கபாலஸ்தலம், கொல்கொதா, கல்வாரி (Kabalsthalam, Golgotha, Calvary)

மாற்கு 15:22,23 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jGqCeLQyi8I

கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா மலைக்கு ஒரு சில மொழிபெயர்ப்பில் Calvary அதாவது கல்வாரியா என்று எழுதப்பட்டுள்ளது. இந்த மலையை கல்வாரி மலை என்று அழைப்பார்கள். ஏன் இந்த மலைக்கு மாத்திரம் இத்தனை பெயர்கள்? கொல்கொதா என்பது அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது. கல்வாரியா என்பது இலத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. கபாலஸ்தலம் என்பது தமிழில் மண்டை ஓடு என்பதாய் எழுதப்பட்டுள்ளது.

கொல்கொதா என்பது எருசலேம் நகருக்கு வெளியே, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தைக் குறிக்கும் ஒரு இடம். இது ‘மண்டை ஓட்டு இடம்’ அதாவது ஆங்கிலத்தில் Place of the Skull என்று பொருள்படும்.

சிந்தனைகள் உண்டாகும் மண்டைப்பகுதியில் அதாவது சிரசில் இயேசுவுக்கு இந்த கொல்கொதா மலையில் முள்முடி சூட்டினார்கள். காரணம், நம்முடைய சிந்தை வாழ்வில் இயேசுவின் சிந்தையை நாம் தரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சிந்தனைகளில் பரிசுத்தம் காணப்பட வேண்டும் என்பதற்காகவும், இயேசு கொல்கொதா என்னும் மலையில், கல்வாரி மலையில் அடிக்கப்பட்டார். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டிய பிறகு அவர் சிரசில், சிந்தனைகள் உண்டாகும் தலையில் கோலினால் அடித்தார்கள். இயேசுவை சிரசில் அடிக்கும்போது சுமார் 600-க்கும் அதிகமான போர்ச்சேவகர்கள் அவரைச் சூழ்ந்து நின்று அடித்தார்கள் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பொதுவாக யாராவது நம்முடைய தலையில் அடிக்கும்போது, நம்முடைய தலையைப் பாதுகாத்துக்கொள்ள நம்முடைய கரங்களைத் தலைக்கு மேலாகக் கொண்டுவந்து தலையில் அடிபடாமல் தடுக்க முயற்சி செய்வோம். ஆனால் இயேசுவின் தலையில் போர்ச்சேவகர்கள் அடிக்கும்போது அவருடைய கரங்கள் கட்டப்பட்டிருந்தது. அவரால் தன்னுடைய கரங்களைக் கொண்டு தடுக்க முடியாத சூழ்நிலையில் தான் இருந்தார். இப்படியாக அவர் தன்னுடைய முள்முடி சூட்டப்பட்ட தலையில், அடிக்கும்படி கொல்கொதா என்னும் மலையில் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இயேசுவின் இந்த கல்வாரி பாதைக்கு அடையாளமாக ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள் (மாற்கு 14:3). அது சிலுவைப் பாடுகளை இயேசு சகிக்க பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் தேவை என்பதற்கு அடையாளமாகவும் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் அபிஷேகித்தால்தான் இயேசு கொல்கொதா மலையில் படப்போகும் பாடுகளை சகிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக அந்த ஸ்த்ரீ இயேசுவின் சிரசில் வெள்ளைக்கல் பரணியை ஊற்றினாள். அதைத்தான் எபிரெயர் நிருபத்தை எழுதியவர் எபி 9:14 ஆம் வசனத்தில் சொல்லுகிறார், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக இயேசு தன்னைத்தானே ஒப்புக்கொடுத்தார் என்பதாக.

இந்த மண்டை ஓடு என்று அழைக்கப்படும் கொல்கொதா மலையில், இயேசுவின் சிந்தை உண்டாகும் தலையில் முள்முடி சூட்டப்பட்டது. காரணம், நம்முடைய சிந்தை வாழ்வு தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக. ஆகையால் உங்கள் சிந்தனைகளில் பாவங்கள் குடிகொள்ள அனுமதிக்காமல், கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org