கர்த்தர் உன்னைக் காண்கிறவர் (The God Who sees you)

அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள் (ஆதி. 16:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yhNSWWQjna4

நாம் ஆராதிக்கிற தேவன் எங்கும் நிறைந்திருக்கிறவர், எல்லாவற்றையும் அறிந்தவர். அவர் உங்கள் ஒவ்வொருவருடைய உபத்திரவங்களையும், பாடுகளையும், கஷ்டங்களையும் காண்கிறார். ஆகையால் ஒருநாளும் ஆண்டவர் என்னுடைய சூழ்நிலைகளை அறிந்திருக்கிறாரா என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பவேண்டாம். பூமியெங்கும் உலாவுகிற கர்த்தருடைய கண்கள் உங்களைக் காண்கிறது.  இஸ்ரவேல்  ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் ஆளோட்டிகள் அவர்களிடம் கடுமையாய் வேலை வாங்கினார்கள். அதிக வேலையின் நிமித்தம் அவர்கள் வாழ்க்கையே கசப்பாகிவிட்டது. அதைக் கர்த்தருடைய கண்கள் கண்டது, எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன், அவர்கள் கூக்குரல்  என் சந்நிதியில் வந்து எட்டினது, ஆகையால் அவர்களை விடுவிக்கும் படிக்கு இறங்கினேன் என்று கூறினார். அதுபோல உங்கள் உபத்திரவங்களையும் கர்த்தர் பார்க்கவே பார்த்து உங்களுக்கு விடுதலையைத் தருவது நிச்சயம்.

ஆகார், ஆபிராமின் மனைவியாகிய சாராயின் அடிமைப் பெண். ஆபிராம், சாராய் தம்பதிக்கு அனேக ஆண்டுகள் பிள்ளைகள் இல்லாமல் இருந்தது, ஆகையால் அந்நாட்களின் வழக்கத்தின்படி,  சாராய்  தேவனிடம் விசாரியாதபடிக்கு தன் குடும்பம்  கட்டப்படுவதற்கு  ஆகாரை ஆபிரகாமிற்கு  மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அது அந்நாட்களின் வழக்கமே ஒழிய  இந்நாட்களுக்குப்  பொருந்துவதில்லை. ஆபிராமும் ஆண்டவரிடம் விசாரியாதபடிக்கு ஆகாரை மறுமனையாட்டிக் கொண்டான். அது ஒரு தவறான முடிவாய் போய்விட்டது. ஆகார் கர்ப்பவதியானபோது தன்  எஜமாட்டியாகிய  சாராயை அற்பமாகக் கருதினாள். ஆகையால்,  சாராய் அவளைக் கடினமாக நடத்த, ஆகார் சாராயை விட்டு ஓடிப் போனாள். அவள் வனாந்தரத்தில்  காணப்பட்ட வேளையில்,   கர்த்தருடைய தூதனானவர் அவளைக் கண்டான். பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய தூதன் என்று எழுதப்பட்டிருப்பது இயேசுவை  குறிக்கிறதாய் கூட காணப்படுகிறது. ஆகையால்தான்  ஆகார் தன்னோடே பேசின தூதனை, பின்பு கர்த்தர் என்றும், நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்றும் குறிப்பிடுவதைப்  பார்க்கமுடிகிறது. கர்த்தருக்கு எல் ரோயி என்னைக் காண்கிறவர் என்ற பெயரையும் அவள் சூட்டினாள். வேதத்தில் முதன்முதலாய் ஆண்டவருக்கு பெயரைச் சூட்டினவள் புறஜாதி ஸ்திரீயாகிய ஆகாராய் காணப்படுகிறாள்

கர்த்தருடைய பிள்ளைகளே, ஆகாரின் அங்கலாய்ப்பைக் கண்ட கர்த்தர், உங்கள் அங்கலாய்ப்புகளையும், பாடுகளையும் காண்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையிலும் எல் ரோயியாக வெளிப்பட்டு அற்புதங்கள் செய்து உங்களை மகிழப்பண்ணுவார். நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததைப் போல, சூலமித்தி கர்த்தருடைய கண்களில் கடாட்சம் பெற்றதைப் போல, உங்களுக்கும் ஆண்டவருடைய கண்களிலிருந்து இரக்கம் உண்டாகும். உங்கள் பாடுகளுக்கு ஒரு முடிவைக் கர்த்தர் நிச்சயமாய் கட்டளையிடுவார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள், உற்சாக மனதோடு கர்த்தரை சேவியுங்கள்.


கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae