எண்ணா 12:7 என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/E3YGNoqM4OM
நம்முடைய வாழ்விலும், வேலை ஸ்தலத்திலும், ஊழியத்திலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். சாலொமோனின் தகப்பன் தாவீது சொல்லுகிறான், “கர்த்தாவே, இரட்சியும்; பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்” (சங் 12:1) என்பதாக. இன்றும் குடும்ப உறவிலும், ஊழியப் பாதையிலும் உண்மையாய் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. தாவீதின் மகன் சாலொமோனும் சொல்லுகிறான், “மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?” (நீதி 20:6) என்பதாக.
மோசே உண்மையுள்ளவன் என்று தேவனே சாட்சி பகர்ந்தார் என்றால், அது எவ்வளவு பெரிய காரியமாய் இருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். மிரியாமும் ஆரோனும் சேர்ந்து மோசேக்கு விரோதமாய்ப் பேசினார்கள். அப்பொழுது மோசே அவர்களுக்கு எதிர்வினையாகப் பேசவில்லை, மாறாக, தேவன் மோசேயின் பட்சத்திலிருந்து ஆரோன் மற்றும் மிரியாமிற்கு விரோதமாய்ப் பேசினார். அவர்கள் இருவரும் மோசேக்கு விரோதமாய்ப் பேசியதை கர்த்தர் கேட்டார் என்று வசனம் கூறுகிறது. இன்றும் யாரெல்லாம் கர்த்தருக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கு விரோதமாகப் பேசுகிறார்களோ, அதை கர்த்தர் பார்த்து வேடிக்கை பார்த்துக்கொண்டும், தன்னுடைய கரத்தை கட்டிக்கொண்டும் இருக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்காக அவர் வைராக்கியம் பாராட்டுகிறவர்.
ஆண்டவர் சொன்னார், “நான் தீர்க்கதரிசிகளோடு பேசவேண்டுமானால், அவர்களோடு சொப்பனம், தரிசனத்தின் மூலம் பேசுவேன். ஆனால் மோசே அப்படிப்பட்டவன் அல்ல. அவன் தீர்க்கதரிசியை காட்டிலும் மேலானவன். அவன் என் தாசன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்” என்று சொன்னார். ஏன் மோசேக்கு இவ்வளவு பெரிய சிலாக்கியம்? ஏன் ஆண்டவர் மோசேயிடம் நேரடியாகவும், முகமுகமாகவும் பேசினார்? காரணம், “என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” என்று ஆண்டவரிடம் சாட்சி பெற்றான். அவன் உண்மையுள்ள பாத்திரமாக ஜீவித்தான். புதிய ஏற்பாட்டிலும் அவன் உண்மையுள்ளவன் என்று மீண்டும் ஆவியானவர் எழுதிவைக்க மறக்கவில்லை. எபி 3:5 கூறுகிறது, “சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்” என்பதாக. இந்த வார்த்தைகளையெல்லாம் பாருங்கள், மோசே உண்மையுள்ளவன், எங்கும் உண்மையுள்ளவன், சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக அவன் உண்மையுள்ளவனாக இருந்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவன் வெளிப்புறமாக அல்ல; அங்கும் இங்கும் என்றல்ல, எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தான். இப்போதைக்கு மாத்திரமல்ல; எதிர்கால நோக்கிலும் அவன் உண்மையுள்ளவனாய் இருந்தான். அவ்வளவாய் அவன் தேவனோடு நெருக்கமாய் இருந்தான். மோசே எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, நாமும் எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் நம் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம். அப்பொழுது ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்லுவார், “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத் 25:21) என்பதாக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

