மாயையைக் கைவிடுங்கள் அல்லது கிருபையை இழந்துவிடுவீர்கள் (Forsake vanities or forfeit grace)

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் (யோனா 2:8)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xs5JKuXxi9s

மாயையைப் பின்பற்றி கிருபையை இழந்து போன கர்த்தருடைய ஜனங்கள் அனேகர் உண்டு. தேவனைத் தவிர்த்து, தங்களுடைய ஆஸ்தி, அந்தஸ்து, செல்வம், பிரபலம் போன்ற மாயையான காரியங்களின் மேல் நம்பிக்கையை வைக்கிறவர்கள் தேவன் அவர்களுக்கு என்று வைத்திருக்கிற மேலான கிருபையை போக்கடிக்கிறவர்களாய்  காணப்படுவார்கள். தேவனுடைய இடத்தில் வேறு எந்தக் காரியங்களை வைத்து நீங்கள் அவைகளை முக்கியப்படுத்தினால் அவைகள் விக்கிரக ஆராதனையாகி, மாயைக்கு ஒப்பாய் மாறிவிடுகிறது.  ஆகையால் உலக காரியங்களைப் பற்றிக் கொண்டு தேவனுடைய கிருபையை இழந்துவிடாதிருங்கள்.

யோனா, தேவனிடமிருந்து விலகி ஓடி, கடல் கொந்தளிப்புக்குக்  காரணமாகி, கடைசியில் மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் காணப்பட்டு, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி, கரை சேர்ந்தவன். அதைக் குறித்து அவன் கூறும் போது, தண்ணீர்கள் பிராண பரியந்தம் என்னை நெருக்கினது, ஆழி என்னைச் சூழ்ந்தது, கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது, பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன், பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது, என் ஆத்துமா என்னில் தோய்ந்துபோகையில்  கர்த்தரை நினைத்தேன், அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது என்று கூறினான். கர்த்தர் ஒருவரே இரட்சிக்கிறவர் என்பதை உணர்ந்து, தன்னுடைய சொந்த வழிகளில் நம்பிக்கை வைப்பது மாயையான விக்கிரக ஆராதனை என்பதைப் புரிந்து கொண்டான். ஆகையால்தான்  தாவீதும், வீண் மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன் என்று சங். 31:6ல் கூறினான். 

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் மாயைப் பின்பற்றுகிறவர்களாய் காணப்பட்டால், உங்கள் மேல் கர்த்தர் கொண்ட கிருபையை இழந்து விடுவீர்கள். கண்கள் இச்சித்ததை ஒன்றும் விட்டு வைக்காத  சாலொமோன் ஞானி, பிரசங்கி புத்தகத்தை எழுதும் போது, மாயை என்ற வார்த்தையை 40 முறைக்கு மேல் எழுதுகிறான். அதுபோல  சூரியனுக்குக் கீழே என்ற வார்த்தையானது சுமார் 28 முறை வருகிறது.  அதாவது சூரியனுக்குக் கீழே காணப்படுகிற அனேகக் காரியங்களை மாயைக்கு ஒப்பாய் காணப்படுகிறது என்றான். மனுஷனுடைய ஞானம், புத்தி, யுக்தி, பிரயாசம், ஐசுவரியம், செல்வம், பணம் எல்லாம் மாயை என்று எழுதினான். இவை எல்லாம் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இப்படிப்பட்டவற்றின் மேல் நோக்கமாயிருந்து, காலத்தையும் நேரத்தையும் விரயமாக்கி, தேவனுடைய சமூகத்தை இழந்து, தேவனை விட்டு விலகுகிறவர்களாய் ஒருநாளும் காணப்படாதிருங்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் விருதாவாக்குகிறவர்களுடைய  கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். உங்களைத் தெரிந்தெடுத்து, இரட்சித்து, ஆசீர்வதித்து, உயர்த்தி வைத்திருக்கிற தேவனுடைய கிருபைக்குப்  பாத்திரவான்களாய் வாழுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது கிருபையின் மேல் கிருபை பெற்று உயர்ந்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae