராட்டத்தக்க ஒன்றைக் கண்டார். வேதாகமத்தை பற்றியோ அல்லது உண்மையான தேவனைப் பற்றியோ எதுவும் தெரியாத, மனம் மாறாத, சிலை வழிபாட்டு, இராணுவத் தலைவரிடம் கூட அவர் கண்ட நன்மையைப் பாராட்டிப் பேச அவர் தயங்கவில்லை. இயேசு சொன்ன அந்த வார்த்தையை, ரோமானிய நூற்றுக்கதிபதி தனது வாழ்நாள் முழுவதும் மறந்துவிட்டாரா? இல்லை. அந்த வார்த்தைகளால் அவர் மிகவும் ஊக்குவிக்கப்பட்டிருக்க வேண்டும், அவர் இயேசுவின் சீஷராக மாறியிருக்க வாய்ப்புள்ளது.

சாத்தானின் பிள்ளைகள் மக்களைப் பாராட்டுவதில் கஞ்சத்தனமானவர்கள், அவர்களை விமர்சிப்பதில் வல்லவர்கள். மற்றவர்களைப் பரிகாசம் செய்வதிலே கைதேர்ந்தவர்கள். அநேக வேளைகளில் மற்றவர்கள் இதனால் பெருமைப்பட்டுக் கொள்வார்கள் என்ற பயத்தில், நாம் அவர்களைப் பகிரங்கமாகப் பாராட்டத் தயங்குகிறோம். உண்மையான தெய்வீக மக்களைக் கூட நாம் பாராட்ட முடிவதில்லை. பெரும்பாலான விசுவாசிகள் கிறிஸ்துவிடமிருந்து இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. நாம் நிச்சயமாக யாரையும் முகஸ்துதி செய்யக்கூடாது, ஏனென்றால் முகஸ்துதி சாத்தானுடையது. ஆனால் உண்மையான பாராட்டு என்பது ஒரு தெய்வீக குணம். ஒரு தெய்வீக மனிதன் மற்றொரு சகோதரனுக்கு நன்றி தெரிவிக்கும் வார்த்தையைச் சொன்னால், அந்த ஒற்றை வார்த்தை இயேசுவை முழு மனதுடன் பின்பற்ற அவரை ஊக்குவிக்கும்.

இயேசுவிடம் இந்த நூற்றுக்கு அதிபதி பாராட்டைப் பெற்றுக்கொள்ள மிக முக்கியமான காரணம், அவனுக்குள்ளிருந்த விசுவாசம். இயேசுவின் மீதுள்ள உங்கள் விசுவாசம் பெருகட்டும். அப்பொழுது நீங்களும் இயேசுவிடம் பாராட்டைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org