குஷ்டரோகம் போல இருக்கும் பாவம் (Sin is like leprosy)

மாற்கு 1:40,41 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5Uby-_c3vyw

ஒருவேளை, காய்ச்சல் உள்ள ஒரு நபரை இயேசு தொடுகிறார் என்றால் அதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் ஒரு தொழுநோயாளியைச் சந்தித்துத் தொடுவார் என்பது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகிறது. தொழுநோயாளிகள் மற்றவர்கள் தீட்டுப்படாமல் இருக்க, “தீட்டு தீட்டு” என்று அவர்கள் வருவதை அனைவருக்கும் எச்சரிக்க வேண்டும் (லேவி. 13:45-46). சற்று சிந்தித்துப் பாருங்கள், ஒருவன் விபச்சாரம் போன்ற பயங்கரமான பாவம் செய்து, “நான் விபச்சாரக்காரன், நான் விபச்சாரக்காரன்” என்று எல்லாருக்கும் முன்பாகச் சொன்னால் எப்படி இருக்கும். அதுபோல, குடிகாரன் எல்லாருக்கும் முன்பாக, “நான் குடிகாரன், குடிகாரன்” என்று சொன்னால் எப்படி இருக்கும். இயேசு தன்னைக் குணப்படுத்த முடியும் என்பதை இந்தத் தொழுநோயாளி அறிந்திருந்தான், ஆனால் இயேசு தன்னைக் குணப்படுத்த விருப்பமுள்ளவரா என்பது அவனுக்குத் தெரியவில்லை. இன்று தொலைந்துபோன பாவிகளும் அதே தேவையற்ற கவலையைக் கொண்டுள்ளார்கள். “என்னுடைய விபச்சாரம், மதுபானம் போன்ற பாவங்களை நீக்க இயேசு விருப்பமுள்ளவராய் இருக்கிறாரா?” என்ற கேள்வி அநேகருடைய உள்ளங்களைப் பிடித்துக் கொள்கிறது. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று இயேசு விரும்புகிறார் என்று 2 பேதுரு 3:9 கூறுகிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார் என்று 1 தீமோத்தேயு 2:4 கூறுகிறது. ஆகையால் இயேசு உங்கள் பாவங்களை மன்னித்து, உங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

லேவியராகமம் 13-ல் விவரிக்கப்பட்டுள்ள தொழுநோய்க்கான சோதனைகளை படிக்கும்போது, இந்த நோய் எவ்வாறு பாவத்தின் சாயல் என்பதை காணலாம். பாவத்தைப் போலவே, தொழுநோய் தோலை விட ஆழமானது (லேவி. 13:3); அது பரவும் தன்மையுள்ளது (லேவி. 13:5-8); அது தீட்டுப்படுத்துகிறது மாத்திரமல்ல, தனிமைப்படுத்துகிறது (லேவி. 13:44-46) என்று லேவி 13 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

இயேசு அந்தக் குஷ்டரோகியின் மீது மனதுருகி அவனைக் குணப்படுத்தினார். இயேசு அதைத் தம்முடைய தொடுதலாலும், தம்முடைய வார்த்தையாலும் செய்தார். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த குஷ்டரோகி நீண்ட காலத்திற்குப் பிறகு உணர்ந்த முதல் அன்பான தொடுதல் இதுவாகத்தான் இருக்கும். பாருங்கள் ஆச்சரியத்தை! காய்ச்சலைப் போலவே, தொழுநோயும் உடனடியாக நீங்கிவிட்டது! ஆகையால் எப்படிப்பட்ட பாவத்தையும் உடனடியாக மன்னிக்க இயேசு விருப்பமுடையவராய் இருக்கிறார்.

இயேசு அந்த அற்புதத்தைப் பெற்ற குஷ்டரோகியிடம், இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். அவர் ஆசாரியர்களிடம் சென்று லேவியராகமம் 14 இல் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இதனால் அவன் சுத்தப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் பாளையத்திற்குள்ளாக வரலாம் என்று சொன்னார். ஆனால், அந்த மனிதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. இயேசு இந்த மனிதனை யாரிடமும் சொல்லாமல் இருக்கும்படி கூறினார், ஆனால் அவன் எல்லோரிடமும் கூறிவிட்டான். எல்லோரிடமும் சொல்லும்படி இன்று இயேசு நமக்குக் கட்டளையிடுகிறார், ஆனால் நாமோ அமைதியாக இருக்கிறோம்!

இயேசு செய்த அற்புதங்களை, ஆச்சரியமாய் அவர் நடத்தின விதங்களை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான் சுவிசேஷம். இது நம்மேல் விழுந்த கடமை என்பதை அறிந்து சுவிசேஷம் சொல்ல அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org