நீங்கள் கர்த்தருடைய மகிமையாயிருப்பீர்கள் (You will be the display of God’s splendor)

உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள் (ஏசாயா 60:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ls8h8Z8CT6c

கர்த்தர் கிருபையாய் ஒரு புதிய வருடத்திற்குள் நம்மை அழைத்துக் கொண்டுவந்தார். இந்த புதிய வருடம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆசீர்வாதமாகவும், சமாதானமாகவும் காணப்படும் படிக்காக ஜெபிக்கிறேன். இந்த புதிய வருடத்தில் நீங்கள் கர்த்தருடைய மகிமையாகக் காணப்படுவீர்கள். உங்கள் மூலம் வெளிப்படுகிற கர்த்தருடைய மகிமையைப் புறஜாதிகள் காண்கிறபோது, கர்த்தருடைய நாமம் உங்கள் மூலம் மகிமைப்படும். கர்த்தர் சீயோனின்  ஜனங்களுக்காக, அதாவது மணவாட்டி சபையின் அங்கங்களாய் காணப்படுகிற உங்களுக்காகக் கொடுத்த வாக்குத்தத்தமாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. 

முதலாவது,   நீங்கள் நீதிமான்களாயிருப்பீர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் நீதியுள்ளவர், நீதியின் மேல் பிரியப்படுகிறவர், ஆகையால் அவருடைய முகம் நீதிமானை, அதாவது செம்மையானவனை நோக்கியிருக்கிறது என்று சங்.11:7 கூறுகிறது. அவர் நீதியுள்ளவராய் காணப்படுவதினாலே அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் நீதிமான்களாய் காணப்படுவீர்கள். நாம் சுயமாய் நீதிமானாக வாழ்வது கடினம், நம்முடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையும், குப்பையுமாய் காணப்படுகிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமும், நாம் அவர்மேல் வைக்கிற விசுவாசமும் நம்மை நீதிமான்களாய் மாற்றுகிறது. அவ்வாறு நீதிமான்களாய் காணப்படும் போது, அவர் உங்களை ஆசீர்வதித்து, காருண்யம் என்னும் கேடகத்தினால் உங்களைச் சூழ்ந்துகொள்ளுவார் என்று சங்.5:12 கூறுகிறது. அவருடைய காருண்யம், அதாவது அவருடைய தயவு உங்களைச் சூழ்ந்துகொண்டு, உங்களை ஆசீர்வதித்து உயர்த்தும்.

இரண்டாவது, நீங்கள் பூமியைச் சுதந்தரிப்பீர்கள். நீங்கள் நீதிக்குரிய, அதாவது கர்த்தருடைய பார்வையில் செம்மையான ஜீவியம் செய்யும் போது, கர்த்தர் உங்களுக்குப் பூமிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும் தருவார். நம்முடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்கள் பூமியைச் சுதந்தரித்தது போல, உங்களுக்கும் பூமிக்குரிய எல்லா நன்மைகளையும் குறைவில்லாமல் தந்து கர்த்தர் ஆசீர்வதிப்பார். மூன்றாவது நீங்கள் கர்த்தர் நட்ட கிளைகளாயிருப்பீர்கள். ஒரு தோட்டக்காரன் செடிகொடியை நட்டு, நீர்பாய்ச்சி, வளர்த்தி,  பராமரிப்பதைப் போல, ஈசா என்னும் அடிமரத்திலிருந்து துளிராய், கிளையாய் தோன்றினவர், உங்களைப் பராமரித்து உங்கள் சுகவாழ்வைத் துளிர்க்கச் செய்வார். ஆரோனுடைய உலர்ந்த கோலை துளிர்க்கச் செய்தவர், உங்கள் ஆரோக்கியத்தைப் பெருகப் பண்ணுவார். அவருடைய செட்டைகளின் கீழ், அதாவது அவருடைய பிரசன்னத்திற்குள் நீங்கள் காணப்படும் போது நீங்கள் பலவீனப்பட்டவர்களாய் அல்ல, கொழுத்த கன்றுகளாய் காணப்படுவீர்கள். கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களாய் நீங்கள் காணப்படுவதினால் உலகத்தில் செழித்திருப்பீர்கள். நான்காவது, நீங்கள் கர்த்தருடைய கரங்களின் கிரியைகளாக, வேலைப்பாடாகக் காணப்படுவீர்கள்.  உங்களைப் பிரமிக்கப்படத்தக்க அதிசயமாய் ஒரு நோக்கத்தோடும், மதிப்போடும் உருவாக்கினவர், உங்களைக் கனத்திற்குரிய பாத்திரமாய் வனைந்து, உங்களைப் பெரியவனாக்கிப் பெயர்பெறும் படிக்குச் செய்வார். 

கர்த்தர் இவ்வண்ணமாய் உங்களை ஆசீர்வதித்துக் கனப்படுத்தும் போது, உங்களைப் பார்க்கிறவர்கள், உங்களைக் கர்த்தருடைய ஜனமாய் பார்ப்பார்கள். நீங்கள் ஆசீர்வாதமாயிருக்கும் போது, இயேசுவின் நாமம் உங்கள் மூலம் மகிமைப்படும். நீங்கள் கனி கொடுக்கிற ஜீவியம் செய்யும் போது, பிதா உங்கள் மூலம் மகிமைப்படுவார். நீங்கள் மற்றவர்கள் நடுவில் கர்த்தருடைய மகிமையாயிருப்பீர்கள்!  

கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த 2026ம் ஆண்டு நீதிக்குரிய வாழ்வு வாழ்வதற்கும், பூமிக்குரிய நன்மைகளைப்  பெறும்போது நன்றியறிதல் உள்ளவர்களாய் காணப்படவும், கர்த்தருடைய தோட்டத்தின் செடியாய் காணப்படுவதற்கும், குயவனுடைய வனைகிற கரத்திற்குள் காணப்படுவதற்கும் உங்களை முழுமையாய் அர்ப்பணியுங்கள். அப்பொழுது, மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி கர்த்தர் உங்களை மேன்மையாய் ஆசீர்வதித்து நடத்துவார்! நீங்கள் நன்றாயிருப்பீர்கள்!

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae