மனித உதவி (Human help)

அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனாகிய ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம், நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம், கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான் (எண். 10:29).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/G8_MbFkSa0w

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட ஐம்பதாவது நாள் சீனா மலையண்டை வந்து சேர்ந்தார்கள். அங்கே சுமார் ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயின் மூலம்,   பத்துக் கட்டளைகளையும், ஆசரிப்புக் கூடாரத்து மாதிரியையும், பிரமாணங்களையும், பலிகள் ஆராதனை முறைமைகளையும்  இஸ்ரவேல் சபைக்குக் கொடுத்தார். அங்கிருந்து அவர்கள் கானானை நோக்கிப் பிரயாணப்படும் போது, மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்ற எத்திரோவின் குமாரனான ஓபாபை நோக்கி, எங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம் போகிறோம், நீயும் எங்களோடே கூட வா, உனக்கு நன்மைசெய்வோம், கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றும், வனாந்தரத்திலே நாங்கள்  பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிற படியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய் என்றும் கூறினான்.  துவக்கத்தில் வர மறுத்த அவன் பின்பு அவர்களோடு பிரயாணம் பண்ணுகிறவனாய் காணப்பட்டான். நியாதிபதிகள் 1:16ஐ வாசிக்கும் போது, மோசேயின் மாமனாகிய கேனானின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதுபோல,  கேனியனான ஏபேர் என்பவன்  மோசேயின் மாமனாகிய ஒபாவின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான் என்றும் நியாதிபதிகள் 4:11 கூறுகிறது. 

மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் முன்பாகக் கர்த்தர் அக்கினி ஸ்தம்பமாய், மேக ஸ்தம்பமாய் சென்றார். கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியும் அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டுப்படிக்கு அவர்கள்முன் சென்றது என்று எண். 10:33 கூறுகிறது. அவ்வாறு கர்த்தரே உடன் செல்லும் போதும், மோசே மனித உதவியையும்  ஓபாபின் மூலம் நாடுகிறதைக் குறித்துப் பார்க்கமுடிகிறது. பின்னாட்களில்   மீதியானிய  வம்சத்தைச் சேர்ந்த கேனியனான ஏபேரின் மனைவி யாகேலும் சிசெராவைக் கொன்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்தாள், ஆகையால் அவள் ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவளாய் மாறினாள். நாளுக்குநாள்  தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள் என்றும் வேதம் கூறுகிறது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் ஆராதிக்கிற கர்த்தர் நமக்கு உதவி செய்கிற எபனேசராய் காணப்படுகிறார். இயேசுவிடம்  உதவிக் கேட்ட அத்தனை பேருக்கும் அவர் உதவி செய்தார். தானியேலுக்கு உதவி செய்ய மிகாவேல் தூதனை அனுப்பினார். சில வேளைகளில் மனிதர்களின் உதவியும் நமக்கு கிடைக்குப்படிக்குச் செய்கிறவர் கர்த்தர். கர்த்தரும் மனிதர்கள் வடிவில் வந்து நமக்கு உதவி செய்யக் கூடும். ஆகையால் எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, கர்த்தர் என்னோடிருக்கிறார், நான் என்னுடைய காரியங்களை   சுயமாய் பார்த்துக் கொள்ளுவேன் என்று கூறாதிருங்கள். சிலர் சபை ஐக்கியம், விசுவாசச் சகோதரர்களின் நட்புகளைக் கூட அற்பமாய் கருதி, அவைகளை ஒதுக்குகிறவர்களாய் காணப்படுவார்கள்.  இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான் என்று வேதம் கூறுகிறது. சிலவேளைகளில் சபை ஐக்கியத்தை அசட்டை செய்கிறவர்கள், கடினமான சூழ்நிலைகளில் தனியாய் நின்று உதவி செய்ய யாருமில்லை என்று  புலம்புவதைக் கூட பார்த்திருப்பீர்கள். ஆகையால் மனித உதவிகளும் நமக்கு தேவை என்ற மனப்பான்மையோடு, அதைப் பெற்றுக் கொள்ளுவதற்குத்  தகுதியான நபர்களாய் வாழக் கர்த்தர் உதவி செய்யட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae