பணவிஷயத்தில் ஜாமீன் போடவேண்டாம் (Bail should not be given in financial matters)

நீதி 6:1,2 என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ERiy37Uc9i4

மற்றவர்களுக்கு பணக்காரியங்களில் ஜாமீன் போடக்கூடாது என்று நீதிமொழிகள் 6:1-5 வசனங்கள் கூறுகிறது. அதாவது வேறொருவரின் கடனை அடைக்க ஒப்புக்கொள்வது. மற்றவரின் கடனைத் தீர்க்க உத்தரவாதமாக இருக்கும் ஒருவர், “இந்த நபர் பணம் செலுத்தவில்லை என்றால், நான் பணம் செலுத்துவேன்” என்று கூறுவதுதான் ஜாமீன். அது மிகவும் அன்பான செயலாகத் தெரியவில்லையா என்று சிலர் எண்ணுவார்கள். இது அன்பைப் பற்றிய தெய்வீக புரிதலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆண்டவர் கூறுகிறார், நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், அதாவது, “என் மகனே, நீ உன் அண்டை வீட்டாருக்கு ஜாமீனாக மாறியிருந்தால் அல்லது ஒரு அந்நியருக்கு கைகுலுக்கலை அல்லது உறுதிமொழி கொடுத்திருந்தால், அதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அது முட்டாள்தனமான செயல் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், நண்பர்கள் உங்களிடம் பல நல்ல விஷயங்களைச் சொன்னார்கள், அவர்கள் வாயிலிருந்து தேன் சொட்டியது, அதனால் நீங்கள் அதற்கு ஒப்புக்கொண்டீர்கள். பிறகு வீடு திரும்பிய பிறகு, நீங்கள் பிடிபட்டதை உணர்ந்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய வார்த்தை போய் அந்த வாக்குறுதியைத் திரும்பப் பெறச் சொல்கிறது. திரும்பிச் சென்று அவனிடம், “மன்னிக்கவும், தயவுசெய்து என்னை மன்னியுங்கள். என்னால் அதைச் செய்ய முடியாது” என்று சொல்லுங்கள். ஓ, நான் என் வாக்குறுதியை கொடுத்துவிட்டேன். இப்போது நான் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக இருக்க வேண்டாம். இப்போது உங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஞானம் இருக்கிறது. திரும்பிச் செல்லுங்கள். காரணம், இப்போது அந்த நபருக்குக் கட்டப்பட்டிருக்கிறீர்கள், அவர் உங்கள் மீது அதிகாரம் வைத்திருக்கிறார். நாம் வேறொரு மனிதனின் அதிகாரத்தின் கீழ் இருப்பதை தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை. “நான் என் வார்த்தையைத் திரும்பப் பெறும் ஒரு நபர் என்று அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்” என்று உங்கள் கண்ணியத்தின் மீது நிற்காதிருங்கள். அவன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதைப் பொருட்படுத்தாதேயுங்கள்.

ஒரு உதாரணத்திற்கு, உங்கள் நண்பரிடம் பேசிவிட்டு இரவு 10:30 மணிக்கு திரும்பி வந்து, நாளைக்குக் காலை போகிறேன் என்று சொல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சாலொமோன் ஞானி சொல்லுகிறான், “வேண்டாம்! உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்” என்று கூறுகிறார். உங்கள் கண் இமைகளுக்கு தூக்கம் கொடுக்காதீர்கள். இப்போதே போங்கள்! உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளுங்கள். வேறொருவரின் கடன்களை அடைப்பது அன்பின் அடையாளம் அல்ல. நிறைய முட்டாள்தனமான அன்பு, குறிப்பாக பண விஷயத்தில் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளுங்கள். வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். அதாவது இது அவசரம், இது ஒரு Emergency. நீங்கள் ஒரு வலையில் அகப்பட்டீர்கள், அங்கே சிக்கிக்கொள்ளாதீர்கள். உடனடியாக அதிலிருந்து வெளியேறுங்கள். ஒருவரை நிதி ரீதியாக ஆதரிக்க அல்லது வேறொருவரின் கடன்களை அடைக்க நீங்கள் உத்தரவாதம் அளித்திருந்தால் ஞானி கொடுக்கும் ஒரு அறிவுரை என்னவென்றால், அதிலிருந்து வெளியேறுங்கள். இதுவே ஞானம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org