பலிசெலுத்துங்கள் (Make a sacrifice)

சங்கீதம் 50:14,15 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/C0cvzMo87c4

பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணத்தில் ஐந்து முக்கியமான பலிகள் காணப்படுகின்றன. தகனபலி, போஜனபலி, சமாதானபலி, பாவநிவாரணபலி, குற்றநிவாரணபலி போன்ற பலிகள் காணப்படுகின்றன. நாம் ஆவிக்கேற்ற பலி செலுத்தவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதைத்தான் அப்போஸ்தலன் பேதுரு 1 பேதுரு 2:5-ல் கூறுகிறான், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் என்பதாக.

ஆவிக்கேற்ற பலிகள் என்பது நீதியின் பலி, ஜீவபலி, ஆனந்த பலி அதுபோல ஸ்தோத்திரபலிகளாய் காணப்படுகின்றன. ஸ்தோத்திரப்பலி என்பது வருடத்தின் கடைசிநாட்களில் மாத்திரம் செலுத்தலாம் என்று அநேக கிறிஸ்தவர்கள் அலட்சியமாக இருந்துவிடுவதுண்டு. ஒவ்வொரு நாளும் நாம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரபலிகளை ஏறெடுக்க வேண்டும். ஒன்றை அறிந்துகொள்ளுங்கள், குறிப்பாக வாலிபர்கள், வாலிப பெண்கள் அறிந்துகொள்ளவேண்டியது, துதிப்பலி மற்றும் ஸ்தோத்திரப்பலி என்பது தேவனுக்கு செலுத்தவேண்டிய பலியே தவிர, மனிதனுக்கு முன்பாக ஆட்டம் போடும் செயல்முறைகள் அல்ல என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த மாய வலையில், உலகம் காட்டும் வழியில் தேவனுக்கு பலிசெலுத்துகிறேன் என்ற எண்ணத்தில் மனிதனுக்கு முன்பாக ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது. இன்றைய வாலிபருக்கும், வளர்ந்துவரும் நம்முடைய பிள்ளைகளுக்கும் துதி ஸ்தோத்திரபலிகளை குறித்து சரியான படிப்பினையை நாம் கற்றுக்கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம். நாம் சரியாக பிள்ளைகளுக்கு இதை சொல்லிக்கொடுக்காவிட்டால், வஞ்சிக்கிற அநேக ஊழியர்கள் நம்முடைய பிள்ளைகளை தவறான வழியில் நடத்திவிடுவார்கள்.

மேற்குறிப்பிட்ட வசனத்தில் ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு பொருத்தனை செய்ய வேண்டும் என்று வசனம் கூறுகிறது. மனிதனுக்கு முன்பாக ஆட்டம் ஆடுபவர்கள் எப்படி பொருத்தனைகளை செலுத்துவார்கள். சங் 27:6 கூறுகிறது, நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்பதாக. ஆனந்த பலியிடுகிறவன் கர்த்தரை கீர்த்தனம்பண்ணுவான்; மனிதனுக்கு முன்பாக ஆடமாட்டான். சங் 116:17 கூறுகிறது, நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் என்பதாக. ஸ்தோத்திரபலியைச் செலுத்துகிறவன், மனிதனை பிரியப்படுத்தாமல், மனிதனை ஆடி பாடி பிரியப்படுத்தாமல், கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுவான்.

ஆகையால் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் (எபி 13:15). மனிதருக்கு அல்ல, மனிதன் முன்பாகவும் அல்ல, மனிதர்களை பிரியப்படுத்தவும் அல்ல. தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்திரபலிகளை ஏறெடுங்கள். இன்றிலிருந்து வேதம் காட்டுகிறபடி ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரபலிகளை, நன்றிப்பலிகளை செலுத்துங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org