தகப்பன் கற்றுக்கொடுத்தவை (What my father taught me)

நீதி 4:3,4. நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ljo12NE54t4

சாலொமோன் ராஜாவானபோது, ஒரு இரவு ஆண்டவர் அவனிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, “ஆண்டவரே, எனக்கு ஞானத்தைத் தாரும்” என்று கேட்டான். அந்த ஜெபத்தை ஜெபிக்க சாலொமோனுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? அது சாலொமோனின் சொந்த யோசனை அல்ல. அதை சாலொமோனுக்குக் கற்றுக்கொடுத்தது, அவன் தகப்பன் தாவீதுதான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதைத்தான் சாலொமோன் இந்த அதிகாரத்தின் முதல் வசனங்களில் சொல்லுகிறான். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும் என்றெல்லாம் ஞானத்தைக் குறித்து சாலொமோன் முதலாவது கற்றுக்கொண்டது அவன் தகப்பனாகிய தாவீதிடமிருந்துதான்.

மறுவார்த்தையில் சொல்லப்போனால், சாலொமோன் எப்படி ஞானியானானென்றால் அவனுடைய தந்தை அவனுக்குக் கற்பித்ததுதான் காரணம். நம் குழந்தைகளுக்கு நாமும் அப்படிப்பட்ட தந்தையராக இருக்க முடியும் என்று நினைத்துப் பாருங்கள். தாவீது தனது மற்ற மகன்களுக்கு சொல்லிக்கொடுக்காததை சாலொமோனுக்கு சொல்லிக்கொடுத்தான்.

இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த இரண்டு பேரில் ஒருவன் அதிக திறமைசாலி, நன்றாகப் படித்தவன், அனுபவம் மிக்கவன். மற்றவன் அனுபவம் குறைந்தவன், நன்றாகப் படிக்காதவன். இப்பொழுது உங்களுக்கு ஒரு வீட்டைக் கட்ட இந்த இரண்டு பேரில் யாரைத் தெரிவு செய்வீர்கள்? எல்லாரும் நன்றாக வேலை தெரிந்த, நன்றாகப் படித்த ஒருவனைத்தான் தெரிந்தெடுப்போம். இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களில் சாலொமோனுக்கு ஒத்த ஞானி இதுவரைக்கும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை. அப்படியென்றால் தேவாலயத்தைக் கட்டும் திட்டத்தை மனித பிரகாரமாகப் பார்த்தால், ஆண்டவர் அந்த வேலையை சாலொமோன் ஞானிக்குத்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் ஆண்டவர் அந்த திட்டத்தை சாலொமோனுக்குக் கொடுக்கவில்லை; மாறாக, அவன் தகப்பனாகிய தாவீதுக்கு அந்த திட்டத்தைக் கொடுத்தார். காரணம் என்னவென்றால், தாவீது ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்றவன். இது மிகவும் சுவாரசியமுள்ள தேவனுடைய செயலாகக் காணப்படுகிறது. தேவன் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தும்போது, அதை அவர் புத்திசாலியான மனிதனுக்கு அல்ல, மாறாகத் தனது சொந்த இதயத்திற்குப் பிடித்த மனிதனுக்குக் கொடுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே தாவீது கட்டிடக் கலைஞர் அதாவது Architect என்றும், சாலொமோன் ஒரு வகையான ஒப்பந்தக்காரர் அதாவது Contractor என்றும் சொல்லலாம். சாலொமோன் தேவனிடம் கேட்ட ஞானத்தைத் தேடும்படி தாவீதுதான் அவருக்கு அறிவுறுத்தினார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆகையால் ஞானத்தைக் குறித்ததான அறிவை தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தாவீது பெற்றுக்கொண்டான். அந்த ஞானத்தை தேவனிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் பிள்ளையாகிய சாலொமோனுக்குக் கற்றுக்கொடுத்தான். இன்று நாமும் நம்முடைய சந்ததிக்கு இந்த ஞானத்தைக் குறித்ததான வெளிச்சத்தைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறோம். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். பணம், பேர், புகழ், செல்வாக்கு, நிலம், வீடு போன்றவற்றை சம்பாதிப்பதைக் காட்டிலும் ஞானத்தைச் சம்பாதியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org